உள்ளூர் செய்திகள்

ஓவியங்களால் உருவாக்கப்பட்ட கம்பளம்!

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில், ஈஸ்டர் பண்டிகையை வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் கொண்டாடுகின்றனர். நம் ஊரில், மார்கழி மாதத்தில் வீட்டுக்கு முன், அழகழகான கோலங்களை போடுவது போல், கவுதமாலாவில், கண்ணை கவரும் வகையில், தரையில் கம்பளம் விரிக்கப்பட்டது போன்ற ஓவியங்களை வரைகின்றனர். ஒருவித மண், மரத் தூள் ஆகியவற்றை கலந்து, வீதிகளில் மிக நீண்ட தூரத்துக்கு இந்த ஓவியங்களை வரைகின்றனர். வரைந்து முடித்தவுடன், அவற்றின் மீது, பல்வேறு விதமான மலர்கள், செடி கொடிகளை வைத்து, அந்த ஓவியங்களை மேலும் அழகு படுத்துகின்றனர். இதைப் பார்க்கும்போது, மிக நீண்ட தூரத்துக்கு, அழகான கம்பளம் விரிக்கப்பட்டது போன்று தோன்றும். ஈஸ்டர் தினத்தன்று, இந்த கம்பளத்தின் மீது, மிக பிரமாண்ட இயேசு சிலைகளுடன், ஊர்வலமும் நடத்தப்படுகிறது. இதைக் காண்பதற்காக, வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஈஸ்டர் பண்டிகையின்போது, கவுதமாலாவில் குவிந்து விடுகின்றனர். இங்குள்ள மக்களுக்கு ஒரே ஒரு கவலை... இரவு, பகலாக கண் விழித்து, வரையப்படும் இந்த ஓவியங்களை, சில நேரங்களில், மழை பெய்து, அழித்து விடுகிறதாம். — ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !