உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

சுபா தியாகராஜன், சேலம்:ஆண்களை விட, திறமை கொண்ட பெண்கள், ஒரு நிலைக்கு மேல் வெற்றி பெற முடியாததன் காரணம், அவர்கள் மீது சுமத்தப்படும் வீட்டு நிர்வாகம் காரணமா?இல்லவே இல்லை... ஒரே ஒரு உதாரணம்... நிர்மலா சீதாராமன்... நம், மத்திய நிதி அமைச்சர்!ரா. மனகாவலன், சென்னை: சிவப்பு விளக்கு எரிந்தாலும், பல வாகனங்களும் நிற்பதில்லையே... இந்த சட்ட மீறலை, தடுக்க என்ன வழி?அந்த வாகனங்களை, 'பிடித்து'ப் போட வேண்டும்... திரும்பத் தரக்கூடாது... அப்போது தான் திருந்துவர்!* எம். புகழேந்தி, சென்னை: போதையில் மிக அதிக போதை தருவது எது?'விஸ்கி, பிராந்தி, ஒயின், பீர் மற்றும் மங்கையர் தராத போதையை, புகழ்ச்சி தந்து விடும்...' என்கிறார், லென்ஸ் மாமா!எம்.ஏ. நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி மாவட்டம்: பல ஆண்டுகளாக, குற்றாலத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறீர்களே... ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு என, ஏன் மாற்றக் கூடாது?அங்கெல்லாம், குளிர் காரணமாக, ஸ்வெட்டர் அணிந்து, ஓட்டல் அறையில் அடைந்து கிடக்க நேரிடும்; குற்றாலம் என்றால், மற்ற வாசகர்களுடன் இணைந்து, வாழ்நாள் முழுவதும் நட்பு கொண்டாட முடியும்... அதனால் தான்!* என். ரத்னா நாகராஜ், சென்னை: நீர் நிலைகளில் வீடு கட்ட அனுமதி கொடுத்து, தண்ணீர், மின்சார இணைப்பு கொடுத்து, அவர்களை, அங்கிருந்து அப்புறப்படுத்துவது நியாயம் தானா?நியாயம் தான்! அங்கு, வீடு கட்டியவர்களின் அறியாமையே இதற்கு காரணம்!பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம்: சென்னையில், 'வாட்டுகிறது' அதே நேரம், மும்பையில், 'கொட்டுகிறதே' - இயற்கையிடமும் இப்படி ஒரு விளையாட்டா?அது, விளையாட்டல்ல; இயற்கை! மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் பெய்வது, தென் மேற்கு பருவ மழை... ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் ஆரம்பிக்கும்... கொட்டோ கொட்டு என்று கொட்டும்!நம்மூரில் பெய்வது, வட கிழக்கு பருவ மழை... அக்டோபரில், காந்தி ஜெயந்தி அன்று பெய்ய ஆரம்பித்து, கொட்டும். ஆனால், அதை சேமித்து வைக்க, இங்குள்ள, அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ தயாரில்லை!* பெ.ம. அபிராமி, திருப்பூர்: காமராஜர், கக்கன் போன்ற அரசியல்வாதிகள், இனி, தமிழகத்தில் சாத்தியமா?இரவில் நன்றாக சாப்பிட்டு விட்டு, இருக்கும் கவலை எல்லாம் மறந்து துாங்குங்கள்; கனவில், மேற்கண்டவர்களைப் போல், தமிழகத்திற்கு மீண்டும் கிடைத்து விட்டதாக நினையுங்கள்... அவ்வளவு தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !