அந்துமணி பதில்கள்!
பொன்விழி, அன்னுார்: வீட்டிலும், அலுவலகத்திலும், ஓயாது பணிபுரியும் தாய்மார்களுக்கு, என்ன கைமாறு செய்யலாம், குடும்பத் தலைவர்கள்?விடிகாலையில், 'ஆவின்' பால், 'பாக்கெட்'டை வெட்டி, பால் காய்ச்சுவது, காபி தண்ணி போடுவதில் ஆரம்பித்து, காலை - மதிய உணவிற்கான காய்கறி தயார் செய்து கொடுப்பது வரை செய்தால் போதுமே; இதைவிட பெரிய கைமாறு இருப்பதாகத் தோன்றவில்லை!எம். நாதமுனி, சென்னை: 'ரெய்டு' நடக்கும்போதெல்லாம், 'நான் சட்டப்படி பார்த்துக் கொள்வேன்' என்கின்றனரே... அது பற்றி...சட்டப்படி கவனித்துக் கொண்ட, ஜெ.,வுக்கு, நான்கு ஆண்டுகள் கிடைத்தன; அவரது தோழி, 'உள்ளே' தான் இருக்கிறார்! இன்னொருவர், 106 நாள், 'கம்பி' எண்ணி விட்டு, ஜாமினில் வந்துள்ளார்... அவர் மீண்டும், 'எண்ணும்' நாள் விரைவில் வரும்!எஸ். சசி பிரபு, சென்னை: சில தமிழ் வார, மாத இதழ்கள், தமிழகம், புதுச்சேரியில் ஒரு விலையும், மற்ற மாநிலங்களில் சற்று கூடுதலான விலையும் வைத்து விற்பது ஏன்?'டிரான்ஸ்போர்ட்' செலவு தான்! இங்கிருந்து அங்கே அனுப்புவதற்கு வேன் வாடகை கொடுக்க வேண்டும் அல்லவா? அதை, வாசகர்கள் தலையில் கட்டுகின்றனர்; இது, நியாயம் தானே!* சா. சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், நெல்லை மாவட்டம்: தான் சாதித்தது போல், எவரும் சாதிக்கவில்லை என்கிறாரே - வைகோ!உண்மையாக இருக்கலாம்; அவர் மீது அவ்வளவு வழக்குகள், 'பென்டிங்'கில் உள்ளனவே! ந. வளர்மதி, மதுரை: நெல்லை தமிழ், சென்னை தமிழ், மதுரைத் தமிழ், குமரி தமிழ்... உங்கள் பேச்சில், எந்தத் தமிழ் அதிகம் இடம்பெறும்?தமிழ் மட்டுமல்ல... ஆங்கிலத்திலும், அது - இங்கிலாந்தாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும், மாவட்டத்திற்கு மாவட்டம், பேச்சு மொழி அழகு மாறுபடும்! 'குமரி'யின் விருப்பம் கொண்டவன் நான்!* பி. சந்தீப், சுண்டன்பரப்பு, கன்னியாகுமரி: தன் வேலையை மிகச் சிறப்பாக செய்த, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி, பொன்.மாணிக்கவேலை, வீட்டுக்கு அனுப்புவதில், மாநில அரசு, இவ்வளவு வேகம் காட்டியது ஏன்?மாணிக்கவேலால், தாமும் மாட்டிக்கொள்வோம் என்ற பயமாக இருக்கலாம்!