அந்துமணி பா.கே.ப.,
பா - கே'திண்ணை' மேட்டர் கொடுக்க வந்திருந்தார், நடுத்தெரு நாராயணன். அவரது தோளில் இருந்த ஜோல்னா பை கனமாக இருப்பது, அவர் ஒரு பக்கம் சாய்ந்தபடி நடந்து வருவதிலேயே தெரிந்தது.டீ கடை பெஞ்ச் கச்சேரி முடித்து, அப்போதுதான் வந்திருந்தார், குப்பண்ணா.'ஓய் நாணா... என்ன பை கனமா இருக்கு?' என்றார்.தன் ஜோல்னா பையிலிருந்து புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து மேஜை மீது வைத்தார், நாராயணன்.'எல்லாம் புது புத்தகமா இருக்கே... புத்தக கண்காட்சிக்கு போய் வந்தீர்களா?' என்றேன், நான்.'ஆமாம்' என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினார், நாராயணன்.அருணகிரி எழுதி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள, 'ஆப்ரிக்கா' என்ற புத்தகத்தை உருவி, அதிலிருந்து சில பகுதிகளை படிக்க ஆரம்பித்தார், குப்பண்ணா:* ஆப்ரிக்கா கண்டத்தில், 54க்கும் அதிகமான நாடுகள் உள்ளன. இவை ஐரோப்பிய நாடுகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்தன. 1950க்கு பின், பல நாடுகள் விடுதலை பெற்றன. ஆப்ரிக்க நாட்டில் குடியேறி, அங்குள்ள மக்களை அடிமைகளாக வெளிநாட்டுக்கு விற்ற பிரகஸ்பதிகள் தான், ஐரோப்பியர்கள். இதற்காக ஆப்ரிக்காவில், ஒரு காலத்தில், 26 அடிமை சந்தைகள் இருந்துள்ளன* 'ஆப்ரிக்க கறுப்பர்களை மனிதர்களாகவே கருத முடியாது. அவர்களை விலைக்கு வாங்கிய முதலாளிகளின் சொத்து உடமைகளாகவே அவர்கள் கருதப்படுவர்...' என, அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தான், அமெரிக்காவில், நீக்ரோ எழுச்சியை ஏற்படுத்தியது* கிரேக்க மொழியில், 'ஆப்ரைக்' என்றால், குளிர் இல்லாத இடம் என பொருள். ஐரோப்பியர்கள், 'அப்ரிகா' என, அழைத்தனர். இதன் பொருள், சூரிய ஒளி பரவிய இடம் என்று அர்த்தம். இந்த இரு சொற்களின் அடிப்படையிலேயே ஆப்ரிக்கா என, பெயர் உருவானதாக கூறுவர்* ஆப்ரிக்காவில் மிகப்பெரிய நாடு அல்ஜீரியா; மிகச்சிறிய நாடு, காம்பியா* உலகின் மிகப் பெரிய, சகாரா பாலைவனம், 90 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில், 11 ஆப்ரிக்க நாடுகளில் பரவியுள்ளது* மத்திய ஆப்ரிக்க நாடுகளில், 'பிக்மி' எனப்படும் குள்ளர்கள் வசிக்கின்றனர். இவர்களுடைய சராசரி உயரம், 4 அடி தான். வேட்டையாடுவது தான் இவர்களின் தொழில்* ஆப்ரிக்காவில், நைஜீரியா தான் ஜனத்தொகையில் முதலிடத்தில் உள்ளது* நைஜீரியாவில், இறந்தவர்கள் உடலை எவ்வளவு நாட்கள் வீட்டில் பதப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து, சமூகத்தில் மதிப்பு உயரும். வெள்ளிக்கிழமையில் மட்டுமே உடல் அடக்கம் செய்ய வேண்டும். இதுதவிர, பணத்தை வங்கிகளிலிருந்து, எல்லா நாட்களும் எடுக்க முடியாது. மாதத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் மட்டுமே, பலத்த பாதுகாப்புடன் பணத்தை பட்டுவாடா செய்வர்* காங்கோவில், திருமணத்தின்போது பெண்களுக்கு, ஆண்கள் தான் வரதட்சணை கொடுக்க வேண்டும். வசதிக்கு ஏற்ப 5 முதல் 10 பசுக்கள் கொடுக்க வேண்டும். ஒரு பசு, 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. வரதட்சணை கொடுக்க முடியாதவர்கள், காதல் மற்றும் கலப்பு திருமணங்கள் செய்து கொள்கின்றனர்* லிபியாவில் திருமணமான தம்பதியினருக்கு, அரசே புது வீடு வழங்குகிறது* கானா நாட்டிற்கு அருகிலுள்ள ஐவரி கோஸ்ட் தீவுகளில், பிறந்த தேதி, கிழமை மற்றும் எத்தனையாவது குழந்தை என்பதை அடிப்படையாக வைத்து நுாதனமாக பெயர் சூட்டுவர்.கானாவில் தங்கம் கிடைக்கிறது என, ஒரு காலத்தில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்தனர். இப்படி வந்தவர்களில் பலர், மலேரியா நோய் தாக்கி இறந்து போயினர். அதனால், கானாவை, 'வெள்ளையர்களின் சமாதி' என்று அழைப்பர்* டோகா நாட்டில், கார்களில் செல்லும்போது, காரை வழி மறித்து யாராவது உங்களிடம் உள்ள பொருட்களை கேட்டால், தந்து விடவேண்டும். மேலும், வீட்டுக்கு உள்ளேயே வந்து, 'இதை நான் எடுத்துக் கொள்கிறேன்...' என்று கூறி எடுத்துச் சென்று விடுவர். இழந்த பொருளை மீட்டு தருவதற்காகவே உள்ள பல நிறுவனங்கள், பிறகு நம் சார்பாக திருடியவர்களிடம் பேசி, திரும்ப பெற்று தருவதும் உண்டு.டோகா நாட்டின் மற்றொரு சிறப்பு, கூட்டு சமையல். இரண்டு, மூன்று தெருவுக்கு சேர்த்து ஒரே இடத்தில் சமைத்து, அனைவரும் சேர்ந்து சாப்பிடுவர்* கென்யாவில் கிறிஸ்தவர்கள் அதிகம். தேவாலயங்களில் திருமணத்துக்கு, பணம் செலுத்தி முன் பதிவு செய்வது கட்டாயம். உறுப்பினராக சேருவதற்கும் பணம் கட்ட வேண்டும். முடியாதவர்கள், தேவாலயம் செல்லாமலும், திருமணம் செய்யாமலும் சேர்ந்து வாழ்கின்றனர். சனிக்கிழமைகளில் தான் திருமணங்கள் நடக்கும். ஒருவர், எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மேலும், கணவன் இறந்து விட்டால், அந்த பகுதி தேவாலயத்தில் இரவு போய் தங்கி விடுகிறார், மனைவி. காரணம், இறந்தவரின் ஆவி, மனைவியை இரவு தேடி வரும் என்று நம்புகின்றனர்* உலகிலேயே மிக ஆழமானது, காங்கோ நதி தான். இதன் ஆழம், 26 மீட்டர். இதன் அகலம் சில இடங்களில், 3 - 5 கி.மீ., வரை பரந்து ஓடுகிறது. காங்கோ காடுகளில் மலை பாம்புகள் அதிகம். காங்கோவாசிகள் அதை பிடித்து விருந்து வைத்து விடுவர். காங்கோ ஆற்றில் வாழும் முதலைகளை பிடித்தும் சாப்பிடுகின்றனர். குரங்கு கறியும் உண்டு. நாய், பூனைகளை கண்ணில் காண முடியாது. அவைகளை, 'கசாய்' என்ற பழங்குடியினர் பிடித்து சாப்பிட்டு விடுவர்.உலகின் மிகப்பெரிய கொசுக்களை காங்கோவில் காணலாம். கடித்தால், மலேரியா நோய் தாக்கும்; இறப்பு நிச்சயம். காங்கோவில் வெயில் அதிகம். மழையும் அதை விட அதிகம். படிப்பதை பாதியில் நிறுத்தி, 'ஆப்ரிக்க நாடுகளை பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளன...' என்றார், குப்பண்ணா.இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, 'மணி... வெளிநாட்டுக்கு போய் பல வருஷமாச்சு. ஆசிரியரிடம், 'பர்மிஷன்' வாங்குப்பா; ஆப்ரிக்காவுக்கு போயிட்டு வரலாம்...' என்றார்.நான், பதில் ஏதும் கூறாமல், வாசகர்களிடமிருந்து, 'இ - மெயில்' வந்திருக்கிறதா என்று கம்ப்யூட்டர் திரையை பார்க்க ஆரம்பித்தேன்.