உள்ளூர் செய்திகள்

கூடா நட்பு!

மூன்றாவது முறை, நகராட்சி தலைவராக கா.நா.கந்தப்பன் வந்ததிலிருந்து, அரசு அதிகாரி இ.ஓ.,செல்வரங்கத்திற்கு, கெட்ட பெயர் தான்.அவர் காது படவே, 'செல்வரங்கம் முன்ன மாதிரி இல்ல; கந்தப்பனோட எடுப்பு மாதிரி ஆயிட்டாரு...''தலைவர் அடிக்கறதுல கொஞ்சம் வீசியிருப்பாரு போல; அதான் வாலாட்டுறாரு...''அவரு என்னப்பா செய்வாரு... காலத்துக்கேத்த மாதிரி மாறிட்டாரு. நாளைக்கு, வேற கட்சிக்காரர் தலைவரா வந்தா, அதுக்கேத்த மாதிரி ஆடுவாரு...' என்று பேசினர்.புன்முறுவல் பூத்தபடியே, அந்த வார்த்தைகளை ஜீரணிக்க பழகிவிட்டார் செல்வரங்கம்.ஆனாலும், சில நாட்களுக்கு முன் கந்தப்பன் நடந்த கொண்ட விதம் அவரை, அதிர வைத்து விட்டது. அன்று, நகரத்தின் விரிவாக்கப் பகுதியில் இருந்த நகருக்கு திடீர், 'விசிட்'டாக கந்தப்பன் சென்ற போது, பொது ஜனம் ஒருவர், கோபத்தில் செருப்பைக் காட்ட, பதிலுக்கு தன் முஷ்டியை மடக்கி, அவரை ஓங்கி ஒரு குத்து விட்டார், கந்தப்பன். ரத்தம் பெருக்கெடுத்து வழிய, உடனே, அங்கிருந்தவர்கள் கந்தப்பனின் வேனை மறித்து, கோஷமிட்டனர். அவர்களிடம் நயமாக பேசி, வழி ஏற்படுத்தி, கந்தப்பனை அப்புறப்படுத்தினார் செல்வரங்கம்.மக்கள், செல்வரங்கத்தின் மீது, காறி துப்பாத குறையாக திட்டி, 'கந்தப்பன காப்பாத்திட்டதா நெனைக்காத... மறுபடியும், ஓட்டு கேக்க வராமலா போய்டுவான்; அப்ப வெச்சுக்கறோம்...' என்றனர்.'என்ன தலைவரே... பொது மக்களுக்கு எத்தனையோ குறைங்க இருக்கும். அத நிறைவேத்தலங்கிற கோபத்துலயும், கூட்டம் இருக்கற தைரியத்துலயும், ஒருத்தன் செருப்பை காமிச்சா, பொறுத்துப் போகாம அடிதடியில இறங்கலாமா...' என்றார் செல்வரங்கம் தன்மையாக.'அட போப்பா... நீ கவர்மென்ட் சம்பளக்காரன்; குடும்பம், வேலைன்னு பயப்படணும். நான் மானஸ்தன்; அவனை கூறு போட்டிருப்பேன்... கட்சி பேரு கெட்டுடும்ன்னு அடக்கிட்டேன்...' என்றார்.'அதுக்கில்ல... அங்க, 500 ஓட்டு இருக்கு; நாளைக்கு தேர்தல்ன்னு வந்தா...''வரட்டும்... அப்ப எப்படி ஓட்டு வாங்கணும்ன்னு எனக்கு தெரியும். சும்மா இல்ல மூணு முறை, 'ஹாட்ரிக்' அடிச்சிருக்கேன்; நாலாவது முறையும் ஜெயிப்பேன்...' என்றார், தெனாவட்டாக!'அதுவும் சரிதான்... அரசியல்ல வல்லவர் நீங்க... சரி, அந்த நகர்ல கொஞ்ச பேருக்கு, பட்டா வரலயாம்...''தவிக்கட்டும்... அந்த பைல ஓரங்கட்டு...''தலைவர் சொன்னா சரிதான்...' தலையாட்டி, அந்த பிரச்னையை அப்போது முடித்து வைத்தார், செல்வரங்கம்.இன்று, வேறொரு பிரச்னை வெடித்து விட்டது.கந்தப்பனிடம் அரசு வேலைக்காக, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், 'டிவி' சேனல் நிருபரிடம் புகார் சொல்லும் விஷயம் கேள்விப்பட்டு, அங்கே ஆஜரானார் செல்வரங்கம்.இவரிடமும், 'மைக்'கை நீட்டினார் நிருபர்.''லஞ்சம் கொடுத்து, அரசு வேலை வாங்க நினைக்கறதே தப்பு; அப்படி தந்தாலும், அதுக்கு ஆதாரம் வேணும். எனக்கு தெரிஞ்சு, கந்தப்பன் ஏமாத்தறவரு இல்ல... தெரிஞ்ச மந்திரி மூலமா வாங்கித் தர்றேன்னு சொல்லி யிருக்கலாம். இதெல்லாம், ஒரு, 'இஷ்யூ'ன்னு, 'டிவி'க்காரங்க பெருசா ஒளிபரப்புவது சரியில்ல...'' சமாளித்தார் செல்வரங்கம்.