உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

*எம்.ராமசாமி, புதுச்சேரி: ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம், 'டிவி' பார்க்கலாம்?காலையிலும், மாலையிலும் செய்தி நேரத்தின் போது, தலைப்பு செய்திகள் பார்க்க மட்டும் நேரம் ஒதுக்குங்கள்... மற்ற நேரம், 'டிவி' பக்கமே போகாமலிருந்தால், எவ்வளவோ பயனுள்ள வேலைகளைச் செய்ய முடியும். பரீட்சித்துதான் பாருங்களேன்!***** ஆர்.விஜயகுமார், திருப்பூர்: சென்னை நகர் எப்போது, 'எழில்மிகு சென்னை' ஆகப் போகிறது?நம் கனவில் தான் எழில் மிகு சென்னையைக் காண முடியும்... ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னையில் தஞ்சமடைகின்றனர்... இங்கே இருக்க இடமில்லை; குடிக்க தண்ணி இல்லை... தலைநகரை மாற்றி, மாற்றி, துறைமுகங்களில் வசதியைக் கூட்டி, கப்பல்களை திசை திருப்பி, அரசு துறைகளை, தொடர் புடைய மாவட்டங்களுக்கு துரத்தினால் தான் எழில்மிகு சென்னை நிஜமாகும்!****எம்.ராஜன், ராஜபாளையம்: விடுமுறை நாளில் எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள்?ஒரு உண்மையை சொல்லட்டுமா? எனக்கு விடுமுறையே கிடையாது... 'வேலையே விடுமுறை!' என்ற பாலிசி உள்ளவன்... அப்புறம் எங்கே வருகிறது, 'பொழுதைக் கழிக்கும்' பிரச்னை!***** ரா.நாகரத்தினம், பழனி: நன்றி மறந்தவர்களை தண்டிப்பது எப்படி?தண்டனை கொடுக்க நாம் யார்? நன்றி மறந்தவருக்கு தண்டனை கொடுப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டே இருந்தால், நம் நிம்மதி குறையும்... பல தொல்லைகளும் வந்து சேரும்! அவரவருக்குக் கிடைக்க வேண்டியது, அந்தந்த நேரத்தில் கிடைத்தே தீரும்... நிம்மதியாக மற்ற வேலைகளைப் பாருங்கள்!****க.தங்கதுரை, அத்திகுளம்: விலைவாசி ஏற்றத்திலும் சிக்கனத்தைக் கடைபிடிப்பது எப்படி?ஒரு பொருளை வாங்கும் முன், 'இது இல்லாம வாழ முடியாதா?' என உங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்புங்கள்... 'முடியும்' என்ற பதிலை மனம் சொல்லும்... பர்ஸ் காலியாகாது!***** எஸ்.வி.மணியன், வடமதுரை: வேலையில்லா திண்டாட்டம் எப்போது ஒழியும்?பிறரிடம் வேலை கேட்கும் பழக்கம் என்று ஒழிகிறதோ அப்போது இப்பிரச்னை தீரும். ஒவ்வொருவரும் தம் தகுதிக்கு ஏற்ப தமக்கென ஒரு தொழிலை மேற் கொள்ள வேண்டும். அப்போது, வேலை யில்லை என்ற சொல்லைக் கேட்க முடியாது!****எஸ்.ராம்குமார் ராஜா, ராமநாதபுரம்: சென்னைக்கு வந்தால் பிழைக்கலாமா?புத்திசாலித்தனமாக உழைக்கும் திறமை இருந்தால், உங்க ஊரிலேயே பிழைக்க முடியும்... சென்னைக்கு வரவே வராதீர்கள்... இங்கே குடியிருக்க இடமே இல்லை! ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !