அலையும் மனம்!
ஞானி ஒருவர், தனிமையில் அமர்ந்திருந்தார். அந்த பக்கமாக வந்த குரங்கு, 'ஐயா... தாங்கள், எந்த நேரமும், தனிமையில், ஏதாவது சிந்தனை செய்தபடி இருக்கிறீர்களே... இதன் நோக்கம் என்ன...' என்றது.'இந்த பூமியில் பிறந்த, எல்லா உயிரினங்களும், ஒரு நாள், இறைவனடிச் சேர்ந்தாக வேண்டும். தொடர்ந்து, பாவங்கள் செய்தபடியே வாழ்ந்து கொண்டிருந்தால், இறைவன் திருவடியை அடைய முடியாது. பாவச் செயல்களில் இருந்து விலகிவிடவே, தனிமையில் அமர்ந்து பிரார்த்திக்கிறேன்...' என்றார்.'ஐயா... நானும் சீக்கிரமாக இறைவனடி சேர வேண்டும். உங்களைப் போன்றே, தனிமையில் இறைவனைப் பற்றிய சிந்தனையில் அமர்ந்தால் தவறில்லையே...' என்றது குரங்கு.'நிச்சயமாக தவறில்லை. நீ அவ்வாறு நடந்துக் கொண்டால், அதை விடவும் பெரிய பாக்கியம் வேறொன்றுமில்லை...' என்றார் ஞானி.உடனே குரங்கு, மரத்தடிக்கு சென்றது. கண்களை மூடியபடி, நீண்ட நேரம் அமர்ந்திருந்தது. அதன் மனக்கண் முன், வாழைப் பழங்கள் தோன்றின. 'சில வாழைப் பழங்களை சாப்பிட்டு வந்து, தியானத்தில் அமர்ந்து இருக்கலாமே' என, எண்ணியது.உடனே எழுந்து, வாழை தோட்டத்தைத் தேடிச் சென்றது. அது புதிய இடம். வாழைப் பழத்தை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற ஆசையில் தேடியலைந்தது. ஒரு திராட்சை தோட்டத்தின் அருகே வந்தது. அங்கு, திராட்சைப் பழங்கள் கொத்து கொத்தாக தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்த குரங்கின் நாவில், எச்சில் ஊறியது. வாழைப் பழம் சாப்பிடும் எண்ணத்தை விட்டு, திராட்சைப் பழம் சாப்பிடும் முடிவுக்கு வந்தது.திராட்சை தோட்டத்துக்குள் நுழைந்த போது, ஏதோ வாசனை வீசுவதை மோப்பம் பிடித்தது குரங்கு. மறுநொடி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அதற்குப் பிடித்தமான பலாப்பழ வாசனை தான் அது. உடனே, திராட்சையை உண்ணும் ஆசையை விடுத்து, அருகில் பலா மரம் இருக்கும் என்று தேடி அலைய அராம்பித்தது.அப்போது, மா மரத்தோட்டத்துக்கு வந்தது. அங்கு, பலாப் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது கரடி. மா மரத்திலோ, ஏராளமான மாம்பழங்கள் காணப்பட்டன.அவற்றை பார்த்த குரங்கு, பலாப் பழத்தை மறந்து விட்டது; மாம்பழத்தை சாப்பிட நினைத்து, வேகமாக மரத்தில் ஏற, கால் இடறி, 'பொத்' என்று விழுந்தது. எழுந்து நடக்கவே முடியவில்லை.அப்போது தான், ஞானியின் நினைவு வந்தது; மனதை அடக்காத காரணத்தால், ஒவ்வொன்றாக ஆசைப்பட்டு, முடிவில் துன்பத்தைக் தேடிக் கொண்டோம். மனதை அடக்கிய ஞானி, ஒரே இடத்தில் அமர்ந்துள்ளார். இனி மனதை அடக்கி, இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும் என, முடிவு செய்தது குரங்கு.குழந்தைகளே... மனம் ஒரு குரங்கு. அது எப்போதும் தாவிக்கொண்டே இருக்கும். அதை நிலைப்படுத்தி, உயர்ந்த லட்சியத்தை நோக்கி பயணித்தால், உன்னத நிலையை அடையலாம்.