உள்ளூர் செய்திகள்

காதலுக்கு ஒரு கும்பிடு

சகுந்தலாவிடமிருந்து கடிதம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. படித்த படிப்பு வீணாகக் கூடாது; இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து, அப்பா, தன் படிப்புக்கு செலவு செய்த தொகையையேனும் கொடுத்து உதவ வேண்டும் என நினைத்து, சென்னையில் வேலை தேடிக் கொண்டாள், சகுந்தலா. அவளைப் பொறுத்த வரை, வரதட்சணைப் பிரச்னை இருக்கப் போவதில்லை. ஏனெனில், சிறு வயது முதலே, அவளை, அவள் அத்தை மகனுக்கு மணமுடித்து வைப்பது பற்றிய பேச்சு, இரு தரப்புக் குடும்பங்களிலும் உள்ளது. சொந்தத் தம்பியின் மகள் என்பதால், தம்பி தன் வசதிப்படி, எது செய்தாலும், அதை அன்புடன் ஏற்க, தயாராக இருந்தாள், அவள் அத்தை.சகுந்தலாவின் அப்பா சிவசங்கரன், மாநில அரசின் இலாகா ஒன்றில் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். கை சுத்தம் என்பதால், சொந்த வீட்டைத் தவிர, வேறு எந்த சொத்தும் இல்லை. அவள் சம்பாதித்து கொடுத்து, தமக்கு எதுவும் ஆகப் போவதில்லை என்று, அவர் எவ்வளவோ சொல்லியும், கேட்காமல், மதுரையில், கல்லுாரி படிப்பு முடிந்தவுடன், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில், கணிப்பொறி சார்ந்த பணியில் சேர்ந்தாள், சகுந்தலா.அவள் அத்தான், திருச்சியில் மத்திய அரசு அலுவலகத்தில், பெரிய வேலையில் இருந்தான். பெரியவர்கள் பேசும் திருமண ஏற்பாட்டில், சகுந்தலாவைப் போலவே, அவனுக்கும் ஈடுபாடு தான். இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த பின், திருமணம் என்று, தம் மகள் கண்டிப்பாய் சொல்லிவிட்டதாக, சிவசங்கரன் கூறி விட்டதால், இரண்டு ஆண்டுகள் எப்போது முடியும் என்று ஆவலுடன் காத்திருந்தான்.அப்படியும், இப்படியுமாக ஒன்றரை ஆண்டு ஓடி விட்டது.மொபைல் போனில், தினமும் பேசினாலும், கடிதம் எழுதுகிற பழக்கம் சகுந்தலாவுக்கு இருந்தது. அவள் எழுதும் கடிதங்கள், கட்டுரைகள் போல் நீண்டு, பலதரப்பட்ட விபரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். கடிதத்தை, தன் மனைவிக்கு இரைந்து படித்துக் காட்டுவதில் சிவசங்கரனுக்கு ரொம்ப ஆர்வம். படிக்கத் தெரிந்திருந்தாலும், கணவர் படிக்க, அதைக் கேட்டு ரசிப்பதில், அவரது மனைவிக்கும் விருப்பம். எனவே, சகுந்தலாவிடமிருந்து கடிதம் வந்து, இரண்டு வாரங்கள் ஓடி விட்டதில், அவளை, ஏதோ வெறுமை சூழ்ந்தது போல் இருந்தது.''என்னங்க... சகுந்தலாகிட்டேர்ந்து கடிதத்தையே காணோமே...'' என்று கேட்டவாறு, எதிரில் வந்து அமர்ந்தாள், மனைவி சீதா.''அதுதான் தினமும் மொபைல் போன்ல பேசுதே... அப்புறம் என்ன...'' ''இருந்தாலும், கதை மாதிரி, 'அங்கிட்டு போனேன், இங்கிட்டு போனேன் அதை பார்த்தேன், இதைப் பார்த்தேன்; என் சினேகிதி அப்படிச் சொன்னா, அது, இது'ன்னு அவ எழுதுற கடிதத்த படிக்க, எம்புட்டு சுவாரசியமா இருக்கும்...''''அது சரி...'' என்று அவர் சொல்லி முடிக்க, சிவசங்கரனின் மொபைல் போன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்து, ''அட... நம்ம சக்கு தான்... ஆயுசு நுாறு, '' என்றபடி, ''சொல்லும்மா... இப்ப தான் அம்மா உங்கிட்டேர்ந்து கடுதாசி வராதது பத்தி, குறைப்பட்டுக்கிட்டிருந்தா,'' என்றவர், மனைவியும் கேட்கும் பொருட்டு, ஸ்பீக்கரை, 'ஆன்' செய்தார். பின், ''எப்படிம்மா இருக்கே?'' என்றார்.''நல்லாயிருக்கேம்ப்பா,'' என்ற சகுந்தலாவின் குரல், வழக்கம் போல் உற்சாகத்துடன் ஒலிக்கவில்லை. ''உடம்புக்கு முடியலயா... ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்குது...'' என்று கேட்டார், கவலையுடன்! சில நொடி மவுனமாக இருந்தவள், பின், ''அப்பா... ஒரு முக்கியமான விஷயம்... அதை எப்படி சொல்றதுன்னு தெரியல,'' என்றாள்.''எதுவானாலும் தயங்காம சொல்லு; என்கிட்ட சொல்லத் தயக்கம்ன்னா, உங்கம்மா கிட்ட பேசுறியா?'' என்றார்.''ரெண்டு பேர் கிட்ட பேசுறதும் ஒண்ணுதாம்ப்பா...''''அப்ப, என்னன்னு சொல்லு...''''அத்தானை கல்யாணம் கட்டுறதில்லன்னு முடிவு செய்துருக்கேன்ப்பா,'' என்றதும், இருவருக்கும் துாக்கி வாரிப் போட்டது.''என்னம்மா சொல்ற... திடீர்ன்னு ஏன் இந்த முடிவுக்கு வந்தே...'' என்று அவர் வினவியதுமே, அவரிடமிருந்து மொபைல் போனை பறித்த சீதா, ''உன் அத்தானுக்கு சொல்லிட்டியா... காரணம் எதுவானாலும், அவசரப்பட்டு அவன்கிட்ட எதுவும் சொல்லிடாதே,'' என்றாள்.அவளிடமிருந்து போனை வாங்கிய சிவசங்கரன், ''ஆமாம்மா... முதல்ல, என்ன காரணம்ன்னு எங்களுக்கு தெரிஞ்சாகணும்...'' என்றார்.''விபரமா கடிதம் அனுப்பியிருக்கேன்ப்பா... நாளைக்கு உங்களுக்கு கிடைச்சிடும். அதுக்கு மேல, எதுவும் கேக்காதீங்க,'' என்ற சகுந்தலா, மேற்கொண்டு எதுவும் பேசாமல், இணைப்பை துண்டித்தாள். ''என்னங்க சொல்றா இவ... இத்தனை நாளும், சரி சரின்னு தலைய ஆட்டிட்டு, இப்ப புதுசா என்னவோ சொல்றாளே...''''ஒருக்கா, கூட வேலை செய்யிற வேற எவன் மேலயாவது அவளுக்கு நாட்டம் விழுந்திடுச்சோ... எங்க அக்கா மகன், நாம தேர்ந்தெடுத்த பிள்ளையாச்சே... தானே விரும்பித் தேர்ந்தெடுக்கணும்ன்னு நினைக்கிறாளோ...''''இத்தனை நாளும் சம்மதிச்சுட்டு, அதெப்படிங்க மனசு மாறலாம்... ஒருக்கா, உங்க அக்கா மகனுக்கு வேற ஏதாச்சும் புது உறவு ஏற்பட்டு, அவந்தான் சக்குவை இப்படி சொல்லச் சொல்றானோ என்னவோ...'' என்றாள்.''காரணம் என்னன்னு அவ கடுதாசி வந்ததும் தெரிஞ்சுடும்; அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு,'' என்றார்.மறுநாள் காலையில், சகுந்தலாவிடம் இருந்து கடிதம் வந்தது. பிரித்துப் பார்த்த போது, தோழி புவனா, தனக்கு எழுதிய கடிதத்தை உள்ளே இணைத்து, அனுப்பியிருந்தாள். பிரித்து படித்தார் சிவசங்கரன்...அன்புள்ள சகுந்தலா,நான் தாண்டி உன் தோழி புவனா... என்ன ஆச்சரியமாக இருக்கா... என் கணவருக்கு புனேவிலிருந்து, விஜயவாடாவுக்கு மாற்றலாகி விட்டது. இங்கே, சாய்பாபா கோவிலில் தற்செயலாய் நம் வாயாடி வானதியை பார்த்தேன்; அவள் தான் உன் முகவரியை கொடுத்தாள். நாம் எத்தனை உயிருக்குயிராய் பழகினோம். திருமணம் ஆன பின், நமக்குள் தொடர்பு விட்டுப் போச்சு. அப்புறம், நான், என் அத்தானை கல்யாணம் செய்தது உனக்குத் தான் தெரியுமே... அவர் மிகவும் நல்லவர்; ஆனாலும், என் வாழ்க்கை நிம்மதியாக இல்லடி. எனக்கு இரண்டு குழந்தைக; மூத்தது பெண். பிறவியிலேயே பேசும் திறன் இல்ல; காதும் கேட்காது. அதோடு நாங்கள் நிறுத்தியிருக்கணும்... அடுத்ததாவது சரியாய் இருக்காதா என்ற ஆசையில், இன்னொன்று பெற்றுக் கொண்டோம். அது பையன்; ஆனால், மூளை வளர்ச்சியின்றி பிறந்துட்டான். இப்போ, என் வாழ்க்கை, நரகமா ஆகிருச்சு. இத ஏன் உன்கிட்ட சொல்றேன்னா, நாம் பள்ளியில் படித்த சமயம், ஒருநாள் உங்கள் வீட்டுக்கு நான் வந்திருந்த போது, உன் அத்தானுக்கு தான், உன்னை மணமுடிக்கப் போவதாய் சொன்னார், உன் அம்மா. அடியே சக்கு... தயவு செய்து உன் அத்தானை கல்யாணம் செய்யாதே... நெருங்கிய உறவில் திருமணம் செய்யக் கூடாதுன்னு டாக்டர்கள் மட்டுமல்ல, அறிவியலும் அப்படித்தான் சொல்கிறது. அது தெரியாமல், நம் பெரியவங்க அத்தை மகன், மாமன் மகள் என்று, உறவிலேயே கட்டிக் கொடுத்துள்ளனர்.இந்த மாதிரி உறவுகளுக்குள் நடக்கும் திருமணத்தில், முதல் தலைமுறையில் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதில்லை. ஆனால், அடுத்த தலைமுறைக் குழந்தைகளோ அல்லது அதற்கும் அடுத்தவையோ ஊனமாக பிறக்க சாத்தியக்கூறு உள்ளது. எனவே, நீயாவது எச்சரிக்கையாக இரு. உன் அம்மா - அப்பா, அத்தை, அத்தானுக்கு எடுத்துச் சொல்லி, திருமணத்தை தடுக்கப் பார். இத்தனை நாள், பழகிய பின், உறவை முறித்துக் கொள்வது கஷ்டம் தான். ஆனால், என்ன செய்வது... ஊனமுற்ற தலைமுறையை படைக்கும் உரிமை, நமக்கு கிடையாதே... அதை புரிந்து விலகு; கொஞ்ச நாள் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், அந்த நாட்களும் கடந்து செல்லும். அதனால், நீயும், உன் அத்தானும் நல்ல துணையை தேடி, நிம்மதியாக வாழுங்கள். நீயாவது சந்தோஷமாய் இருடி சக்கு!உன் நன்மையை விரும்பும்,தோழி புவனா...கடிதத்தை படித்து முடித்தவர், எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம். இதுபற்றி, தன் அக்காள் மற்றும் அவள் மகனிடம் பேசி, அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதன்பின், இருவருக்குமே நல்ல துணையை தேடி மண முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார், சிவசங்கரன். ஜோதிர்லதா கிரிஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !