பத்மஸ்ரீ செளகார் ஜானகி! (7)
நடிகர் திலகம் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, ஜானகி சொன்னது:வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்பது போல வெளிப்படையாக பேசக் கூடியவர், சிவாஜி.குணத்தில் நேர்மையும், மிக கண்டிப்பும் இருக்கும். நேரத்தை வீணடிப்பது பிடிக்காது. பத்திரிகையாளர்கள் போனில் தொடர்பு கொண்டால், அவரே தான் எடுத்து பேசுவார். சந்திக்க வேண்டிய காரணம் கேட்டு, 'அப்பாயின்ட்மென்ட்' கொடுப்பார். குறிப்பிட்ட நேரத்தில் வராமல் கொஞ்சம் தாமதமாக வந்தால் கூட, பேட்டி தர மறுத்து விடுவார்.வேலைக்காரர்களிடம் கண்டிப்புடன் இருப்பார்.மாடிப்படிகளில் ஏறும் போது சத்தம் வரக்கூடாது. படிக்காத மேதை படத்தில், சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசித்தேன். மறுநாள் நடிக்க வேண்டிய காட்சியை வீட்டிலேயே, 'ஹோம் வொர்க்' பண்ணுகிறாரோ எனக் கூட நினைத்ததுண்டு.அவர், 'ஓவர் ஆக்டிங்' பண்ணுகிறார் என்று விமர்சிப்பர். ஆனால், அது அவசியம் என்றே சொல்லலாம். கேரக்டருக்கு தேவைப்பட்டால் தான், அந்த மாதிரி செய்வார். மூன்று மற்றும் ஒன்பது வேடங்களில் நடிக்கிற போது, ஒவ்வொரு கேரக்டரையும் வித்தியாசப்படுத்தி காண்பிக்க வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட சமயத்தில் அந்த மாதிரி தான் நடிக்க முடியும்.பாலும் பழமும் படத்தில், சிவாஜியின் அத்தை பெண்ணாக நடித்தேன். எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சியில் வெறும் பார்வையாலேயே கைத்தட்டலை பெற்று விடுவார். அப்படியொரு, 'ரொமான்ஸ் லுக்' கொடுப்பார்.தன்னுடைய கேரக்டர் மட்டும் நன்றாக வந்தால் போதும் என்றில்லாமல், மற்ற கேரக்டர்களும் சிறப்பாக வர வேண்டும் என நினைப்பார்.பாபு படத்தில் என் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம், அவரை படத்தில், 'ரிக்ஷாகாரன்' என்று கூப்பிடுவாள்.'அப்படிக் கூப்பிடாதே...' என்று சொல்லி, மகளை நான் அடிப்பது போல் காட்சி. அப்போது, படப்பிடிப்புக்கு நடுவில் சிவாஜி என்னை கூப்பிட்டு, 'பால் முனி படம் பார்த்திருக்கீங்களா? அதுல, இதே மாதிரி ஒரு காட்சி வரும். அதே மாதிரியான நடிப்பை உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்...' என்றார். 'முயற்சி பண்றேன்...' என சொல்லிட்டு வந்து நடித்தேன். ஒரே, 'டேக்'கில், அந்த காட்சி, ஓ.கே., ஆயிடுச்சு.உடனே ஓடி வந்து, 'நான் எதிர்பார்த்த மாதிரியே பண்ணியிருக்கே...' எனக் கூறி, கைக்குலுக்கி பாராட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவருக்கு ஜோடியாக நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது, பெரிய அனுபவம்.சிவாஜியுடன் நடிப்பதற்கு பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவரை போல், முழு ஈடுபாட்டுடன் நடிக்கக் கூடிய பிறவி நடிகரை, இனிமேல் பார்க்க முடியாது.சமீபத்தில், 'டிவி'யில், முதல் மரியாதை படம் பார்த்தேன். 'கிளாசிக்'கான படம். என்னை உலுக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்தது, முதல் மரியாதை. அந்த, 'கிளைமாக்ஸ்' காட்சி அற்புதம்.தனக்கு ஜோடியாக நடித்தவர்களில் பொருத்தமான ஜோடி பற்றி சொல்லும் போது, 'ஜானகி நல்ல பார்ட்னர்...' என்று, சிவாஜி பாராட்டியதை பெருமையாக கருதுகிறேன்.ஜானகியை, அழுகாச்சி நடிகையாக சில படங்களில் காண்பித்த காலகட்டத்தில், அவருக்குள் இருக்கும் கலகலப்பான நடிப்பை அடையாளம் காட்டி, பட்டு மாமியாக பிரகாசிக்க வைத்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், ஜானகி பற்றி சொன்னது: நீர்க்குமிழி படத்தில், படகில் செல்வதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது, நடந்த ஒரு சம்பவம்...அந்த காட்சியில் நடிக்க தயங்கினார், ஜானகி.உடனே நான், 'உங்களுக்கு பதிலாக, 'டூப்' போட்டு எடுத்துக் கொள்கிறேன்...' என, அவரிடம் சொன்னது தான் தாமதம், சிறிது நேரத்திற்கெல்லாம் அவரே நடிக்க துவங்கி விட்டார்.தனக்கு பதிலாக பிறர் நடிப்பதை சகிக்க முடியாத நிலையில், அது எப்படிப்பட்ட ஆபத்தான காட்சியானாலும் தானே நடிக்க வேண்டும் என்ற தனித்தன்மை, அவரிடம் எப்போதும் உண்டு.நாணல் கதை, நாடகமாக அரங்கேறும் போது, அதில் பங்கு பெறாவிட்டாலும், படமாகும் போது அதில் நடித்தார்.அதன்பின் தயாரான, பாமா விஜயம் படத்தில், அவர் நகைச்சுவை வேடம் ஏற்றார். புதிதாக ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவி, அதை பிறரிடம் ஜம்பம் அடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. படத்தில், நடிகை ராஜஸ்ரீ அவரது வீட்டுக்கு விஜயம் செய்யும்போது, 'மேட் விரிக்கிறேன். உட்காருங்கள். வீட்டிலே, 'ரேட்' அதிகம். அதுக்குத்தான், 'கேட்' வளர்க்கிறேன்...' என்பார்.அவரை சீண்டும் நோக்கில், 'அதுக்கு, 'டிராப்' தான் வேணும்...' என்பார், காஞ்சனா.'டிராப்பா?' என்று, ஜானகி விழிப்பது வேடிக்கையாக இருக்கும்.ஜோசப் ஆனந்தன் எழுதிய, 'இரு கோடுகள்' நாடகத்தை படமாக்கும் முயற்சியில் இறங்கினோம். ஜானகியை கலெக்டராக நடிக்க வைத்தோம். அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப, கலெக்டர் ஜானகியாக வாழ்ந்து காண்பித்தார்.ஒரு கலெக்டருக்குரிய மிடுக்கும், பேச்சும், அவரிடம் இம்மியும் குறையாமல் காணப்பட்டன. படத்தில், 'லைப், பைல்...' என, ஜெமினி கணேசனும், ஜானகியும் உரையாடும் காட்சியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.வங்காளத்திலும், பிறகு ஹிந்தியிலும் வெளிவந்த, சுசித்ரா சென் தாயாகவும், மகளாகவும் நடித்த, மம்தா படத்தை, யாராவது தமிழில் தயாரித்தால், சுசித்ரா சென் வேடத்தை கேட்டு நடிக்கலாம் என, விரும்பினார், ஜானகி. ஆனால், யாரும் தயாரிப்பதாக தெரியவில்லை. பிறகு அவரே தயாரிக்க திட்டமிட்டார்.— தொடரும்சபீதா ஜோசப்