அந்துமணி பதில்கள்!
எஸ். வைத்தியநாதன், மதுரை: 'மொபைல் போன் வீடியோ, கேமரா எல்லாம் இருந்திருந்தால், 15 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழக முதல்வர் ஆகியிருப்பேன்...' என, சரத்குமார் கூறுகிறாரே...கண்டிப்பாக... ஏதாவது சினிமாவில் முதல்வர் வேடம் கிடைத்திருக்கும்! * ம. வசந்தி, திண்டிவனம்: காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே, சுயமாக, சுதந்திரமாக முடிவெடுக்க முடியுமா?நமது ஜனாதிபதி போலவே, இவரும், 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆகவே இருப்பார்... நேரு குடும்பத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டே நடப்பார்! ரா. ராஜ்மோகன், விழுப்புரம்:'தினமலர்' நாளிதழ் துவக்கப்பட்டதன் நோக்கம் என்ன?சுதந்திரம் பெற்ற பிறகு, குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்தது... அதை தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என, போராட்டம் நடந்தது... அதை ஆதரிக்கவே, திருவனந்தபுரத்திலேயே, 'தினமலர்' நாளிதழ் தொடங்கினார், நிறுவனர், டி.வி.ஆர்., ஆர். ஜெயபாரதி, சாத்துார்: பீகார் முதல்வர், நிதிஷ்குமார், தேசிய அரசியலில் இறங்க போகிறாராமே... கரை சேருவாரா?ஏன் இப்படி தமாஷ் கேள்விகள் எல்லாம் கேட்கிறீர்கள்... அவர், கரை ஓரம் நிற்பதற்கு கூட இடம் கிடைக்காது!* எம். முத்து, திருச்சி: 'தர்மம் தலை காக்கும்' என்கின்றனரே... அது சரி... ஆனால், உடலை எது காக்கும்?நம் நாக்கு தான், உடல் காக்கும்... அசந்தால், அது தின்று கெடுக்கும்!ஆர். பத்மப்ரியா, திருச்சி: உங்கள் குருநாதர், லேனா தமிழ்வாணனிடம் நீங்கள் கற்ற பாடங்கள் என்னென்ன?'உனக்கு வரும் கேள்விகளுக்கு நீயே பதில் சொல்ல வேண்டும்...' என்று, அவர் கூறிய பாடத்தைத் தான் கற்றுக் கொண்டேன்! நெல்லை குரலோன், பொட்டல்புதுார்: திருமாவளவன், தேசிய அரசியலுக்கு தாவுகிறாரா?அதற்கு அவர் முயற்சிப்பது தெரிகிறது... ஆனால், அவருக்கு தான் ஹிந்தி தெரியாதே... ஹிந்தி எதிர்ப்பாளரும் ஆச்சே... எப்படி தேசிய அரசியலுக்கு செல்ல முடியும்?