உள்ளூர் செய்திகள்

தேவதைகள்!

பிளஸ் 2 படிக்கும், பேத்திக்கு தேவையானதை எடுத்து வைத்தாள், மங்களம். வீட்டு வேலைகளை முடித்து நிமிர்ந்தபோது, அழைப்பு மணி கேட்க, 'யாரது இந்த நேரத்தில்...' என, யோசித்தபடியே வெளியே வந்தாள்.தோழியின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், அலமேலு. அவள் பக்கத்தில் ஒல்லியாக, ஆனால், களையான முகத்துடன் ஒரு பெண் நின்றிருந்தாள்.''வா, அலமேலு... என்ன இவ்வளவு காலையில... யாரிந்த பொண்ணு?'' ''போயிட்டு வர்றேன் பாட்டி... பை...'' என்றாள், பேத்தி.''உனக்கு பிடிச்ச உருளைக்கிழங்கு பொடிமாஸ், வெங்காய சாம்பார், தயிர் சாதம் வச்சுருக்கேன்... மிச்சம் வைக்காம சாப்பிடணும்,'' என, பேத்தியிடம் கூறியவள், ''சொல்லு, அலமேலு... என்ன விஷயம்... யாரிந்த பொண்ணு?'' என்றாள்.''அம்மா... வீட்டு வேலைக்கு, ஆள் வேணும்ன்னு சொல்லிட்டு இருந்தீங்கள்ல... அதுக்கு தான் இவளை கூட்டி வந்திருக்கேன்.''அப்பெண்ணின் களங்கமற்ற முகத்தை பார்த்த உடனேயே, மங்களத்திற்கு பிடித்து விட்டது.''வீட்டு வேலைக்கா... ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே... எல்லா வேலையும் தெரியுமா... பேர் என்ன?''''அம்மா... இவ பேரு, சுதா... என், 'ப்ரெண்ட்'டோட பொண்ணு. அவளும் வீட்டு வேலை தான் பாக்கறா... இவ, இந்த வருஷம், பிளஸ் 2 முடிச்சிருக்கா... இவ தோற்றத்தை பார்த்து சந்தேகப்படாதீங்க... சமைக்கிறது, துவைக்கிறது, மத்த வீட்டு வேலை எல்லாம் தெரியும்... சுறுசுறுப்பும் அதிகம்.''''நல்லா சமைப்பியா... என்னென்ன சமைக்க தெரியும்?''''சைவம், அசைவம்ன்னு எல்லா சமையலும் நல்லா செய்வேன்... வீட்டு வேலையும் செய்வேன்.''''எனக்கு பிடிச்சிடுச்சு, அலமேலு... பொண்ணு எப்படி... கை சுத்தம், ஒழுக்கம், கோபம் இல்லாத, நல்ல குணமான பொண்ணுதானே?''''அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லம்மா... என்னை நம்பி வேலை குடுங்க... ரொம்ப நல்ல பொண்ணு... இல்லைன்னா நான் அழைத்து வருவேனா... ஏழு வருஷத்துக்கு முன், இவளோட அம்மாவை விட்டுட்டு, வேற ஒருத்தியோட ஓடிட்டான், இவ அப்பன்.''அதுல இருந்து, இவளோட அம்மா, வீட்டு வேலை செஞ்சு, குடும்பத்தை ஓட்டறா... ரொம்ப கஷ்ட ஜீவனம்... அப்படியும், இவளை, பிளஸ் 2 வரை படிக்க வச்சுட்டா... இனி, முடியாது... இவளும் உழைச்சா தான் குடும்பத்தை ஓட்ட முடியும்ங்கற நிலைமை.''அதனால, நல்ல இடமா வீட்டு வேலைக்கு சேர்த்து விட சொன்னா... எனக்கு, உங்க ஞாபகம் வந்தது... நீங்க கேட்டீங்களே... அதனால, இங்க அழைத்து வந்திட்டேன்.''''சரிடி... நீ இவ்வளவு சொன்ன பிறகு, நான் வேணாம்ன்னா சொல்ல போறேன்... எனக்கு திருப்தி, நாளைக்கே வேலைக்கு வர சொல்லிடு,'' என்றாள், மங்களம்.அதைக் கேட்ட இருவருக்கும் சந்தோஷம்.மங்களம், அவள் கணவர் நடராஜன், மகள் வழி பேத்தி ஆகிய மூவர் மட்டுமே அந்த வீட்டில். அவர்களின் மகன், திருமணம் முடித்து, வெளிநாட்டில், 'செட்டில்' ஆகி விட்டான்.மகளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மகளின் கணவருக்கு, திடீரென டில்லிக்கு மாற்றல் ஆகி விட்டது. பிளஸ் 2 படிக்கும் மகளை, உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற முடியாததால், பாட்டியின் வீட்டில் தங்கி படித்து வருகிறாள்.வெளிநாட்டில் இருந்து மகன் அனுப்பும் பணம், அரசு உயர் பதவி வகித்து ஓய்வுபெற்ற நடராஜனுக்கு வரும், 'பென்ஷன்' மற்றும் ஐந்தாறு வீடுகளின் வாடகை வருகிறது. எனவே, பணத்துக்கு பஞ்சமில்லை.மங்களத்துக்கு, வயதாகி விட்டதால், வீட்டு வேலை செய்ய முடியவில்லை. சமையல், மற்ற வேலைகளுக்கு ஒரு பணிப்பெண் இருந்தால், நன்றாக இருக்கும் என்று நினைத்தாள்.பணிப்பெண்ணை தேட, 10 நாளில் கிடைத்தாள். ஆனால், அவள், வேலையில் சுத்தமில்லை, சுறுசுறுப்புமில்லை. ஏனோ தானோ என்று வேலை செய்தவளை, ஒரே மாதத்தில் கணக்கு முடித்து அனுப்பி விட்டாள். அதற்கு பின், நிறைய பணிப்பெண்கள் வந்தனர். வந்த வேகத்திலேயே சென்றனர்.ஒரு வேலையாக, தோழியின் வீட்டுக்கு சென்ற போது, அவளிடம், இந்த பிரச்னையை சொல்லி புலம்பினாள், மங்களம். அப்போது தான், அங்கிருந்த அலமேலு, தனக்கு தெரிந்த பெண் ஒருத்தி இருப்பதாகவும், அவளை அழைத்து வருவதாகவும் சொன்னாள். அடுத்த நாள் வேலைக்கு வந்த, சுதாவைப் பார்த்து அசந்து போனாள், மங்களம். ''அலமேலு சொல்லி இருப்பாள்ன்னு நினைக்கிறேன். எங்களுக்கு சுத்தம் முக்கியம். அதே மாதிரி, வாய்க்கு ருசியா சாப்பிட்டு பழகினவங்க. அதனால், சுவையா சமைக்கணும். நேர்மை, நாணயம் முக்கியம். புரிஞ்சுதா?'' என்றாள், மங்களம்.''புரிஞ்சுதும்மா.'' ''சரி... காத்தால டிபனுக்கு, பொங்கல் செய்து, துணியை துவைச்சுடு... மதியம், 'மெனு' அப்புறம் சொல்றேன். ராத்திரிக்கு டிபன், சப்பாத்தி, இல்லை தோசை தான். மத்தபடி வழக்கமான வீட்டு வேலை செய்யணும்.''''சரிம்மா.''சுதா வைத்த பொங்கலை சாப்பிட்டு, அசந்து போனாள்; அப்படி ஒரு ருசி. ''ஆஹா... இதுபோல், ருசியா சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு,'' என்று புகழ்ந்த நடராஜன், இரண்டு முறை கேட்டு வாங்கி சாப்பிட்டார்.பேத்தியோ ஏகத்துக்கும் புகழ்ந்தாள். அடுத்ததாக, அவள் துவைத்த துணிகளில் அத்தனை சுத்தம்.மதியம் சாதம், கத்தரிக்காய் சாம்பார், ரசம், உருளை பொரியல், அவரை கூட்டு சாப்பிட்டு அசந்து போயினர்.சுதாவின் வேலை திறனும், சுவையான சமையல், பணிவான பேச்சும், சுறுசுறுப்பும், அந்த குடும்பத்தை கட்டிப் போட்டு விட்டது.எதிர்பார்த்த மாதிரியே மங்களத்தை வெகுவாக கவர்ந்து விட்டாள், சுதா. ஞாயிறு மதியம் -திடீரென வெளியில் வந்தாள், மங்களம்.பக்கத்தில் இருந்த அறைக்குள், ''என்ன இது பொறுப்பில்லாம... குளிச்சுட்டு வர்றப்ப கவனமா இருக்க மாட்டியா... உன் கழுத்துல இருந்த ரெண்டு சவரன் செயின் பாத்ரூமுக்குள்ள இருந்தது. இனியாவது கவனமா இரு,'' என, மங்களத்தின் பேத்தியிடம் கூறிக் கொண்டிருந்தாள், சுதா.''ஐயோ, சுதா... இது, அங்கதான் இருந்ததா... காலையில இருந்து தேடிட்டு இருக்கேன்... பாட்டிக்கு தெரிஞ்சா, தொலைச்சுடுவாங்க... ரொம்ப நன்றி.''''அப்புறம் இன்னொரு விஷயம்... நீ தொலைச்சதையும், நான் கண்டுபிடிச்சு கொடுத்ததையும் உன் பாட்டிக்கிட்ட சொல்லாதே... 'அஜாக்கிரதையா இருக்கே'ன்னு, உன்னை திட்டுவாங்க.''''சரி... சுதா.'' சாதாரண பாத்திரங்களையே திருடி செல்பவர்கள் மத்தியில், இரண்டு சவரன் நகையை திருப்பி கொடுத்துள்ளாள். நேர்மை, நாணயம். அடுத்தவர்களின் பொருள் மீது ஆசைப்படாத குணம். மங்களத்தின் மனதில் மேலும் உயர்ந்து நின்றாள், சுதா.''போயிட்டு வர்றேம்மா.''''கொஞ்சம் நில்லு, நீயும் என் பேத்தி மாதிரி தான்... பிரிஜ்ல மல்லி பூ வச்சிருக்கேன்... எடுத்து தலைல வச்சிட்டு போ,'' என்றாள், மங்களம்.சுதா, தன் அம்மாவிடம் இதை சொல்ல, ''கடவுளே... இது, அப்படியே நீடிக்கணும்,'' என்றாள்.நாளாக ஆக, அந்த வீட்டில் ஒருத்தியாக ஆகி விட்டாள், சுதா. மூன்று மாதம் ஓடியது. அன்று, 'ஹோம் ஒர்க்' செய்து கொண்டிருந்த, மங்களத்தின் பேத்தி, ஒரு கணக்குக்கு விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.''என்ன... இப்படி முழிச்சுக்கிட்டு இருக்கே?'' என்றாள், சுதா.''ஒண்ணும் இல்லை, சுதா... இந்த கணக்கு புரியலை... அரை மணி நேரமா, 'டிரை' பண்ணிக்கிட்டு இருக்கேன்... விடையே வர மாட்டேங்குது,'' என்றாள். ''எங்க கொடு,'' என்று நோட்டை வாங்கியவள், பத்து நிமிடத்தில் அந்த கணக்கை போட்டு, எப்படி போடுவது என்று, புரியும்படி சுலபமாக சொல்லி கொடுத்தாள்.''சூப்பர்... எங்க டீச்சர் சொல்றப்ப கூட, எனக்கு இந்த அளவு புரியலை... இப்ப எனக்கு, 'ஈசியா' புரியுது.''இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த, மங்களத்தின் முகத்தில் மாற்றம்.ஒரு நாள், மதிய சாப்பாட்டிற்கு பின். குட்டி துாக்கத்துக்கு ஆயத்தமாகி இருந்தாள், மங்களம்.''வேலை எல்லாம் முடிச்சுட்டேம்மா... கிளம்பறேன்.''''ஒரு நிமிஷம் நில்லு, நேத்து நீ வச்ச சாம்பார்ல உப்பு இல்லை... துவைச்ச துணியில அழுக்கு சரியா போகலை... குப்பை அப்படியே இருந்தது... வந்து சேர்ந்த புதுசுல நல்லா வேலை செஞ்சே... ஒரு வாரமா, சரி இல்லை... இதே மாதிரி இருந்தா, இங்க தொடர்ந்து வேலை செய்ய முடியாது... ஜாக்கிரதை,'' என்றாள், மங்களம்.''இல்லம்மா... சரியா தான் பண்ணி இருக்கேன்... இனி, ஜாக்கிரதையா இருக்கேன்.'''மங்களம் நல்லவள் தான். முன்பெல்லாம் இப்படி இல்லையே... வேலை முடிந்து போகும்போது, 'சாப்பிட்டியா, சுதா... பார்த்து ஜாக்கிரதையா போ...' என்பாள்.'பேத்திக்கு, கணக்கு சொல்லிக் கொடுத்ததில் இருந்து தான், இப்படி நடந்து கொள்கிறாள். ஒரு பணிப்பெண், தன் பேத்தியை விட அறிவாளியாக இருப்பது, அவளுக்கு பிடிக்கவில்லையா... அதை வெளியில் சொல்ல முடியாமல், வேறு விஷயங்களில் தன் கோபத்தை காட்டுகிறாளா...' என, சுதாவுக்கு, ஒன்றும் புரியவில்லை.''நேத்து நீ வாங்கிட்டு வந்த கத்தரிக்காயில், நிறைய சொத்தை... வெண்டைக்காய், முத்தலா இருக்கு. வேலையில் கவனம் இல்லை. உன் அம்மாவ வர சொல்லி இருக்கேன்... வரட்டும் பேசிக்கிறேன்,'' என, மங்களம் சொல்ல சொல்ல, பகீரென்றிருந்தது, சுதாவுக்கு.அரை மணி நேரத்தில் வந்த, சுதாவின் அம்மாவிடம், ''நாளையில் இருந்து, சுதா வேலைக்கு வர வேணாம்... நின்னுக்க சொல்லிடு,'' என்றாள்.''அப்படி சொல்லாதீங்கம்மா... அவ சின்ன பொண்ணு... இப்ப தான், பிளஸ் 2 முடிச்சிருக்கா... தெரியாம தப்பு பண்ணி இருந்தா மன்னிச்சுக்குங்க.''''சின்ன பொண்ணு, அதனாலதாண்டி நிக்க சொல்றேன்... அவ அறிவை பார்த்து நானே அசந்துட்டேன். என் பேத்திக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவ... அறிவாளியை, நல்லா படிக்கற பொண்ண வேலைக்காரி ஆக்கி, அவ வாழ்க்கையை வீணடிச்சுடாதே... அவ, மேல மேல படிக்கட்டும். படிக்க வச்சா, பெரிய ஆளா வருவா.''''எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையாம்மா... புருஷன் இல்லாத நான், அவளை பிளஸ் 2 படிக்க வச்சதே பெரிய விஷயம். இன்னும் மேல படிக்க வைக்க, பணத்துக்கு எங்க போவேன்?''''அதை பத்தி நீ எதுக்கு கவலைப்படறே... நான் இருக்கேன். என் பேத்தி வயசு தான் அவளுக்கும்... எனக்கும் அவ பேத்தி தான். எவ்வளவு விரும்பறாளோ அவ்வளவு படிக்கட்டும். ஒருத்தர் அறிவாளின்னு தெரிஞ்சும், அவங்க வாழ்க்கையை வீணடிக்கறதும், அதை வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கறதும் பாவம்... ''இவ வேலைய விட்டுட்டா, குடும்பத்தை ஓட்ட என்ன பண்றதுன்னுதானே யோசிக்கறே... என் தோழி ஒருத்தி, வீட்டு வேலை செய்ய, நல்ல ஆள் வேணும்ன்னு கேட்டுட்டு இருக்கா... நீ அங்கேயும் செய்... நம் வீட்டுலயும் செய்... ரெண்டு வருமானம் வரும்... என்ன சொல்றே?'' மங்களம் சொல்ல, இருவரும் அவளின் காலில் விழுந்தனர். கே. ஆனந்தன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !