வினோத விழா!
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கலாசாரம் உள்ளது. ஆனாலும், ஏதாவது ஒரு விஷயத்தில், ஒவ்வொரு நாட்டு கலாசாரங்களுக்கு இடையே, ஒரு ஒற்றுமை உள்ளது என்பது, ஆச்சரியமான விஷயம்தான். தமிழகத்தின் சில பகுதிகளில், மயான கொள்ளை என்ற ஒரு விழா நடப்பது, அனைவருக்கும் தெரிந்திருக்கும். குறிப்பிட்ட நாளில், இரவில் மயானத்துக்கு சென்று, ஆடு, கோழி போன்ற உயிரினங்களை பலி கொடுத்து, சாமி ஆடி, அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சிகள் நடக்கும். இறந்தவர்களுக்கு பிடித்த பொருட்களை படையலிடும் நிகழ்வும் அன்றிரவு நடக்கும்.இதேபோல் ஒரு விழா, ஆப்ரிக்க கண்டத்தின் தென் கிழக்கில் உள்ள மடகாஸ்கர் என்ற நாட்டிலும் நடக்கிறது. நம்ம ஊரைப் போல் இல்லாமல், இங்கு சற்று வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பமதிகானா என்ற பெயரில், ஒரு விழா நடத்தப்படுகிறது.இந்த நாளில், இறந்தவர்களின் உறவினர்கள் அனைவரும், புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் கல்லறைத் தோட்டத்துக்கு செல்வர். இறந்தவர்களை புதைத்த இடங்களை தோண்டி, உடலை வெளியில் எடுத்து, அந்த உடலை, புதிய துணியால் சுற்றுவர். உடல்கள், எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், அதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவது இல்லை.இதன்பின், அந்த உடலை தூக்கி வைத்து, இசைக் கருவிகளில் ஒலி எழுப்பி, தாளத்துக்கு ஏற்ப, உற்சாகமாக நடனமாடுவர். விலங்குகளை பலியிட்டு, விருந்து சமைப்பர். அந்த உணவை, இறந்தவரின் உடலுக்கு முன் வைத்து, படையலிட்ட பின், அனைவரும் சாப்பிட்டு மகிழ்வர். மீண்டும் அந்த உடலை, அதே இடத்தில் புதைத்து விட்டு, கலைந்து சென்று விடுவர்.மடகாஸ்கர் மக்களை பொறுத்த வரை, இறந்தவர்களின் உடல்களை, தங்களின் முன்னோர் களின் மறு வடிவமாக கருதுகின்றனர். முன்னோர் களை போற்றி வணங் கும் வகை யில், ஏழு ஆண்டு களுக்கு ஒருமுறை, இந்த விழாக்களை நடத்து கின்றனர். நீண்ட காலமாக பின்பற்றப் பட்டு வரும் இந்த நடைமுறைக்கு, தற்போது பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இறந்தவர்களின் உடல்களை தோண்டி வெளியில் எடுப்பது, மூடப் பழக்க வழக்கம் என்றும், இதற்காக ஏராளமான பணம் வீணடிக்கப்படுகிறது என்றும், ஒரு தரப்பினர் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர். இந்த விழாவை நடத்துபவர்களோ,'முன்னோர்களின் பெருமையை, இளைய தலைமுறையினருக்கு நினைவுபடுத்தும் வகையில், இதை கொண்டாடி வருகிறோம். யார் நினைத்தாலும், இதை தடுக்க முடியாது...' என, உறுதியுடன் கூறுகின்றனர்.***என். நேகாஸ்ரீ