இரவு, கோபத்தின் உச்சியில் இருந்த கந்தப்பன், தன் அடியாட்களிடம், ''அங்க, மொத்தம் 60 குடிசைங்க இருக்கு; அத்தனையும் கொளுத்திடு. பனாதைங்க... தற்காலிக வேலைக்கு, 40, 50 ஆயிரம் ரூபாய கொடுத்திட்டு, 'டிவி'யில பேசுதுங்க... எல்லாரையும், கல்யாண மண்டபத்துல, கஞ்சி குடிக்க வைங்கடா...'' என்று உத்தரவு போட்டார். ''தலைவரே... உடனே குடிசை பத்திகிட்டா, உங்க மேல தான் சந்தேகம் வரும்; மறுபடியும், 'டிவி'க்காரங்களுக்கு கொண்டாட்டமாயிடும்; ரெண்டு வாரம் பொறுங்க,'' என்ற தடுத்தார் செல்வரங்கம்.''நீ சொல்றதும் சரி தான்... அப்புறம், மந்திரி ஏறெடுத்தும் பாக்க மாட்டாரு... பாவம்யா நீ... எனக்கும், ஜனங்களுக்கும் நடுவுல கிடந்து முழிக்கிற; கவலைப்படாத... உன்னை நல்லா கவனிக்கிறேன்.''கோபம் குறைந்த கந்தப்பன் அடுத்த, சரக்கு பாட்டிலை கையில் எடுக்க, அவரிடமிருந்து விடைபெற்று, தன், ஜீப்பில் வீடு திரும்பினார், செல்வரங்கம்.இரவு மணி, 11:00 மணியை தாண்டியிருந்தது.கதவை திறந்த மனைவி கமலம் எதுவும் பேசாது, உள்ளே சென்றாள்; சிரித்தபடியே உள்ளே நுழைந்தார் செல்வரங்கம்.வழக்கத்துக்கு மாறாக, டைனிங் டேபிளில், தட்டில் உணவு வைக்கப்பட்டு மூடியிருந்தது.கை, கால் கழுவி, கைலிக்கு மாறி, சாப்பிட உட்கார்ந்தார்.கல்லூரியில் படிக்கும் மகள் சோனா, எதிரில் வந்து அமர்ந்தாள்.''நீ இன்னும் தூங்கலயா...'' பாசமாக கேட்டார்.''அப்பா... நீங்க செய்றது நல்லா இல்ல... 'டிவி'யில பாத்தோம்; கந்தப்பனுக்கு எதுக்கு இப்படி, 'சப்போர்ட்' செய்றீங்க... அந்த ஆளுக்கு பவர் வெறும் ஐந்து வருஷம் தான்; நீங்க ஆபீசர்; உங்கள, 58 வயசு வரைக்கும் யாரும் அசைக்க முடியாது. ஆனா, நீங்க அந்த ஆளுக்குப் போய் ஜால்ரா அடிக்கிறீங்களே... கூடா நட்பு, கேடாய் முடியப் போகுது ஞாபகம் வச்சுக்கங்க.''அந்த ஆளாள அதிகபட்சம், ஏதோ சில லட்சம் ரூபா உங்களுக்கு கிடைக்கலாம்; அது கடைசியில, உங்க நிம்மதிய அழிச்சிடும். அம்மாவே ஆச்சரியப்படறாங்க... 'ஏன், இப்படி மாறிட்டீங்க'ன்னு! போதும்பா நேர்மையா இருங்க...'' பிசிறின்றி பேசினாள் சோனா.சிறிது நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்த செல்வரங்கம் பின், ''சோனா... ஊரோடு ஒத்து வாழ்ன்னு பழமொழியே இருக்கு. கந்தப்பன் இதோட மூணாவது முறையா தலைவரா வந்திருக்காரு. அவரு, ரொம்ப கெட்டவர்ன்னா ஜனங்க எப்படி ஓட்டு போடுவாங்க... அப்படி, இப்படின்னு இருப்பாரு தான்; நாம தான் நல்லத மட்டும் எடுத்துக்கணும். வாழ்க்கையில, நேர்மை மட்டும் போதாது; நெளிவு, சுளிவும் வேணும்,'' என்றார்.''ஏம்ப்பா சமாளிக்கறீங்க... தலைவரால, கொஞ்சம் பேர் பாதிச்சாலும், அது தப்புதான். உங்கள பத்தி ஒருத்தர், அம்மா காதுபட ஏதோ சொல்ல, பாவம் அம்மா ரொம்ப, 'அப்செட்' ஆயிட்டாங்க,'' என்றாள்.