வயலின் வனிதா! (30)
இதுவரை: இசை கல்லூரியிலிருந்து தனக்கு வந்த கடிதத்தை யாருக்கும் தெரியாமல் பிரித்து படித்துக் கொண்டிருந்தாள் வனிதா. அப்போது லீலா அறைக்குள் வந்தாள். இனி-'எனக்கு அப்பவே தெரியும். இரண்டு கடிதத்தை உன்னிடம் போஸ்ட்மேன் கொடுத்ததைப் பார்த்தேன். நீ ஒரு கடிதம்தான் என்று புளுகினாயே... கொண்டா அதை, என்ன கடிதம் அது?''செயலற்றுப் போய் நின்றிருந்த வனிதாவின் கையிலிருந்து அந்தக் கடிதத்தை வெடுக்கென்று பறித்துக் கொண்டாள் லீலா. கடிதம் பறி போனதும் வனிதா குரல் கொடுத்தாள்.''அது எனக்கு வந்த கடிதம். அதை நீ பிடுங்காதே... படிக்காதே!''காமாட்சியின் குரல் கேட்டது கூடத்திலிருந்து.''என்ன விவகாரம் அங்கே? லீலா... என்ன விஷயம்?''''உன் சகோதரர் பெண் வனிதா அவர்களுக்கு இசைக் கல்லூரியில் சேர்ந்து பயில அழைப்பு வந்திருக்கிறது. படிக்கிறேன் கேள்...!'' என்று நீட்டி முழக்கினாள் லீலா.காமாட்சியின் முகம் சிவந்தது. விழிகளில் அனல் பறந்தது. மகளின் கையிலிருந்த கடிதத்தை பிடுங்கித் தானே படித்தாள்.'எது நடக்கக் கூடாது என்று பயந்தாளோ, அது நடந்து விட்டது!' கூனிக் குறுகிப் போய் நடுங்கியபடி தலை குனிந்து கண்களில் கண்ணீர் தளும்ப நின்றாள் வனிதா.''அப்பாவையும், அம்மாவையும் ஒரே சமயத்திலே உருட்டிட்டு அனாதையா நின்ன உன்னை, பம்பாய்க்கு கூட்டி வந்து, பசிக்குச் சோறும், படுக்க இடமும் கொடுத்து, படிக்கவும் வைத்தேன் பாரு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்!'' என்று சீறினாள் காமாட்சி.''நீ ஒரு பைத்தியக்காரி!'' என்றாள் தன் அம்மாவைப் பார்த்து லீலா.''மாட்சிமை பொருந்திய வனிதா அவர் களையும், வயலினையும் பிரிக்கவே முடியாது தெரியுமா? நீ என்ன அவளை காப்பாற்றி விட்டாய்? அவளைத் தாங்க ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். இசைக் கல்லூரியே அவளை இருகரம் நீட்டி அழைக்கிறது. இத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக் கிறாளே... உன்னிடம் ஒரு வார்த்தை கூறினாளா? உன் தயவை எதிர்பார்த்தாளா... அத்தையின் தயவு அவளுக்கு அனாவசியம், புரிஞ்சுதா?'' எகத்தாளமாக காமாட்சியின் ஆத்திரத்தை விசிறி விட்டாள் லீலா.''வயலினையே தொடக்கூடாதுன்னு நான் சொல்லி இருக்க, நீ இசைக் கல்லூரியிலே சேர்ந்து வயலின் கத்துக்க விண்ணப்பம் போட்டிருக்கே, என்ன துணிச்சலிருக்கணும் உனக்கு?'' குமுறினாள் காமாட்சி.குனிந்த தலையை சட்டென்று நிமிர்த்தினாள் வனிதா. கண்ணீரில் நனைந்த விழிகளில் ஒரு பளபளப்பு. முகத்தில் ஒரு இறுக்கம் பரவியது.''என்னால் வயலின் வாசிக்காமல் இருக்க முடியாது அத்தே. நான் வயலின் கற்றுக் கொள்ளுவதைத் தடுக்க யாராலும் முடியாது!'' என்றாள் உறுதியான குரலில். 'அந்தத் துணிவு, உறுதி அவளிடம் திடீரென்று எப்படி ஏற்பட்டது? காமாட்சியும், லீலாவும் ஒருகணம் அதிர்ந்து போயினர்.சட்டென்று தன் அதிர்ச்சியை உதறிவிட்டுக் கூறினாள் காமாட்சி.''அப்படியா? அதையும் பார்த்து விடலாம். நீ இசைக் கல்லூரியில் சேரப் போவதில்லை. இந்த இண்டர்வியூவுக்கு நீ போகப் போவது மில்லை. உன்னைப் போக விடமாட்டேன்!'' வீராப்புடன் தன் அறைக்குப் போனாள் காமாட்சி.''அத்தை... ப்ளீஸ்... அத்தை! இந்த டெஸ்ட்டுக்கு நான் போயாகணும். என்னைப் போக விடுங்க அத்தை... உங்களை கெஞ்சிக் கேட்கிறேன் அத்தை!'' பரிதாபமாகக் காமாட்சியின் பின்னால் ஓடினாள் வனிதா.''லீலா... அந்தக் கழுதையை அவள் அறையில் தள்ளிக் கதவை சாத்திப் பூட்டு...'' என்று தன் மகளுக்கு ஆணையிட்டவள், டெலிபோனை சுழற்றினாள். வனிதாவிற்கு வந்திருந்த கடிதத்தில் ஆடிஷன் டெஸ்ட்டுக்கு மறுநாள் வரும்படி குறிப்பிட்டிருந்தனர்.லீலாவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வனிதா செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.''அத்தே... அத்தே! வேண்டாம்...'' கதறினாள் வனிதா.ஆனால், காமாட்சி அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. டெலிபோனில் பேசினாள்.''ஹலோ! மியூசிக் காலேஜா...? நாளைக்கு நடக்க உள்ள டெஸ்ட்டுக்கு வனிதா வர முடியாது. ஆமா, அவ நம்பர்தான். அவளுக்கு சிவியர் டைபாய்டு... படுக்கையிலிருந்து நகரக் கூடாதுன்னுட்டார் டாக்டர்!'' என்றாள்.''ஐயோ, அத்தை... இது அநியாயம்... இப்படிப் பொய் சொல்லாதீங்க... கடவுளே!'' கதறித் திமிறிய வனிதாவின் கைகளை முறுக்கி, தரதரவென்று இழுத்துப் போய் அவள் அறைக்குள் தள்ளி, கதவை சாத்தி தாழிட்டாள் லீலா.போன் பேசி முடித்த காமாட்சி வெறுப் போடு மூடிய கதவை, வெற்றி மிடுக்கோடு பார்த்தாள். சிரித்துக் கொண்டு நிற்கும் மகள் லீலாவிடம், ''அறையைப் பூட்டி சாவியை கொண்டு வா!'' என்றாள்.வனிதாவின் அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. பூட்டிய அறையினுள் வனிதா பரிதாபமாக அழுது கொண்டிருந்தாள்.''எத்தகைய வாய்ப்பு? இப்படி அநியாயமாக நாசமாகி விட்டதே!'' அழுது, அழுது கண்ணீர் வற்றியது.வனிதா தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஜன்னல் கட்டையில் வைக்கப் பட்டிருந்த உணவு காய்ந்து கொண்டிருந்தது. அவள் அதைத் தொடவே இல்லை. இரவு முழுவதும் தனக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து, நினைத்து மறுகியவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அந்த அறையிலிருந்து எப்படியும் தப்பி வெளியேறி, டெஸ்டில் கலந்து கொள்ளுவது என்ற முடிவுக்கு வந்தாள் வனிதா. அந்தச் சிறிய அறையின் முகட்டை ஒட்டி ஒரு வெண்டிலேட்டர் இருந்தது. அதில் குறுக்குக் கம்பிகளைக் காணோம். பொருத்த வில்லையா அல்லது பழுதடைந்து அகற்றப் பட்டதா? தெரியவில்லை. அதையே பார்த்துக் கொண்டிருந்த வனிதாவின் உள்ளத்தில் ஒரு திட்டம் உருவாயிற்று.அறையிலிருந்த தட்டு முட்டு சாமான்களை நகர்த்தி வெண்டிலேட்டரின் கீழே கவிழ்த்துப் போட்டாள். மேஜையும், ஸ்டூலும் அவள் திட்டத்துக்கு கை கொடுத்தன. பதட்டப்படாமல் அதில் ஏறி வெண்டிலேட்டர் வழியே தலையை வெளியே நீட்டி ஆராய்ந்தாள். அவள் அதிர்ஷ்டம், வெண்டிலேட்டருக்கு அருகே இரண்டு குழாய்கள் டிரைன் பைப் கீழ்நோக்கி பொருத்தப்பட்டிருந்தன. லாவகமாக அதைப் பற்றிக் கொண்டு கீழே இறங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். பிறகு மேஜையிலிருந்து இறங்கினாள். தான் வாங்கி வைத்திருந்த புது ஆடையை அணிந்து கொண்டாள். இருள் கலைந்து சற்று வெளிச்சம் வரக் காத்திருந்தாள். இத்தனை துணிச்சல் தனக்கு எப்படி வந்தது? என்று அவளுக்கே வியப்பாக இருந்தது.'நல்லபடியாக தண்ணீர்க் குழாயின் வழியே கீழிறங்கி எங்காவது மறைந்திருக்க வேண்டும். காலை பத்து மணிக்கு டெஸ்ட் நடக்கும்போது உள்ளே போய் கலந்து கொண்டு விட வேண்டும்!' இதையே திரும்பத் திரும்ப மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டு கிழக்கு வெளுக்கக் காத்திருந்தாள் வனிதா. அவள் துயரங்கள் விலகப் போவதைப் போல், இருள் விலகியது. வனிதா வெண்டிலேட்டருக்கு ஏறினாள். அதில், உடலை நுழைத்து வெளிப் பட்டு அருகிலுள்ள டிரைன் பைப்பைப் பற்றிக் கொண்டு, வெளியே வந்தாள்.உள்ளத்தின் உறுதி அவள் கைகளுக்கு அதீதமான பலத்தைக் கொடுத்தது. குழாயைச் சுவற்றில் பொருத்த இணைக்கப்பட்டிருந்த இரும்புப் பட்டைகளில் பாதம் பதித்து, நிதான மாக இறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு ஆணியில் அவளது புதிய பிராக் மாட்டிக் கொண்டு, 'டர்' என்று கிழிந்தது. புதிய ஆடை பாழானதினால் பதட்டப்பட்டவளின் பிடி நழுவ... 'தொபீரென்று' கீழே விழுந்தாள் வனிதா.நல்லவேளை, இரண்டாவது மாடியிலிருந்து முக்கால் பாகம் இறங்கி விட்டிருந்தபடியினால் கீழே விழுந்ததில் பாதிப்பு ஏதுமில்லை.தவிர, ஒரு நந்தியாவட்டை செடியில் தான் விழுந்தாள். ஆனால், இரவு பெய்த மழையில் தரை ஈரமும் சேறுமாகி இருந்தது. வனிதாவின் உடை கிழிந்ததோடு, அழுக்காகியும் விட்டது. அவள் அதற்காக வருத்தப்படவில்லை. நல்ல வேளை காயம் ஏதுமில்லை. விடுதலை யடைந்த மகிழ்ச்சியில் பரபரப்புடன் ஓடினாள் ஒளிவிடம் தேடி.- தொடரும்.