அந்துமணி பதில்கள்
தி.மகேஸ்வரன், நசரத்பேட்டை: ரூபாய் நோட்டுகள் அச்சிடும் காகிதம் இப்போதெல்லாம் தரமாக உள்ளனவே... அவை இந்தியாவிலேயே தயார் செய்யப்படுபவையா?இல்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பிரான்ஸ், சுவீடன், இங்கிலாந்து, நெதர்லாந்து, உக்ரைன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது.எம்.ஹரி, திருமங்கலம்: பனிப் பிரதேசத்தில் வாழும் மக்களை, 'எஸ்கிமோ' என்று அழைக்கின்றனரே... அதன் பொருள் என்ன?'எஸ்கிமோ' என்றால் பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று பொருள். இது செவ்விந்திய மொழி. இவர்களுக்கு இப் பெயரைச் சூட்டியவர்கள் ஐரோப்பியர்கள்!வே.சக்திபிரியா, சிட்லபாக்கம்: பெண்களுக்கான, 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மீண்டும் மீண்டும் தோல்வி அடைவது ஏன்?சிட்டிங் ஆண் எம்.பி.,களில், 180 பேரை, 'பலி' இட வேண்டி வரும், 33 சதவீதத்தை அமல் படுத்தினால்! எந்த எம்.பி.,தான் சம்மதிப்பார்? எந்தக் கட்சி தான் சம்மதிக்கும்? எல்லா கட்சிகளும் வேஷம் போடுகின்றன.ப.விஜயன், பல்லவன்நகர்: என் வாழ்வு துன்பம் நிறைந்ததாகவே உள்ளதே...ஒரு மனிதனை, மனிதனாக்குவது பிறரின் உதவிகளோ, அவனுக்குக் கிடைக்கும் மிதமிஞ்சிய வசதிகளோ அல்ல; இடையூறுகளும், துன்பங்களுமே ஒரு மனிதனை மனிதனாக்குகிறது. பொறுமை, காலம், இயற்கையே சிறந்த மருத்துவர்களாக இருந்து துன்பத்தைப் போக்குகிறது! டி.குமரன், பெருமாள்பட்டு: மனிதனின் மாபெரும் சக்தி எது? அந்த சக்தியை ஒவ்வொருவரும் பெற வழி என்ன?நம்பிக்கை! மனிதனை வாழ வைக்கும் மாபெரும் சக்தி நம்பிக்கையே! ஆத்மார்த்தமாக தன் மனதுடன் பேசும் திறமையை கையகப்படுத்துபவனிடம் அந்த சக்தி வந்து சேரும்!கே.ராமனுஜம், காஞ்சிபுரம்: மனைவி கோபமாக இருக்கும் போது கணவன் என்ன செய்ய வேண்டும்?நமக்கு அந்த அனுபவமில்லை... லென்ஸ் மாமாவிடம் கேட்டேன். அவர் சொன்னது: கணவனும் கோபம் கொண்டு கத்தி, ரகளையில் ஈடுபடக் கூடாது; அமைதி காக்க வேண்டும். ஏனெனில், மனைவியின் கோபத்துக்கு காரணமே, கணவனின் வேண்டாத செயலாகத்தான் இருக்கும், என்றார். அது சரி... நியாயமான காரணமில்லாமல் பெண்களுக்கு கோபம் வராதே!ஆர்.ஹேமலதா, மயிலாப்பூர்: குடும்ப கஷ்டம், நிதிநிலை பற்றி குழந்தைகளுக்குத் தெரிவிப்பது சரியா?தெரிவிக்க வேண்டியது பெற்றோரின் கண்டிப்பான கடமை! பள்ளித் தோழர், எதிர்வீடு, அக்கம் பக்கம், உறவுக் குழந்தை போல சவுகரியங்களை, ஆடம்பரத்தை குழந்தைகள் எதிர்பார்ப்பது சகஜம். நம் நிலைமையை நேர்மையாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதே போல, 'செய்கிறேன்' என, வாக்குக் கொடுத்து விட்டால், பின்னர் ஏமாற்றக் கூடாது!ஜி.சிவசங்கரன், கோவிலம்பாக்கம்: தினமும், 10 மணி நேரம் தூங்க வேண்டியுள்ளது எனக்கு! அதற்கு முன் எழுந்தால், உடல் வலி எடுக்கிறது. என் வயதோ, 22 தான்...இவ்வளவு நேரம் தூங்குவது கெடுதலா?இருப்பத்திரெண்டு வயது வாலிபனுக்கு ஐந்து மணி நேர தூக்கமே போதும். மறைந்த பிரதமர் நேரு, தினமும் ஐந்து மணி நேரத்திற்கு மேல் தூங்கியது கிடையாதாம். எட்டு மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள் உருப்படுவது இல்லை!