தேவதை!
''என்ன கல்யாணி, உன் பிரெண்டு வந்துட்டு போயிருக்கா போல இருக்கே,'' என்றார், கணவர் சங்கரன்.''ஆமாங்க தாமரை, வீட்டுல விளக்கு பூஜை. விருந்துக்கு கூப்பிட்டிருக்கா. எத்தனை வேலை இருக்கும். அத்தனைக்கும் நடுவுல இங்க வந்து, என் தலையை வாரி, கொண்டை போட்டு விட்டு, கட்டிக்கிறதுக்கு புடவை, ரவிக்கை எல்லாம் தயாரா வச்சுட்டு போயிருக்கா.''''கல்யாணி, உன் முகத்துல சந்தோஷம் கொப்பளிச்சு கிடக்கு.''''ஆமாங்க, கீழ விழுந்து ஆறு மாசமாச்சு. ஆஸ்பத்திரி, ஆபரேஷன், வீடு, படுக்கைன்னு அலுத்தே போச்சு. முதல் முதலா வெளில போகப் போறோம்ன்னு, ரொம்ப ஆசையா இருக்குங்க.''''நான் அதைச் சொல்லல. தாமரை வந்தாலே ரொம்ப குஷியா இருக்கியே, அதைப்பத்தி சொன்னேன்.''''நீங்க அப்படி வர்றீங்களா... என்ன மாதிரி பொண்ணுங்க, என்ன பிரியம், என்ன மரியாதை... வீட்டுக்குள்ள நுழையும்போதே, 'அம்மா'ன்னு கூப்பிடற அழகு ஒண்ணே போதும். என்கிட்ட மட்டும் இல்லைங்க, இங்கு இருக்குற எல்லார்கிட்டயும் அன்பாத்தான் பழகுது.''பெத்தவங்க, கூடப்பிறந்தவங்களுக்கு செய்யிறதுக்கே யோசிக்கிற இந்த உலகத்துல, யார்னே தெரியாதவங்களுக்கு, அப்பார்ட்மென்ட்ல இருக்கிறவங்களுக்கு, ஓடி ஓடி செய்யிறது பெரிய விஷயம் தான். யார் பெத்த பொண்ணோ...''அந்த பொண்ணு இங்க வந்த ஒரே மாசத்துல, நான் கீழ விழுந்து காலை ஒடிச்சுக்கிட்டு படுக்கையில் இருக்கும்படி ஆனது. அம்மா, - அப்பா எங்க இருக்காங்க, கூடப்பிறந்தவங்க இருக்காங்களா எதுவுமே தெரியலை. புருஷன், வெளிநாட்டுல வேலை செய்யிறார்ன்னு மட்டும் சொல்வா.''அவ பேசறத பார்த்தா, காதல் கல்யாணம்ன்னு தோணுது. புருஷன் வீட்டுல சம்மதப்படலைன்னு, ஒரு தடவை சொல்லியிருக்கா. அந்த பையனை பத்தி எதுவும் தெரியாது. ஆனா, தாமரையை ஒரு தடவை பார்க்கறவங்க, 10 நிமிஷம் பேசினவங்க, வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க; சொல்லவும் முடியாது.''மூச்சு விடாமல் பேசிய கல்யாணியை பார்த்து, அமைதியானார், சங்கரன்.''ஏன் கல்யாணி... நமக்கு பொண்ணு கிடையாது. ஒரே பையன் ராஜா. அவனுக்கு, தாமரை மாதிரி பெண் கிடைச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் இல்லையா?''அத்தனை மகிழ்ச்சியும் அடங்கி, சோகத்துடன், ''தெரிஞ்சுதான் இந்த கேள்வியை கேட்டிங்களா... கூட இருந்த உங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாதா... எனக்கு எந்த குடுப்பினையும் இல்லாம போச்சு... இந்த நல்ல நேரத்துல எதுக்கு அதையெல்லாம் ஞாபகப்படுத்தறீங்க,'' என்று வெடித்தாள், கல்யாணி.''இல்லை, கல்யாணி... ஒரு பேச்சுக்கு தான் கேட்டேன்.''''மறந்து போய் கூட, இனி கேட்காதீங்க... யாருக்கு பிறந்தவள்னே தெரியாம, இல்லத்துல வளர்ந்த பெண்ணை கட்டிக்கறேன்னு வந்து நின்னான், என் பிள்ளை. எல்லாத்தையும் மறக்கணும்ன்னு தான் வேற ஊர், இடம்ன்னு வந்துருக்கோம்.''தொண தொணன்னு பேசிக்கிட்டிருக்காம, உடையை மாத்திக்கிட்டு கிளம்புங்க; தாமரை வீட்டுக்கு போகணும். அவ வீட்டுக்காரரும் வந்திருக்காராம். போய் சந்தோஷமா இருந்து, சாப்பிட்டு வருவோம்.''முதல் முதலா அவங்க வீட்டுக்கு போறோம். வாங்கிட்டு வந்த பூ, பழம், ஸ்வீட் எல்லாத்தையும் மறக்காம எடுத்துக்குங்க,'' என்ற கல்யாணி, கொதிக்கும் மனதை, அது கிளறி விட்ட நினைவுகளை அடக்க முடியாமல் தவித்தாள்.ஒரே பிள்ளை ராஜா. பிறக்குமா என்று தவமாய் தவமிருந்து பெற்றவள். குழந்தை பிறந்த அன்றே, 'பிரசவம் ரொம்ப சிக்கலாயிடுச்சு, இன்னொரு குழந்தையை, இவங்க கர்ப்பப் பை தாங்காது. இந்த குழந்தையை நல்லபடியா வளர்த்துக்குங்க...' என, சொல்லி விட்டனர்.கண்ணுக்குள் வைத்துதான் வளர்த்தனர். எதுவும் வேண்டும் என்று கேட்க முடியாதபடி, கேட்பதற்கு முன் பார்த்து பார்த்து செய்தனர்.ஆனால், 'ஒரு பெண்ணை காதலிக்கிறேன். திருமணம் செய்து வையுங்கள்...' என்று கேட்டபோது, அந்த பெண், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவள் என்று தெரிந்தபோது, சம்மதம் தர முடியவில்லை. 'வேணாம்ன்னு சொல்றதுக்கு முன், அவளை பாருங்கம்மா. 10 நிமிஷம் பேசுங்கம்மா. என் தேர்வு தப்பில்லைன்னு புரியும்...' ராஜா, எவ்வளவு சொன்னபோதும், சம்மதிக்கவில்லை, கல்யாணி.'வேற பொண்ணுன்னா பேசு. இல்லைன்னா என் மூஞ்சியில முழிக்காதே. பிள்ளையே பிறக்கலைன்னு நினைச்சுக்கறேன்...''எனக்கு, வேற வழி இல்லைம்மா. காதலிச்ச பெண்ணை விட முடியாது. நீங்க, என்னிக்காவது மனம் மாறுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு...' என்று சொல்லி, படி இறங்கினவன் தான், எங்கு இருக்கிறான், திருமணம் செய்து கொண்டானா எதுவும் தெரியவில்லை.அக்கம்பக்கத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மனம் புழுங்கினாள், கல்யாணி.கொதித்த மனது, உடலை பாதிக்க ஆரம்பித்தது.'இந்த இடத்தை விட்டு, வேற எங்கயாவது போய் இருந்து பாருங்க, மிஸ்டர் சங்கரன். இப்ப, 'ரிடையர்' ஆகிட்டீங்க. நல்ல, 'கிளைமேட்' இருக்கற ஊருக்கு போய் இருக்கலாமே. வேற இடம், புது மனுஷங்க, சூழ்நிலை எல்லாம் இவங்க மனசை மாத்தும்...'பார்த்து பார்த்து கட்டின சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, ஊரை விட்டு கிளம்பி, கோயம்புத்துாரில், 500 குடும்பங்கள் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பை தேர்ந்தெடுத்தனர்.தினமும், நடைபயிற்சி, பாட்டு வகுப்பு, கூட்டு பிரார்த்தனை மற்றும் 'பிக்னிக்' செல்வது என்று, கல்யாணிக்கு மிகவும் பிடித்தும் இருந்தது; காலமும் நகர்ந்தது. கேட்டவர்களிடம், 'ஒரே பிள்ளை, வெளிநாட்டில் வேலை. இன்னும் திருமணம் ஆகவில்லை...' என்று சொல்லி, பேச்சை முடித்துக் கொண்டனர்.அப்போது தான் அறிமுகமானாள், தாமரை. பார்த்த நொடியிலேயே கல்யாணிக்கு மிகவும் பிடித்து விட்டது. எல்லாரிடமும் கலகலவென பழகுவாள். புதிது புதிதாக சமைத்த உணவு வகைகளை எடுத்து வருவாள்.கல்யாணியால் குனிய முடியாது என்பதால், பண்டிகை தினங்களில் கோலம் போட்டுத் தருவாள். யாருக்காக, எதைச் செய்தாலும், முகம் சுளிக்காத அன்பு நிரம்பி வழியும். பக்கத்து பிளாக் நஸ்ரின், பெருக்கித் துடைக்கும், முனியம்மா என்று அத்தனை பேருடன் சகஜமாக பழகுவாள்.படுக்கையை விட்டு எழுந்து நடமாட முடியாத நிலையில் இருந்த கல்யாணிக்கும், சங்கரனுக்கும் இன்றியமையாதவள் ஆனாள்.''கல்யாணி, நான் தயார்; கிளம்பலாமா?'' சங்கரனின் குரல், நினைவை கலைத்தது.''என்னங்க, கல்யாணத்துக்கு போற மாதிரி, பட்டு வேஷ்டி சட்டையெல்லாம்?''''உன் பிரெண்ட் வீட்டுக்கு முதல் முறையா போறோம். நீ எவ்வளவு அழகா டிரெஸ் பண்ணிட்டிருக்க. உனக்கு ஏத்த மாதிரி வரவேணாமா?''கிளம்பி கீழே வந்தனர். நான்கு பிளாக் தள்ளியிருந்த இடத்துக்கு, கல்யாணியால் மெதுவாகத்தான் நடந்து வர முடிந்தது. வாசலில் பெரிய கோலம் வரவேற்றது. சன்னமான இசையும், சந்தன ஊதுபத்தியின் மணமும், மனதை மயக்கியது. அழைப்பு மணியை அடித்ததும், கதவை திறந்தவன், ராஜா. 'இவன் எங்கே, எப்படி, அதுவும் தாமரை வீட்டில்?' என நினைத்தவள், வாய் திறந்து கேட்டே விட்டாள்.''இது, என் வீடுதாம்மா.''''தாமரை வீடுன்னுதானே சொன்னாங்க.''''தாமரை, என் பெண்டாட்டி.''''தா... தாமரை, உன் மனைவியா, நிஜமாவா?''''ஆமாம்மா. உங்க விருப்பமில்லாம தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். ஆனா, உங்க ஆசிர்வாதம் இல்லாம, வாழ்க்கை வாழ பிடிக்கலை. இப்ப உங்களுக்கு தாமரையை பத்தி புரிஞ்சிருக்கும். அவளுக்கு கூட, நிறைய மனுஷங்க வேணும். இல்லத்துல வளர்ந்தா கூட ஒழுக்கத்தோட வளர்ந்திருக்காங்க. ''அவளும், 'என் குழந்தைகளுக்கு, தாத்தா, பாட்டி வேணுங்க. தனியா வளரக் கூடாது. உங்கம்மா மனசு மாறி நம்மளை ஏத்துக்கிட்ட பிறகு தான், நமக்கு குழந்தைகள்'ன்னு தீர்மானமா சொல்லிட்டா. அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் கோயம்புத்துார் வந்துட்டீங்கன்னு, அப்பா சொன்னார்.''அப்படி பார்க்காதீங்க. அப்பாவுக்கு எல்லாமே தெரியும். எங்க கல்யாணத்துக்கு வந்திருந்தார். தாமரையை பார்த்ததும் பிடிச்சு போச்சு. 'அம்மாவுக்கும் பிடிக்கும்டா. பொறுமையா இரு. கொஞ்சம் கோபம் தணியட்டும்'ன்னு சொன்னார். ''உங்களுக்கு உடம்பு முடியாம கோயம்புத்துார் வர்றது தெரிஞ்சதும், 'நான் யாருன்னு காமிச்சுக்காம உங்க அம்மாகிட்ட பழகிப் பார்க்கணும்'ன்னு சொல்லிட்டா, தாமரை.''இங்க தாமரை இருக்கறதுக்கு வீடு, அப்பா தான் பார்த்துக் கொடுத்தார். எனக்கு வேலை, சென்னையில தான். வாரக் கடைசியில வந்துட்டு போவேன். உங்க கண்ணுல படாம இருக்க சிரமமாய் இருந்தது. நீங்க, நடமாட முடியாம வீட்டோட இருந்ததும், வசதியாப் போச்சு.''எல்லாத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்ன்னு தான், உங்களை இந்த வீட்டுக்கு வரவழைச்சோம். உண்மையிலேயே, நான் வீட்டுக்கு ஒரே பிள்ளைன்னு தெரிஞ்சதும், என்னோட தன் வாழ்க்கையை அமைச்சுக்கவே ரொம்ப தயங்கினா. ஆனா, காதல் ஜெயிச்சுடுச்சு இல்லையா தாமரை?'' என, அவளை பார்த்து ராஜா கண்ணடிக்க, தயங்கியபடியே கல்யாணியை பார்த்தாள்.''அம்மா, எனக்கு பெத்தவங்க, கூடப்பிறந்தவங்கன்னு சொல்லிக்க யாருமே இல்லை. அதனால தான், என்னை ஏத்துக்க மறுத்தீங்க. இங்க குடியிருக்குற எல்லாரையும் எனக்கு உறவுக்காரங்களா தான் பார்க்குறேன். தனித்தனி வீட்டுல வாழ்ந்தாலும், மனசால, அன்பால ஒரு குடும்பமாதான் நினைக்கிறோம். இப்ப என்னை ஏத்துப்பீங்களா?''எப்படி மறுப்பது... இப்படி ஒரு பெண்ணை எங்கே போய் தேடுவது. கணவனின் உறவுகளை துாரத்தில் தொலைக்கும் பெண்களையும், பெற்றவர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் மருமகள்களையும் பற்றி பார்த்தும், கேட்டுக் கொண்டும்தானே இருக்கிறாள்.கல்யாணத்துக்கு முன்பே, பெற்றவர்கள் கூட இருக்கக் கூடாது என்று நிபந்தனை போடும் பெண்களுக்கு மத்தியில், 'வாழ்ந்தால் சேர்ந்து தான் வாழ்வேன்' என்று புருஷனையே தள்ளி வைத்த பெண்ணா, என் மருமகள். அன்புக்கு ஏங்கும் இவளை, அன்பால் அத்தனை குடும்பங்களுடன் உறவாடும் இவளை எதற்காக ஒதுக்குவது?தாமரையின் கேள்விக்கு, கண்ணீர் பதிலானது. இது, அன்பில் விளைந்த ஆனந்தக் கண்ணீர்.இத்தனையும் தெரிந்து, பொறுமை காத்த கணவரை பார்த்தாள்.'நமக்கு எவ்வளவு கொடுப்பினை...' என்று, நன்றியுடன் கடவுளை நினைத்தாள்.''இன்னும், 10 நிமிஷத்துல எல்லாரும் வருவாங்க. அதுக்குள்ள உங்க கையால விளக்கு ஏத்த வர்றீங்களா அம்மா?'' என்றான், ராஜா.இரு பெண்களும் இணைந்து, விளக்கை ஏற்றினர். வெளிச்சம் பரவ ஆரம்பித்தது. ர. கிருஷ்ணவேணி