உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா'மாஜி' அமைச்சர் ஒருவரை சந்திக்க வேண்டிய கட்டாயம்... பதவியில் இருந்த சமயம், அவர் குடியிருந்த வீட்டுக்குச் சென்ற போது, 'இப்போது தான் காலி செஞ்சுட்டுப் போனாங்க... புது அட்ரஸ் தெரியாது...' என்றனர், அங்கிருந்தவர்கள்!உடைந்த அணியின் ஒரு பிரிவைச் சார்ந்தவர், அவர். சரி... அந்த பிரிவின் அலுவலகத்தில் விசாரிக்கலாம் என்று முயன்றதில், அந்த அணிக்கென தனி அலுவலகம் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.'எப்படியோ கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு... கடைசியிலே லேடி மெம்பர் சிபாரிசுலே...' என, ஏதோ ஒரு படத்தில் தமாசு நடிகர், 'சோ' வசனம் பேசுவார். அது போல இல்லாவிட்டாலும், ஒரு வழியாக, 'மாஜி'யின் விலாசத்தை கண்டுபிடித்து காணச் சென்றேன்.மாலை, மணி, ௭:00 -ஒரே, 'காம்பவுண்ட்டில்' இருக்கும் இரட்டை வீடுகளில் ஒன்றான பின்பக்க வீட்டில், புது ஜாகை போட்டுள்ளார்.டாலி, டவாலி, போலீஸ், செக்யூரிட்டி... ஏன் வாசலில், 'லைட்' கூட இல்லை; அப்புறம் தானே கட்சிக்காரர்கள்!சிறிய வீடு!அமைச்சராய் இருந்தபோது கிடைத்த பரிசுப் பொருட்களை கூட வைக்க இடமில்லாமல், அவை வெளியே வராந்தாவில் கிடந்தன!ஹாலில் இருந்த விலை உயர்ந்த, 'சோபா'வில் உட்கார்ந்து, 'வயலும் வாழ்வும்' பார்த்துக் கொண்டிருந்தார்.அறிமுகப்படுத்திக் கொண்ட பின், இரண்டு காபி சொன்னார். அதில் ஒன்றில் அதிக சர்க்கரை போட்டு எடுத்து வரச் சொன்னார். (அது அவருக்கு!)நொந்து போய் இருந்தார்.'ஏமாத்திப் புட்டாங்கய்யா... கூட்டு வச்சுக்குறோம் வச்சுக்குறோம்முன்னு, கடைசி வரை சொல்லி, உண்மையிலேயே ஏமாத்திப் புட்டாங்க...' என, பெரிய கட்சி ஒன்றைப் பற்றி நொந்து போய்க் கூறினார்.அரைக் கண்ணாடி அணியும் அந்த முன்னாள் அமைச்சர் முகத்தில் ஏமாற்றமும், 'டெபாசிட்' போன வருத்தமும் தெரிந்தது.வெந்த புண்ணில் மருந்து தடவுவது போல, 'இந்த சோபா பிரமாதமா இருக்கே... எங்க வாங்குனது?' எனக் கேட்டு, 'சப்ஜெக்டை' மாற்றினேன்.வாங்கிய நகரின் பெயரைச் சொல்லி, தெருப் பெயரை நினைவுக்குக் கொண்டுவர முயன்றார்; முடியவில்லை. 'அங்கே எல்லாமே சர்தார்ஜிகள் கடை தான்; ரொம்ப சீப்... 'ஆர்டர்' கொடுத்தால் லாரியில் அனுப்பி விடுவர்...' என்றவருக்கு, தான் வாங்கிய பொருளை இன்னொருவர் பாராட்டுகிறார் என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி, முகத்தில் தெரிந்தது.நைசாகக் கழண்டு கொண்டேன்.'இது தான் பதவி போன பின் வரும் வாழ்க்கை...' என நினைத்தபடி, 'சைக்கிளை' அழுத்தினேன். ('டைனமோ' சரி இல்லை; 'லைட்' விட்டு விட்டு எரிந்தது. வழியில், 'காவல்' தெய்வங்களை சமாளிக்க வேண்டுமே என்ற கவலை... நல்லவேளை பிரச்னை ஏற்படவில்லை!)கேலென்சு மாமா ரொம்ப நொந்துக் கொண்டிருந்தார்...'அந்து... இந்த ஆண்டு பொ.ஆ., 'பாரின் சான்ஸ்' எதுவுமே தரலயே... 'யூரோப்'பாவது போயிட்டு வந்திருக்கலாம்... ம்... இதோ, இன்னும் இரண்டு வாரத்தில் ஆண்டே முடியப் போகிறது...' என்றார்.'சிலோனுக்கு போயிட்டு வந்தோமே... அது, 'பாரின்' இல்லயா?' என்றேன்.'அட போப்பா... அது நம்மோட ஒரு, 'ஸ்டேட்' மாதிரி தானே!'லென்சுக்கும், எனக்கும் இடையே நடைபெற்ற உரையாடல், சினிமா பொன்னையா மூலம், பொ.ஆ., காதுக்கும் எட்டியது.மதியம் என்னை அழைத்து, 'லென்சோட குறை அடுத்தாண்டு, '90 ஏப்ரலில் தீரப் போகிறதுன்னு சொல்லி வை...' என்று கூறி அனுப்பி விட்டார்.எனக்குள் ஒரே, 'திக்... திக்!' லென்சை மட்டும் அனுப்பி வெறும், 'போட்டோ பிக்சர்' செய்யச் சொல்லப் போகிறாரோ என்று!மாலையில், 'சஸ்பென்ஸ்' உடைந்தது; லென்சே, பொ.ஆ.,விடம் பேசி விட்டு வந்தார்.ஏப்ரல், '90ல், இரண்டாவது வாரம் ஜெர்மனி செல்கிறோம்; அங்கிருந்து ஸ்பெயின் சென்று, ஸ்பெயினிலிருந்து இஸ்தான்புல் வரை, ரயிலில் பயணம்; பின், அமெரிக்கா! வாஷிங்டனிலிருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் வரை, காரில் பயணம்.ஒரு மாதம் என் ரம்பத்தில் இருந்து வாசகர்கள் தப்பிக்கலாம்; ஆனால், கேள்வி - பதில் மட்டும் உண்டு; 'கூரியர் சர்வீஸ்' இருக்கிறதே...'ஒரு மாதத்திற்குப் பின், பயணக் கட்டுரை, 'பிளேடு' இருக்கிறதே...' என, இப்போதே நீங்கள் வருந்த ஆரம்பித்து விட்டதை உணர முடிகிறது!'ஏன்ஷியன்ட் விஸ்டம் அண்ட் சீக்ரெட் செக்ட்ஸ்' என்ற புத்தகம் கையில் கிடைத்தது; 'டைம் லைப்' வெளியீட்டாளர்கள் புத்தகம் அது.உலகின் முக்கிய மதப் பிரிவினரின் நம்பிக்கைகள் பற்றியும், அந்த நம்பிக்கைகள் எவ்வளவு அறிவுப்பூர்வமானது அல்லது மூட நம்பிக்கை உடையது என்பது பற்றியும் எழுதப்பட்டுள்ளது.நம் நாட்டு மதங்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது; அதில், குறிப்பாக, அன்னிபெசன்ட் அம்மையார் பற்றியும், அவர் இறந்த பின், அடக்கம் செய்யாமல், சிதைக்கு தீ வைத்து எரித்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. படித்து ஆச்சரியம் அடைந்தேன்.இந்தியர்கள், தம்மை தாமே ஆள வேண்டும் என்ற இயக்கத்தை, நம் நாடு வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது ஆரம்பித்து, அதற்காக சிறை சென்றவர் அன்னிபெசன்ட்; இவரும் ஒரு வெள்ளையரே!பற்பல ஆச்சரியமான புதிய விஷயங்கள் அடங்கிய புத்தகம் இது! உ.ஆ., உதவியுடன், இன்னும் சில நாட்களில், படித்து முடித்து விடுவேன்.'ஏன்ஷியன்ட் விஸ்டம்...' புத்தகத்தில் வெளியாகி உள்ள ஒரு படம்.2,000 ஆண்டுகளுக்கு முன் துாக்கு போட்டு இறந்த டென்மார்க் ஆசாமி(?)யின் தலையாம் இது!இவர், 'செல்ட்' இனத்தைச் சேர்ந்தவராம்; இவ்வின மக்கள், ஆண்டவனுக்கு தங்களது உயிரை காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் அப்போது இருந்தது என, புத்தகம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !