யாருக்கு கொடுக்கணும்!
மைதிலி பள்ளியில் இருந்து திரும்பிய போது, அம்மா ரேவதி, பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய பூ சூடி தயாராக இருந்தாள்.''இந்தப் பாவாடை சட்டையை போட்டுக்கோ; கோவிலுக்கு போகலாம்...'' ''சரி அம்மா...''முகம், கை, கால் கழுவி கிளம்பினாள் மைதிலி.இருவரும் கோவிலுக்கு வந்தனர். குன்றின் மேல் அழகிய முருகன் கோவில். வாசலில், 'அம்மா... தாயே... தர்மம் பண்ணுங்க...' என பிச்சைக்காரர்கள் குரல்.''இந்த பணத்தை அவங்களுக்கு கொடு...'' என்றாள் அம்மா.''சுவாமி தரிசனம் பார்த்த பின், தர்மம் செய்வீங்க; இன்னைக்கு ஏன் வழக்கத்துக்கு மாறா செய்றீங்க...'' ''சுவாமி கும்பிட்ட பின், காசு போட்டால் பிராத்தனை செய்த புண்ணியம் எல்லாம் பிச்சைக்காரர்களுக்கு போய் விடுமாம்...'' தர்மம் செய்த பின், முருகனை தரிசித்தனர். சுற்றும் முற்றும் பார்த்தபடி பிரகாரத்தில் அமர்ந்தனர்.''சவுக்கியமா இருக்கீங்களா...'' கேட்டப்படி கவுசல்யா மாமி வந்தாள். கணவனை பிரிந்து, தையல் வேலை செய்து, குழந்தைகளை படிக்க வைக்கிறாள். பேச்சு வாக்கில், ''மகனுக்கு பள்ளியில் பேருந்து, படிப்பு கட்டணம் எல்லாமே ஏத்திட்டாங்க; அதனால், ஜாக்கெட் தைக்கிற கூலியை, 20 ரூபாய் கூட்டி வாங்கலாம் என்று இருக்கிறேன்...'' என்றார் கவுசல்யா.பேச்சு முடிந்து கிளம்பினர்.வழியில், ''கவுசல்யா மாமி, தையல் கூலி சேர்த்து கேட்கிறாங்களே அம்மா... நீங்க என்ன செய்ய போறீங்க...'' என்றாள் மைதிலி.''அதை பற்றிய சிந்தனையில் தான் இருக்கிறேன்; வீட்டுக்கு பக்கத்திலேயே நிறைய பெண்கள் ஜாக்கெட் தைத்து கொடுக்குறாங்க. கவுசல்யா மாமி கஷ்டத்துல இருக்காங்களே என எண்ணி தான், தைக்க கொடுக்கிறேன்; நீ என்ன சொல்கிறாய்...'' என்றாள் ரேவதி.''உழைத்து பிழைக்கும் மாமிக்கு கூலியை ஏத்திக் கொடுங்கள்...'' என்றாள் மைதிலி.நடைமுறை வாழ்வை சீர்த் துாக்கி பார்க்கும் மகளின் சிந்தனையை வியந்து, ''சரி, அப்படியே செய்யலாம்...'' என்றாள் ரேவதி.குழந்தைகளே... பிறர் துன்பம் அறிந்து, சிந்தித்து பிரச்னைகளை தீர்க்க பழகுங்கள்!- ஐயன் பத்மினி