ப
இந்த வாரம் குட்டி குட்டி தகவல்கள் மட்டுமே!ஜவ்வரிசி என்பது, பனஞ்சாறு மற்றும் பனம் பழத்தின் சாறு இவற்றால் செய்யப்படும் உயர்ந்த தரமான அரிசியாகும். ஆனால், நம் நாட்டில் இப்போது மரவள்ளிக் கிழங்கின் மாவிலிருந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது; இது, தரம் குறைந்தது.நம் நாட்டை வெள்ளைக்காரர்கள் ஆண்டபோது, அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசியை, ஜாவா தீவிலிருந்து இறக்குமதி செய்தனர். ஜாவாவிலிருந்து வந்த அரிசி, ஜாவா அரிசி என்றாகி, நம்மவர்களால் ஜவ்வரிசி என, மாறி விட்டது.*****ஒரு மனிதன், ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் கொள்ளளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை, 700 ரூபாய். மூன்று சிலிண்டரின் விலை, 2,100 ரூபாய். ஒரு ஆண்டிற்கு, 7.66 லட்சம் ரூபாய்க்கு மேல் போகிறது. ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம், 65 ஆண்டுகள் என்றால், 5 கோடி ரூபாயை எட்டுகிறது. இவ்வளவு விலை உயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக் காற்றை, நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது. அப்படி என்றால், நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம், மரங்கள். இனியேனும், மரங்கள் எனும் அட்சயபாத்திரத்தை அழிக்க விடாமல் தடுத்து காப்போம்.****கரையான் என்பது, எறும்பு வகையைச் சேர்ந்த ஒரு இனம். கரையான்கள், தன் புற்றுக்கு தேவையான மண்ணை சிறுகச் சிறுக எடுத்துச் சென்று சேர்க்கும்; வெறும் மண் என்றால் அது மழையில் கரைந்து விடும்.எனவே, தான் சேமிக்கும் மண்ணுடன் தன் வாயிலிருந்து சுரக்கும் ஒருவித மெழுகு போன்ற பொருளையும் சேர்த்து, கோபுரம் போல் அமைக்கின்றன. மண்ணுடன் மெழுகு போன்ற பொருள் சேர்வதால், அவை மிகவும் கெட்டியாகவும், உறுதியாகவும் புற்றுகள் போல் அமைத்து விடுகின்றன.இவ்வாறு கரையான்கள் கஷ்டப்பட்டு, தன் புற்றை அமைத்தால், அதில் பாம்புகள் வந்து பாதுகாப்பாக வசிக்க ஆரம்பித்து விடும். இதைத்தான் நம்மவர்கள், 'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி கொண்டது போல' என்று சொல்வர்.****நாம் உண்ணும் உணவு, நமக்கு பிடித்த சுவையில் அமைந்தால் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல, பிடிக்காத உணவாக இருந்தால், வேண்டாம் என்று நிராகரித்து விடுகிறோம்.அதற்கு காரணம், நம் நாக்கு, பல்வேறு ருசிகளை உணரும் தன்மை உடையது. அவை: கசப்பு - நாக்கின் பின்பகுதி, துவர்ப்பு - நாக்கின் பின் விளிம்பு, உப்பு - நாக்கின் முன் விளிம்பு, இனிப்பு - நாக்கின் முன் பகுதி.****மங்கள வாத்தியமான நாதஸ்வரம், முற்காலத்தில், கருங்காலி, வேங்கை, தோதகத்தி மற்றும் சந்தன மரங்களால் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்காலத்தில், நாதஸ்வரம், ஆச்சா மரத்தால் செய்யப்படுகிறது.****பாம்புகளிலேயே கொடிய விஷமுள்ளது, நாகப்பாம்பு. நாகப் பாம்புகளிலேயே பெரியதும், கொடிய விஷமுள்ளது, ராஜ நாகம். இவ்வகை நாகங்கள், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மட்டுமே வாழும் தன்மை கொண்டவை.ராஜ நாகமானது ஒரு மனிதனை தீண்டினால், தீண்டிய சில நிமிடங்களிலேயே மனிதனின் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்து விடும். மேலும், நாகங்களின் சராசரி வயது, 100 ஆண்டுகள்.****சிங்கம், சிறுத்தை முதலான மாமிசம் தின்னும் விலங்குகள், வேகமாக ஓடக்கூடியவை தான். ஆனால், அந்த விலங்குகள் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட துாரம் ஓடிவிட்டால், களைப்புற்று நின்று விடும். மேலும், அவற்றின் வாயில் நுரை தள்ள ஆரம்பித்து விடும். ஆனால், மாமிசம் சாப்பிடாத குதிரை, வேகமாக ஓடுவதுடன், அதிக துாரம் ஓடினாலும் களைப்புறாது. அதனால் தான், பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களுக்கு, 'ஹார்ஸ் பவர்' - குதிரை சக்தி என, கணக்கிட்டனர்.****அமெரிக்காவில், கி.பி., 1800ல் துவங்கப்பட்ட, 'லைப்ரரி ஆப் காங்கிரஸ்' என்ற நுாலகம் தான், உலகின் மிகப்பெரிய நுாலகமாக விளங்குகிறது. புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் கையெழுத்துச் சுவடிகள் என, வகை வகையாக, 7.30 கோடி எண்ணிக்கையுடன், இந்த நுாலகம் இயங்கி வருகிறது.****முற்காலத்தில், பெண்களுக்கு பிரசவம் என்பது சுலபமாக இருந்தது. ரோமானிய நாட்டில், தாயின் வயிற்றைக் கிழித்து முதன் முதலில் பிரசவிக்கப்பட்ட குழந்தை, ஜூலியஸ் சீசர்.அதனால் தான் அறுவை சிகிச்சையால் பிறக்கும் குழந்தைகளை சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்ற சொற்றொடர் உருவானது எனலாம். சீசரின் என்பது, சிசேரியன் என்றாகி விட்டது. மேலும், ஆங்கில மாதத்தில் ஜூலை என்பது, அவரின் நினைவாக சூட்டப்பட்ட பெயர்.****எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த மலையேற்ற வீரர், டென்சிங் மற்றும் ஹில்லாரி என்பதை அறிவோம். ஆனால், அந்த மலையேற்றக் குழுவின் தலைவர் யார் தெரியுமா? பேசன் ஜான் ஹண்ட் என்ற பிரிட்டிஷ்காரர்.****திருச்சிக்கு அருகே உள்ள கல்லணை, கரிகால் சோழனால் கட்டப்பட்டது என்பது தெரியும். அந்த கல்லணை கட்டப்பட்ட காலம், முதலாம் நுாற்றாண்டு.அதற்கு முன், குஜராத்தில், 'கதிர்முனை குளம்' என்று ஏற்படுத்தி, நீர்ப்பாசன வசதி செய்துள்ளனர். அதைக் கட்டியவன் சாகராஷா ருத்ரதாமன் என்ற மன்னன். ஆக, இந்தியாவின் முதல் அணையே நம் கல்லணை தான் என்று பெருமைப்படலாம்.****ஒவ்வொரு ஆண்டும், நார்வே நாட்டில் வழங்கப்படும், உலகின் மிகப்பெரிய விருதான, நோபல் பரிசு, ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களுக்காக வழங்கப்படுவது. அந்த விருதைப் பெறுபவருக்கு, 175 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய ரூபாயில் சுமார், 5.82 கோடி தொகையும் பரிசாக கிடைக்கும்.****உலகின் பெரிய ரயில்வேக்களில் நான்காவது இடத்தில் உள்ளது, இந்திய ரயில்வே. முதல் மூன்று இடங்களை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை வகிக்கின்றன.பிராட்கேஜ், 1.67 மீட்டர்; மீட்டர்கேஜ், 1 மீட்டர். நாம் அறியாத இன்னொரு சேதி உள்ளது. அது, 'நேரோ கேஜ்' இது, 762 மி.மீட்டர் மட்டுமே உள்ளது. ****