செல்வரங்கத்தால் பதில் சொல்ல முடியவில்லை. எத்தனையோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கூட, அரசியல்வாதிகளின் கார் கதவை திறந்த விடும் நிலையில், தான் ஒரே ஒரு விஷயத்திற்காகவே, கந்தப்பனை அனுசரித்து போவது, யாருக்கு புரியும்... வீட்டு நபர்களே தன்னை தவறாக எண்ணுவது வேதனையாக இருந்தது. பேசாமல் மழுப்பி சமாளிக்கலாம் என்றால், அவர்களது தப்பான எண்ணம் இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும் என நினைத்த செல்வரங்கம், ''சோனா... உங்கம்மாவ கூப்பிடு...'' என்றார். உள்ளே சென்று, அம்மாவை அழைத்து வந்தாள் சோனா.தன் மனைவியை உற்று பார்த்த செல்வரங்கம், ''கமலா... என்னை பத்தி, என்ன கேள்விப்பட்ட...'' என்று கேட்டார்.முகத்தில், கோபமும், துக்கமும் பொங்க, ''ஒரு நாளைக்கு இந்தம்மா புருஷனும், தலைவரும் ஒண்ணா கம்பி எண்ண போறாங்கன்னு பேசிக்கிட்டாங்க,'' மெதுவாக சொன்னாள் கமலம்.சிறிது நேரம் அமைதியாக இருந்த செல்வரங்கம் பின், ''நான், சில விஷயங்கள சொல்ல வேணாம்ன்னு இருந்தேன்; காரணம், புரிஞ்சுக்கறது கஷ்டம். ஆனா, இப்ப சொல்லித் தான் ஆகணும். என்னுடைய நட்பு, கூடா நட்பு இல்ல; கேடாய் எதுவும் நடக்காம தடுக்க கூடிய நட்பு!''மகாபாரதத்துல, துரியோதனன் தப்பு செய்யும் போது, அதை பாராட்டி சிரிச்ச சகுனியோட சிரிப்புக்கு என்ன அர்த்தம் தெரியுமா... துரியோதனன் மேலும் மேலும் தப்பு செஞ்சு, பாவ மூட்டையை சுமக்க போறாங்கற, நினைப்புல வர்ற சிரிப்பு. அதே யுக்திய, நான் இங்க வேற மாதிரியா பயன்படுத்தறேன்.''உதாரணத்துக்கு அன்னிக்கு, செருப்ப காட்டினவன, குத்து விட்டதோட, கந்தப்பனோட கோபம் அடங்கல... அவனோட, கை, கால் எடுக்கணும்ன்னு கார்ல இருந்த வெட்டருவாள தேடினாரு; அத ஒளிச்சு வச்சது நான் தான்.''பட்டா கிடைக்குறதுக்கு வாய்ப்பு இல்லாத இடத்துக்கு, பட்டா தர்றதா சொல்லி ஏமாத்திக்கிட்டு இருக்காருன்னு தெரிஞ்சும், அத மேலிடத்துக்கு தெரிவிச்சா, உடனே, ஜனங்கள காலி செய்ய சொல்வாங்களேன்னு நினைச்சு, பைலை காணாம அடிச்சதும் நான்.''போன மாசம், இவரு ஒரு பள்ளி விழாவுக்கு போனப்ப, ஒரு டீச்சர் எழுந்திருக்காம உட்கார்ந்திருந்தத பாத்துட்டு, உடனே, அந்த டீச்சரை வேற மாவட்டத்துக்கு மாத்த, மந்திரி வரைக்கும் போய்ட்டாரு... நான் தான், அவரு கோபத்தை தணிச்சு, இந்த மாவட்டத்துக்குள்ளேயே, 5 கி.மீ., தூரத்துல, வேற ஸ்கூலுக்கு மாத்த வச்சேன்.''கந்தப்பன் வேலைக்காக பணம் வாங்கினது உண்மை தான்; அது வெளியில நிரூபணமாச்சுன்னா, நாளைக்கு, அந்த, 'போஸ்டிங்' எல்லாத்தையும் நிறுத்தி வச்சிடுவாங்க; இல்ல, 'கேன்சல்' செய்துடு வாங்க. பணம் கொடுத்தவங்களுக்கு தலைவரை வெச்சே, வேற ஏதாவது வேலை வாங்கி தரலாம்ன்னு தோணுனதாலேயே அவர நான் காட்டிக் கொடுக்கல.''அதோட நகராட்சிக்கு ஒதுக்கற லட்சக் கணக்கான பணத்த, இவரு, தன் இஷ்டத்துக்கு, தனக்கு ஒதுக்க நினைக்கறத, கூடவே இருந்து குறைக்கறேன்; இது, அவருக்கு தெரியாது. மொத்தத்துல, கூடா நட்பை வெச்சு, தப்போட அளவை குறைக்கறேன். அப்படியில்லாம, அவர எதிர்த்தால், என்னை, 'ஈசி'யா வேற இடதுக்கு மாத்தி, அவருக்கு தோதா ஒருத்தரை கொண்டு வந்தா, என்னாகும் யோசிச்சு பாருங்க...'' என்று சொல்ல, அவரின் ராஜதந்திரம் புரிந்து, முகம் மலர்ந்தனர், கமலாவும், சோனாவும்! - கீதா சீனிவாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !