உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் திரைகளைப் பார்க்க, 2 வயது குழந்தைகளுக்குத் தடை!

'டிவி மற்றும் மொபைல்போன் டிஜிட்டல் திரையை, 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம்...' என, பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளது, ஸ்வீடன் நாட்டு அரசு.மேலும், 2 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே 'டிவி' அல்லது மொபைல்போன் பார்க்க அனுமதிக்கலாம் என்றும், அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும், 1 முதல் 2 மணி நேரமும்; 13 - 18 வயது வரையிலானோர், 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே, 'டிவி'யை பார்க்க அனுமதிக்கலாம் என்றும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. 'ஸ்வீடன் நாட்டில், 13 முதல் 16 வயதுடைய இளம் தலைமுறை குழந்தைகள், ஒரு நாளைக்கு 6 மணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமான நேரமோ மொபைல் போனை பார்க்கின்றனர்.'சமூகத்துடன் இணையாமல், உடல் இயக்கம் இல்லாமல், மற்றவர்களுடன் பேசாமல் இவர்கள் வாழ்வது மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டால், இளைஞர்களின் உறங்கும் நேரம் குறைகிறது. நாட்டில் உள்ள, 15 வயது சிறுவர்களில் பாதிக்கும் மேல், போதுமான துாக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்...' என தெரிவித்துள்ளார், அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர்.'குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதைத் தடுக்க வேண்டும்; படுக்கை அறைக்குள் மொபைல் போன் எடுத்து செல்வதை அனுமதிக்கக் கூடாது...' என அறிவுறுத்தியுள்ளது, ஸ்வீடன் நாட்டு சுகாதார அமைச்சகம்.முன்னதாக, துவக்கப் பள்ளிகளில், மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வருவதைத் தடை செய்ய திட்டமிட்டு வருகிறது, ஸ்வீடன் அரசு. ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !