அந்துமணி பதில்கள்...
* பா. சரவணன், தச்சநல்லுார், நெல்லை: பா.ம.க., உட்பட சில கட்சிகள் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்கின்றனரே...தமது கட்சிகளை, மக்களும், தம் ஜாதியினரும் மறந்து விடுவரோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்! இதனால் தான், இவ்வாறு நடந்து கொள்கின்றனர்!* எஸ். கணபதி, நெல்லை: தமிழகத்தில் ஜாதிப் பிரச்னை என்று தீரும்?எந்த, 'அப்ளிகேஷனை' எடுத்தாலும், 'நீ என்ன ஜாதி' என்ற கேள்வி உள்ளதே! அதைப் பார்த்ததுமே, பிரித்து வைத்து விடுகிறதே அரசு! இது இல்லாமல் போனால் தான் பிரச்னை தீரும்!எம். மிக்கேல்ராஜ், சாத்துார்: உமது, வாக்கை எத்தனை மணிக்கு பதிவு செய்தீர்கள்?மிகச் சரியாக, 7:00 மணிக்கு வரிசையில் நின்றேன். சரியாக, 7:30 மணிக்கு, இடது கை ஆள் காட்டி விரலில் மையிட்டனர்!வி. சேகரன், குற்றாலம்: 'கடுமையாக உழைத்தும் முன்னேற முடியவில்லை. எல்லாம் என் தலைவிதி...' என்கிறானே நண்பன்...'தலைவிதி' என்று சொல்லக் கூடாது, உங்கள் நண்பர்! அவருக்கு, தன்னம்பிக்கை குறைவாக உள்ளது. அத்துடன், சொந்த திறமையும் இல்லை. இதனால் தான் தமக்கு ஏற்படுவதை, 'தலைவிதி' என்று கூறுகிறார்!வ. குருநாதன், துாத்துக்குடி: எதைக் கண்டால் பயப்படுவீர்கள்?காலையில் தினசரி காலண்டரின் சீட்டை கிழிக்கும்போது! அது, திங்கள் கிழமை என்று காட்டும்; கண் மூடி திறப்பதற்குள், ஞாயிறு காட்டும். காலம், இவ்வளவு வேகமாக ஓடுகிறதே என்பதை நினைத்து பயம்!* ஆ. கனகராஜ், நாகர்கோவில்: நடந்து முடிந்த தேர்தலுக்கு முன், ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து, அரசியல்வாதியாக முடிவு செய்திருந்தேன்; நடக்கவில்லை. அரசியலில் சேர என்ன தகுதி வேண்டும்?உங்களுக்கு தொண்டை இருக்கிறதா, குரல் வளம் இருக்கிறதா, கூச்சப்படாமல், நாசூக்காக, 'கை நீட்டும்' தைரியம் உண்டா... இந்த தகுதிகள் போதும் அரசியல்வாதியாக!கு. கணேசன், பனங்கோட்டூர்: தமிழக சட்டசபை தேர்தலில், 28 சதவீதம் பேர் ஓட்டுப் போடாமல் புறக்கணித்திருக்கின்றனரே, சோம்பேறித்தனமா அல்லது ஓட்டுப் போடுவதை கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றனரா?நீங்கள் கூறியவற்றுடன் சேர்த்து, 'யார் ஆட்சிக்கு வந்தால் என்ன... நமக்கு ஒரு பலனும் இல்லையே...' என்ற எண்ணமும் ஒரு காரணம்!