அந்தமானில் ஒரு எருமை கன்றுக்குட்டி! (4)
இரவில், ஷாம்பென் ஓட்டலில், வடமாநில, தென்மாநில உணவுகளை ஒரு கை பார்த்து, ஏப்பமிட்டு, அப்படியே மர நாற்காலிகளில் சாய்ந்த போது, கல்பலதா, 'சரி... பாசுக்கு போன் போட்டுடுவோமா...' என்று கேட்டு, பாசுக்கு போன் செய்ய, லைனில் வந்த பாஸ், ஒவ்வொருவரிடமும், 'சுற்றுலாவை நல்லா என்ஜாய் செய்றீங்களா... சந்தோஷமா இருக்கீங்களா... வீட்டுக்கு போன் செய்து, நீங்க பார்த்து ரசித்த விஷயங்களை எல்லாம் சொன்னீங்களா... அவங்க சந்தோஷப்பட்டாங்களா...' என்று கேட்ட போது, அதில், ஒரு தந்தையின் அக்கறை வெளிப்பட, எல்லார் கண்களிலும், ஆனந்த கண்ணீர்.இதுதான் அவர் குணம்!வெள்ளிக் கிழமை -ஷாம்பென் ஓட்டலில், காலை உணவை முடித்து, போர்ட் பிளேயரில் இருந்து, மோட்டார் படகில், நார்த் பே தீவிற்கு சென்றோம். 15 நிமிடத்தில், நார்த் பே வர, எங்களை இறக்கி விட்ட, அப்படகில் உள்ளோர், 'பார்க்க வேண்டியவைகளை பார்த்துட்டு, 1:30 மணிக்குள் திரும்புங்க...' எனக் கூறி, படகை திருப்பிச் சென்று விட்டனர்.மிகச் சிறிய தீவான இங்கு குடியிருப்பு வீடுகள் இல்லை. எங்கு நோக்கினும், வான் வெளியை முட்டுவது போல், தென்னையும், பாக்கு மரமும் அடர்ந்து காணப்பட்டன. படகுத் துறையில், மொத்தமே, 10 கடைகள் தான் இருந்தன. முத்து மாலைகளும், சிப்பி மற்றும் மரத்தால் செய்யப்பட்ட வீட்டு அலங்கார பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கிறது. தமிழர்களும் கடை வைத்திருக்கின்றனர்; சரளமாக தமிழ் பேசுகின்றனர்.இங்கு, மீனவர்கள் உதவியுடன், ஆழ் கடல் நீச்சலில், கடல் வாழ் உயிரினங்களை நேரில் கண்டு களிக்கலாம். ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கட்டணம். நாங்கள், 'சப்-மெரின்' எனும் நீர் மூழ்கி கப்பலில் சென்றோம். 'பெர்ரி' என சொல்லப்படும் உல்லாச படகை போல், ஏ.சி., வசதி செய்யப்பட்டு, விசேஷ கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது, இந்த நீர்மூழ்கி கப்பல். இதன் உட்புறம், இருபுறமும் நீண்ட, பலகைகளில் அமர்ந்து, கண்ணாடிகளின் வழியே, கடல் வாழ் உயிரினங்களை கண்டு களிக்கலாம்; நுாறு பேர் வரை பயணிக்கலாம்.இருக்கையில் ஏறி அமர்ந்ததும், கடல் வாழ் உயிரினங்களை பார்க்கும் ஆசையில், கண்ணாடியை முட்டி அமர்ந்தோம். பத்து நிமிடம் கடந்தது; கடலை உற்று உற்றுப் பார்த்து, கழுத்து வலித்தது தான் மிச்சம். ஒரு மீனைக் கூட பார்க்கவில்லை; மாறாக, கப்பல் செல்லும் வேகத்திற்கு ஏற்ப, நீர்குமிழிகள் தான் ஜாலம் காட்டியது.கல்பலதா, 'மீன காட்டுறோம்ன்னு கடலுக்கு அடியில கூட்டிட்டு வந்து, இப்படி நீர் குமிழிகள காட்டுறீங்களேப்பா... எப்பப்பா வரும் மீனு...' என்று கேலி செய்ய, கலா, 'வரும்... ஆனா, வராது...' என்று தமாஷ் நடிகர் வடிவேல் பாணியில் கூற, கொல்லென்று சிரித்தோம். அங்கிருந்த பணியாள் சிரித்தபடி, 'கொஞ்ச நேரத்தில் வந்துரும் மேடம்...' என்றார், தமிழில்!அவர் கூறியது போல், அடுத்த சில நிமிடங்களில், எங்கள் வாய் எங்களை அறியாமல், 'வாவ்... சூப்பர்... இங்க பாரு கலர் பிஷ்... அங்க பாரு ஆமை... நட்சத்திர மீனப் பாரு... எம்மாம் பெரிய கடல் அட்டை...' என, ஆளாளுக்கு ஆழ் கடல் காட்டிய அதிசயத்தில், எங்களை மறந்து, உற்சாக குரல் எழுப்பினோம்.ஒரு மணி நேர, 'கோரல் சபாரி' உற்சாகத்துக்கு பின், 'நார்த் பே' தீவில் இருந்து, நாங்கள் வந்த படகிலேயே, ராஸ் தீவிற்கு சென்றோம்.இத்தீவு, இந்திய கடற்படையால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு கடைகள் இல்லை; ஒரே ஒரு உணவகம் மட்டும் இருந்தது. ஆங்காங்கே இடிந்து சிதைந்த நிலையில் கட்டடங்களும், அவற்றை, தன் வேர்களால் பிணைத்து, உயர்ந்து வளர்ந்த மரங்களும், வியக்க வைத்தது.அடர்ந்த தென்னை மரங்களுக்கு இடையே தோகை விரித்து ஆடும் மயில்களையும், துள்ளி ஓடும் மான்களை கண்டதும், எல்லாரும், 'அந்தமானைப் பாருங்கள் அழகு...' என்று பாட, அதற்கு, பானுமதி மற்றும் செல்வி இருவரும், சிவாஜி கணேசன், சுஜாதா போன்று அபிநயம் பிடிக்க, நாங்கள் சிரித்த சிரிப்பொலியில், அத்தீவே அதிர்ந்தது.அங்கிருந்த சிறு ஓட்டலில், மதிய உணவாக வெஜ் ரைஸ், நுாடுல்ஸ், டோக்லா, வெஜ் பர்கர் சாப்பிட்டோம். அப்போது கோகிலா, நுாடுல்சை எடுத்து மானுக்கு கொடுக்க, அதுவும் நன்றாக சப்புக் கொட்டி சாப்பிட்டது. உடனே, அங்கிருந்த ஓட்டல் பணியாளர், 'மான்களுக்கு, மனிதர்கள் சாப்பிடுவதை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம்...' என்று கூறி, ராஸ் தீவின் முகப்பில் இருந்த எச்சரிக்கை போர்டைக் காட்ட, மான் மற்றும் மயிலிடம் பிரியா விடைபெற்று, போர்ட் பிளேர் திரும்பினோம்.அந்தமானில் மாலை, 6:00க்கே இருட்ட ஆரம்பித்து விடுவதால், ஏழு மணிக்கு ஓட்டல் திரும்பினோம். பின்னர் குளியல் முடித்து, சிறு ஓய்வுக்கு பின், மறுபடியும் கடைகளுக்கு படையெடுப்பு!இரவு ஓட்டலுக்கு திரும்பி, சாப்பிட்டு முடித்ததும், ஓட்டல் ஊழியர் ஒருவர் பெரிய கேக் கொண்டு வந்தார். ஏற்பாடு: கல்பலதா மற்றும் செல்வி. அதில், மெழுகு வர்த்தி ஏற்றப்பட, அனைவரும், 'பாஸ்... மெனி மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே...' என்று சொல்லி, சென்னையில் இருக்கும் எங்கள் பாஸுக்கு திருமண நாள் வாழ்த்து கூறினோம். பின், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் கேக் கொடுக்க, அவர்களும், ஆச்சரியத்துடன், இவ்வளவு துாரம் வந்தும், மறக்காமல் தங்கள் முதலாளிக்கு திருமண வாழ்த்து கூறுகின்றனர் என்றால், அந்த முதலாளி எவ்வளவு நல்லவராக இருக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசியபடி, எங்கள் பாஸுக்கு வாழ்த்து கூறினர்.எல்லாருடைய வாழ்த்தும், பாஸ், அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கும் என்ற சந்தோஷத்தில் துாங்கச் சென்றோம்.மறுநாள், சனிக்கிழமை - காலை உணவு முடிந்ததும், போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு கிளம்பிய போது, 'ஐயோ... அதற்குள் நான்கு நாள், 'டூர்' முடிந்து விட்டதே...' என தோன்ற, மவுனமாக சென்னை செல்லும் விமானத்தில் ஏறி, அந்தமான் எனும் அழகிய நங்கையிடம் எங்கள் மனதை பறி கொடுத்தவர்களாக சென்னை வந்து சேர்ந்தோம்!எல்லாம் சரி... அந்த எருமைக் கன்றுக் குட்டியைப் பற்றி சொல்லவே இல்லையே என்கிறீர்களா...அதொண்ணுமில்லீங்க... எருமை போல் பொறுமையாக இருப்பதால், எங்க பாஸ் செல்லமாக, என்னை, 'எருமை கன்றுக் குட்டி' என்று அழைப்பார். என்னைப் பற்றி நானே என்னத்தை சொல்வது...ஹி... ஹி... ஹி!இங்கு, 1,347 பதிவு பெற்ற கைவினை மற்றும் சிறு தொழில் அமைப்புகள் உள்ளன.* சுற்றுலா திருவிழா, சுபாஷ் மேளா, விவேகானந்த மேளா, பங்குனி உத்திரம், பொங்கல், துர்கா பூஜை மற்றும் ஓணம் முக்கிய விழாக்கள்.*இந்தியாவில், மூன்று படைகளின் தலைமையிடமும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது, அந்தமான் - நிக்கோபாரில் மட்டும் தான்.* டிச., 12, 1755ல் கிழக்கிந்திய டேனியக் குடியேற்றங்களால், ஜன., 1, 1756ல் நிக்கோபார் தீவுகள், புதிய டென்மார்க் என்று பெயரிடப்பட்டது. செவன் சிஸ்டர்ஸ்— முற்றும் —