அந்துமணி பதில்கள்!
* டி.முகமது, துலுக்கபட்டி: உலகில், குற்றவாளி,- மிகக் கொடிய குற்றவாளி என எவர், எவரை வகை பிரிக்கின்றனர்?பொய் சாட்சி சொல்கிறவன் குற்றவாளி; நீதி தேவதையின் முன், பொய் சாட்சி சொல்ல அனுமதிப்பவன் மிகக் கொடிய குற்றவாளி. இவன், சகல துன்பங்களையும் அனுபவித்து பின், 'போய் சேர்வான்!'து.மதுசூதனன், நெய்வேலி: பெண்களின் தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்திற்கும் உள்ள இடைவெளியின் அளவு என்ன?தலைக்கனம் என்ற பேச்சுக்கே பெண்களிடம் இடம் இல்லை. அவர்களின் தன்னம்பிக்கைதான், பலருக்கும் தலைக்கனமாக தெரிகிறது!எஸ்.சவுந்தர்ராஜன், பொள்ளாச்சி: இளமை, கவிதை, காதல், கற்பனை இதில் எது சுகம்?முதல் மூன்றையும், நான்காவதின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்பதால், கற்பனையே சுகம். ஆனால், எப்போதும் கற்பனையில் மூழ்கி கிடந்தால், வாழ்க்கை என்னும் பஸ்சை,'மிஸ்' பண்ண வேண்டியது தான்!டி.பார்த்திபன், கோடாங்கிபட்டி: என்ன தான் கடுமையாக உழைத்தாலும், பற்றாக்குறை தொடர்கிறதே...தேவைகளைக் குறைத்துக் கொண்டால் போதுமே... அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பதற்காக செய்யும் செலவுகளை நிறுத்தினால் போதுமே... பர்சை திறக்கும் முன், 'இது தேவையா?' என, எண்ணினால் போதுமே... பற்றாக்குறை பறந்து போய், சேமிப்பு வந்து சேருமே!* சி.எஸ்.அருளானந்தம், ஆண்டிபட்டி: ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்தவர்களை பணிமாற்றம் செய்வதால் மட்டும் திருந்தி விடுவரா?மாட்டார்கள்; அவர் பதவியை பறித்து, விசாரணை வைத்து, கம்பி எண்ண வைக்க வேண்டும்; இதை காணும் மற்றவர்கள் அஞ்சி நடப்பர். ஹூம்... இதெல்லாம் நம்மூரில் நடக்கக் கூடியதா?* ம.தர்மசீலன், கடலுார்: தமிழக காங்கிரசில் எப்போது தான் கோஷ்டி பூசல் நிற்கும்?அக்கட்சி இருக்கும் வரையில், கோஷ்டி பூசல் நிற்க போவதில்லை; அதை நிறுத்தவும் டில்லி மேலிடம் முயலாது. ஏனெனில், பிரித்தாள்வதே அதன் கொள்கை. காமராஜர் மற்றும் மொரார்ஜி போல தனி செல்வாக்குடன் தலைவர்கள் வளர்வதை, ஒரு போதும் தலைமை விரும்பியது இல்லை; அதனாலேயே, கோஷ்டி பூசலுக்கு ஆதரவளித்து, அதை வளர்த்து வருகிறது.எம்.ரவீந்திரன், உத்தங்குடி: மதுபானம் அருந்தினால் கவலை ஒழியும் என்கின்றனரே... நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?ஒப்புக் கொள்ளவே முடியாத, 'ஸ்டேட்மென்ட்!' கொழுப்பெடுத்தவர்கள் அடிக்கும் கூத்து இது. உடம்புக்கும், காசுக்கும் பிடித்த கேடு மதுபானம்!