உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

வயது வித்தியாசம் இல்லாமல் நட்புக் கொள்ளும் பழக்கம் என்னுடையது என்பது நீங்கள் அறியாததா?நண்பர் மகன் திருமணம். 'கண்டிப்பாக வர வேண்டும்!' என, தம் சகதர்மினியுடன் சென்னை வந்து என்னையும், லென்ஸ் மாமாவையும் அழைத்துச் சென்றார். திருமணம் மதுரையில்!ரயில் கிளம்ப அரை மணிக்கு முன்பாகவே, 'எக்மோர்' ரயில் நிலையத்தை அடைந்தோம். எங்களுக்கு, 'சீட்' ஒதுக்கப்பட்ட பெட்டியின் அருகே, பிளாட்பாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, மாமாவின் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்திற்குப் பின் ஒரே இடத்தில் நிலைக் குத்தி நின்றது.அங்கே —சுரிதார் அணிந்த மூன்று இளம் பெண்கள். பிளஸ் சேலையில் ஒரு பெண். தம்மை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவருமே ரயிலில் பயணிக்கப் போகின்றனரா அல்லது ஓரிருவர் பயணப்படவும், மற்றவர் வழியனுப்பவும் வந்துள்ளனரா என என்னால் அனுமானிக்க முடியவில்லை. லென்ஸ் மாமாவை இழுத்துக் கொண்டு பெட்டிக்குள் ஏறி அமர்ந்தேன்.ரயில் கிளம்பியது. எங்களது, 'கேபினில்' நடுத்தர வயதை கடந்த ஒரு பெண்மணி அமர்ந்து இருந்ததால், லென்ஸ் மாமா, பெட்டிக்குள்ளேயே, அமர்ந்தபடி வெண்குழல் வத்தி பற்ற வைக்க முடியாமல் தவித்து, அவ்வப்போது வெளியே சென்று புகைத்து விட்டு வந்து கொண்டிருந்தார். தாய்க்குலத்திற்கு மதிப்பு அளிக்கும் செயலாம் அது!செங்கல்பட்டைத் தாண்டியது ரயில். பெட்டிக்குள்ளே தாய்க்குலம் இருப்பதால், அங்கேயே உற்சாகபானமும் சாப்பிட முடியாதே!— சங்கடத்தில் நெளிந்தார் லென்ஸ் மாமா!பெட்டியின் கண்டக்டர், மாமாவிற்கு நன்கு பழக்கப்பட்டவர். அவரிடம், 'பாய்... உங்க சீட்டு காலியாத் தானே இருக்குது? அங்கே வந்து என் கச்சேரியை ஆரம்பிக்கட்டுமா?' என்றார்.கண்டக்டர்களின் சீட்டு, பெட்டியின் நடுவே, நடைபாதையில் கழிவறையை ஒட்டி அமைந்திருக்கும். இரண்டடிக்கு இரண்டடி தான் இருக்கும்.'அங்க, ரயில்வே விஜிலன்ஸ் ஆபிசர் ஒட்கார்ந்து இருக்கான்... நீங்க பெட்டியிலே ஏறினதுமே, அந்த சீட்டை உங்களுக்காக ஒதுக்கி வைக்கணும்ன்னு முயற்சி பண்ணேன்; முடியலே. நீங்க, இந்த பக்கமா (ரயில் பெட்டியின் இன்னொரு கோடி!) உட்காருங்க... என் டிரங்க் பெட்டியை இங்கே கொண்டாந்து போடுறேன்...' என்றார்.பின்னர் என்ன தோன்றியதோ, அந்த ரயில்வே விஜிலன்ஸ் ஆபிசரிடம் பேசி விட்டு, வந்த கண்டக்டர், 'வாங்க சார்... அங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம்...' என லென்ஸ் மாமாவின் காதைக் கடித்தார்.வி.ஆபிசரும், மாமாவும் ஒரே சீட்டில், 'அட்ஜஸ்ட்' செய்து அமர, ரயில் பெட்டியின் கதவைத் திறந்து, வாசல் ஓரம் காற்று வாங்கியபடியே கண்டக்டர் உட்கார, நான் நின்றபடியே இருந்தேன்.உ.பா., சுறுசுறுவென்று மாமாவின் முகுளத்தை தாக்கத் துவங்கியது, அவரது பேச்சில் தெரிய ஆரம்பித்தது. விஜிலன்ஸ் ஆபிசரிடம், ரயில்வேயின் ஊழல்கள் பற்றி திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் போதே, வி.ஆ., 'சார் நான் ரிட்டையர் ஆகிட்டேன்...' என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.மாமாவுக்கு இதை விட என்ன சாக்கு வேண்டும், முழு சீட்டையும் பிடித்துக் கொள்ள?'சார்... இரண்டு பேரும் இடஞ்சலா ஒரே சீட்டில் உட்கார்ந்து இருக்கிறோமே... நீங்க அப்படி, வசதியா கதவுப் பக்கம் தரையில் உட்காரலாமே...' என, வி.ஆ.,வைக் கிளப்பி விட்டார்.மாமாவும், விஜிலன்ஸ் ஆபிசரும், ரயில்வே துவங்கி, அமெரிக்க அரசியல் வரை பேசினர்.விஜிலன்ஸ் ஆபிசர் நெற்றி அடி போல பேசிய ஒரே ஒரு, 'பாயின்ட்' இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...பொது வாழ்வுக்கு வந்துவிட்ட அரசியல்வாதிகளுக்கு, 'மொராலிட்டி...' -ஒழுக்கம் வேணும் சார்... அமெரிக்காவுலே, கல்யாணம் ஆகாமலே, ஆணும்-பெண்ணும் சேர்ந்து வாழ்கின்றனர்... ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகும் என்ற நிலையை அடைந்த பின்னே திருமணம் செய்து கொள்கின்றனர். 13-14 வயதிலேயே, சிறுவர்-சிறுமியர், 'டேட்டிங்' செய்கின்றனர் - உடல் தொடர்பை அவ்வயதிலேயே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.தனக்கு பிடித்த ஆணையோ - பெண்ணையோ வீட்டுக்கு அழைத்து வருவதை, அமெரிக்க பெற்றோர் தடுப்பதில்லை... மாறாக, தாம் பெற்றது பெண்ணாக இருந்தால், 'கர்ப்பமடையாமல் பார்த்துக் கொள்...' என ஆலோசனை கூடக் கூறுகின்றனர்... இப்படி, 'மொரைல்' - ஒழுக்கம் கொஞ்சமும் இல்லாத நாட்டின் மக்கள், தம்மை ஆள தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகள் ஒழுக்கம் மிக்கவர்களாக, தம் மனைவி தவிர மற்ற பெண்களிடம் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கண்டிப்பாக இருக்கின்றனர் என்பதை பல சம்பவங்கள், உதாரணங்களின் மூலம் நாம் அறிகிறோம்.இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால் தான் நாட்டை நல்வழியில் நடத்திச் சென்று, மக்களை சுபிட்சமடையச் செய்ய முடியும் என நம்புகின்றனர்; அதுவே உண்மையும் கூட...இங்கே, நம்ம ஊரை எடுத்துக்குங்க... சட்டப்படி கல்யாணம் பண்ணாத லேடியைக் கூட பொது நிகழ்ச்சிகளுக்கு மிகத் தைரியமா கூட்டி வரும் அரசியல்வாதிகளை ஏற்றுக் கொண்டு, அந்த அரசியல்வாதிகளுக்கு ஓட்டும் போடும் ஏமாளி மக்களும் இங்கு இருக்கும் வரை நம் மக்களும் - நாடும், அமெரிக்கா போல, ஜப்பான் போல முன்னணி நிலைக்கு வரப்போவதில்லை எனக் காட்டமாக, அதே நேரம் விவரமாக அலசி ஆராய்ந்து பேசியது நாம் எல்லாரும் சீரியசாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய சமாச்சாரம். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !