அந்துமணி பதில்கள்
வி.அருளானந்தன், நங்கநல்லூர்: ஆண்களைப் போல் பெண்களும், ஒரே நேரத்தில் இருவரை காதலிக்கின்றனரே... என்ன காரணம்?ஆண்களுக்கு என்ன காரணமோ அதுவே பெண்களுக்கும் இருக்கக் கூடாதா?ஜெ.தங்கராஜ், நீலகிரி: இந்தியாவில் எப்படிப்பட்ட புரட்சி வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?கியூபா மற்றும் பிரான்சில் ஏற்பட்டது போன்று மக்கள் புரட்சி வெடித்து, ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊரை விட்டு, நாட்டை விட்டே ஓடிப்போகும் விதத்தில் அமைய வேண்டும். இவ்வித புரட்சியில் ரத்தக் களறி ஏற்பட்டு, பல அப்பாவிகளும் உயிர் இழக்க வேண்டி இருக்கும். ஆனாலும், ஒரு நாடே உருப்பட போவதால், இவ்விழப்புகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!டி.புனிதவதி, தேனி: துன்பம் வந்தால், ஆறுதல் தேடுவது எப்படி?'ஏதோ, இதோடு போயிற்றே...' என்று எண்ணி ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்!இ.எஸ்.குலசேகரன், திருப்புவனம்: நம் நாடு முன்னேறாததற்குக் காரணம் என்ன?மக்களைப் புரிந்து கொண்டு விட்டனர் அரசியல்வாதிகள். இன்னும் அரசியல்வாதிகளை புரிந்து கொள்ளவில்லை மக்கள். இதுவே நாடு பின்தங்கி இருப்பதற்கு காரணம்!என்.எஸ்.வாஞ்சிநாதன், மேடவாக்கம்: தன் தகுதிக்கு மீறிய பெண்ணை காதலிக்கலாமா?தகுதிக்கு மீறிய பெண்ணை, வலியச் சென்று காதலித்தால், 'டேஞ்சர்!' பின்னி எடுத்து விடுவர். அவர்களாகவே முன் வந்தால், 'கன்சிடர்' செய்யலாம்!டி.சுலைமான், விழுப்புரம்: இருபத்தி இரண்டு வயது மகன், தண்டச் சோறு சாப்பிட்டால்...கண்டிப்பாக திட்டுவர்; ஏளனமாக பேசத் தான் செய்வர். உடனே, ஒரு வேலையை தேடிக் கொள்வது புத்திசாலித்தனம். 'வேலை எங்கே கிடைக்கிறது?' என, எதிர் கேள்வி கேட்பது சோம்பேறித்தனம், திமிர்த்தனம்!எஸ்.மதுமிதா, கொரட்டூர்: பாடங்களை மனப்பாடம் செய்யும் போது கவனம் சிதறாமல் இருக்க வழி சொல்லுங்களேன்...அடிப்படையே தவறு. பாடங்களைப் புரிந்து படிக்க பழக வேண்டும். மனப்பாடம் செய்தால் பரீட்சையுடன் மறந்து விடும்; வாழ்க்கைக்கு பயன்படாது.வி.வெங்கட்ரமணன், கும்மிடிப்பூண்டி: தர்மம் செய்வோருக்கும், உண்மை பேசுவோருக்கும் இந்த காலத்தில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நிம்மதி ஏற்பட மாட்டேங்குதே...எதையோ எதிர்பார்த்து செயல்படுவதில் உண்மையும், தர்மமும் எப்படி இருக்க முடியும்? எதையுமே எதிர்பாராமல் தர்மம் செய்து, உண்மையாக இருந்து பார்க்கலாமே!டி.தனபால், அம்பத்தூர்: என்ன தான் கடுமையாக உழைத்தாலும், பற்றாக்குறை தொடர்கிறதே...தேவைகளைக் குறைத்துக் கொள்வதுடன், அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பதற்காக செய்யும் செலவுகளை நிறுத்தி, பர்சை திறக்கும் முன், 'இது தேவையா?' என எண்ணினால், பற்றாக்குறை பறந்து போய், சேமிப்பு வந்து சேருமே!