அந்துமணி பா.கே.ப.,
பா - கேஅலுவலகம் பரபரப்பாக இருந்த ஒரு மதிய வேளை...கேபினில் அமர்ந்து, கேமராவில் தான் எடுத்த புகைப்படங்களை, கம்ப்யூட்டருக்கு, 'டிரான்ஸ்பர்' செய்து கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.இடையிடையே, 'சர் சர்' என மூக்கை உறிஞ்சியபடியும், கர்ச்சீப்பின் முனையை திரித்து, மூக்கினுள் விட்டு, தும்மியும் கொண்டிருந்தார்.'ஜலதோஷமா மாமா... இந்தாங்க இஞ்சி டீ...' என்று கொடுத்து, 'டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துங்க. இப்படி கர்ச்சீப்பை மூக்கில் விடுவதை நிறுத்துங்க...' என்றேன்.அப்போது, அங்கு வந்த திண்ணை நாராயணன், 'மணி... எனக்கும் இஞ்சி டீ கொடேன்...' என்றவர், 'ஓய் லென்சு... 'இன்டர்நெட்'டிலிருந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுக்க முடியுமா...' என்றபடி, மாமா எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.'மெமரி கார்டில் இருக்கும் படங்கள் அனைத்தையும், கம்ப்யூட்டருக்கு மாற்றிய பின் தான் எடுத்து தருவேன். அதுவரை தொந்தரவு செய்யக் கூடாது...' என்று, தன் வேலையில் மும்முரமானார்.நாராயணனுக்கு டீ கொடுத்து, 'ஏதாவது விசேஷம் உண்டா...' என்றேன், பொத்தாம் பொதுவாக.'ஏன் இல்லாமல்... இதோ லென்ஸ், தன் மூக்குடன் சண்டை போடுவதைப் பார்த்ததும், மூக்கு பற்றி முன்பு படித்தது ஞாபகத்துக்கு வந்து விட்டது. சொல்லட்டுமா...' என்றார்.'ஏதாவது விஷயம் சொல்ல மாட்டீரா என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறேன்...' என்றேன்.சொல்ல ஆரம்பித்தார், நாராயணன்:உங்களுக்கு பிடிக்காத உடல் உறுப்பு எதுன்னு கேட்டா, பலர் சொல்லும் பதில், 'என் மூக்கு...' என்பர்.சிலருக்கு அழகையும், பலருக்கு அழகை கெடுப்பதும் மூக்கு தான்; மனிதனின் முக்கியமான சுவாச உறுப்பு. * மொத்தம், 1793 புகைப்படங்களை ஆய்வு செய்து, உலகில் வெறும், 14 வகை மூக்கு வடிவங்கள் தான் உள்ளன என, எழுதியுள்ளார், ஒரு ஆராய்ச்சியாளர். இந்த, 14 வகை மூக்குகளுக்கு உதாரணமாக சில பிரபலங்களையும் பட்டியலிட்டுள்ளார்* பகட்டான மூக்குக்கு, பிரபல அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனை உதாரணமாக காட்டியுள்ளார். உலகில், 24.2 சதவிகித மக்களுக்கு, இந்த மூக்கு தான் என்கிறார்* இயல்பான மூக்குக்கு ரஷ்ய முன்னாள் அதிபர் லெனினின் மூக்கை குறிப்பிட்டு, இதுவே இயல்பான மூக்கு என்கிறார்* அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டனுக்கு குமிழ் வடிவமான மூக்கு, இது அபூர்வமாம்* பிரபல முன்னாள் நடிகை எலிசபெத் டெய்லரை, குட்டையாக அதே சமயம் மேல்நோக்கி வளைந்துள்ள மூக்குக்கும்; மோனலிசா ஓவியத்தை, நேரான மூக்குக்கும்; நீளமான, முனையில் சரிந்து இறங்கியிருப்பதற்கு, ரஷ்யா முன்னாள் அதிபர் ஸ்டாலினையும்; குறுகலான மூக்குக்கு, நடிகை மர்லின் மன்றோவையும் குறிப்பிட்டுள்ளார் உங்களுக்கு தெரியுமா, பொதுவாக ஒரு ஆணின் மூக்கு, பெண்ணின் மூக்கை விட பெரிதாக இருக்கும்* நடிகையாக முயற்சிப்பவர்கள், அதிக கவனம் செலுத்துவது மூக்கில் தான். பலர், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து எடுப்பாக மாற்றிக் கொள்வர். இதற்கு முதன்மை உதாரணம், மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரை தவிர, பிரியங்கா சோப்ரா, ஸ்ருதிஹாசன், ஷில்பா ஷெட்டி, அனுஷ்கா சர்மா, ப்ரீதா ஜிந்தா மற்றும் கத்ரினா கைப் ஆகியோர், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து மூக்கின் வடிவத்தை மாற்றி கொண்டுள்ளனர்* பாலிவுட் சினிமா நட்சத்திரங்களில், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஷில்பா ஷெட்டி போன்றோர் மூக்கு பிரபலமானவை* உலகில் மிக நீண்ட மூக்கு கொண்டவரின் பெயர், மெக்மத் ஓசியூ நெக்; துருக்கி நாட்டின் ஆர்ட்வின் நகரில் வசிக்கும் இவருடைய மூக்கின் நீளம், 88 செ.மீ.,* தமிழ் நடிகர்களில், நாசரின் மூக்கு வித்தியாசமானது. மகளிர் மட்டும் படத்தில், அவரது பட்டப் பெயரே மூக்கன் தான்* நடிகை காஞ்சனாவின் மூக்கு, தனி அழகு* முகத்துடன் ஒட்டிய அழகான மூக்கு சாவித்திரிக்கு* தமன்னாவின் மூக்கே அவருக்கு எடுப்பான அழகு* நம் ஊர்களை பொறுத்தவரை, குடமிளகாய் மூக்கு, சிம்னி மூக்கு, பச்சை மிளகாய் மூக்கு, உருண்டை மூக்கு, சப்பை மூக்கு, கத்திரிக்காய் மூக்கு, மூஞ்சூறு மூக்கு மற்றும் கிளி மூக்கு என்ற ரீதியில் செல்லும்* மகாபாரதம் எழுதிய வியாசரின் மகன் சுகருக்கு, கிளி மூக்கு, மனித உருவம். இவரை கோவில்களில், 'சுக பிரம்மர்' என அழைத்து வணங்குவர்'சின்ன சின்ன மூக்குத்தியாம்... மூக்குத்தி பூமேலே...' போன்ற தமிழ் பட பாடல்கள் மிகவும் பிரபலம்!நாராயணன் சொல்லி முடிக்கவும், மாமா தன் வேலையை முடிக்கவும் சரியாக இருந்தது. பக்கத்தில் அமர்ந்து தொண தொணத்ததில் எரிச்சலடைந்த லென்ஸ் மாமா, நாராயணன் கேட்ட புகைப்படத்தை எடுத்துக் கொடுக்காமலேயே, 'அப்பப்பா... போதும்பா உன் மூக்கு புராணம்...' என்று கூறியபடி எழுந்து சென்று விட்டார்.பநவரத்திரனங்கள், எந்த தோஷமும் இல்லாமல் துாய்மையானதா என்று கண்டுபிடிக்க சில வழிகள் கூறப்பட்டுள்ளன. அது:முத்து: நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்மரகதம்: கையில் வைத்து, குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்பச்சைக் கல்: குத்துவிளக்கு ஒளியின் முன், சிவப்பு நிறமாக தோன்றும்வைரம்: சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாதுபவளம்: உண்மையான பவள மையத்தில், ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்கோமேதகம்: பசுவின் நெய்யில் போட்டால், குங்குமப்பூ வாசனை வரும்வைடூரியம்: பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்நீலக்கல்: பச்சிலை சாற்றில் போட்டால், ஒருவித ஒலி வரும்அகத்தியரின் பாடல்களிலிருந்து இந்த விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி, கற்களின் தரத்தை அறியலாம்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.