உள்ளூர் செய்திகள்

உறவினர் வீட்டுக்கு செல்கிறீர்களா?

பிள்ளைகளுக்கு, கோடை விடுமுறை விட்டதால், இனிமேல், அலாரம் அடித்தவுடன் எழுந்து, அவசர அவசரமாக சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மாதம் நிம்மதியாக இருக்கலாம் என, அம்மாக்கள், சந்தோஷமாக இருக்கும் நேரம் இது. கோடை பயிற்சி முடித்து, மீதமுள்ள நாட்களில், எந்த உறவினர் வீட்டுக்கு செல்வது என, யோசிக்கும் குழந்தைகளும் உண்டு. அவ்வாறு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு விருந்தினராக போகும் முன், அங்கு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை, பார்க்கலாம்...நாம் எப்படி, கோடை விடுமுறையை கழிக்க விரும்புகிறோமோ, அதேபோல் உறவினர்களும் எங்கேயாவது போக, 'பிளான்' செய்திருப்பர். எனவே, கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு செல்லும் முன், அவர்களின் சவுகரியம் எப்படி என்பதை தெரிந்து கொள்வது நல்லது.ஒருவர் வீட்டுக்கு விருந்தினராக போகும் போது, தின்பண்டங்கள் மற்றும் பொருள் ஏதாவது வாங்கி செல்வோம். அப்படி வாங்கி செல்வது, அவர்களுக்கு பயன்படும் வகையில் இருந்தால், கொடுக்கும் நமக்கும், வாங்கிக் கொள்ளும் அவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் விருந்தினராக செல்லும் வீட்டில், வயதானவர்கள் இருந்தால், அவர்கள் மாத்திரை போட்டு வைப்பதற்கான, பாக்ஸ் வாங்கிக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு, பென்சில் பாக்ஸ், சிறு டவல் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். சென்னையில் வாழ்க்கைப்பட்ட பெண், கிராமத்தில் இருக்கும் வீட்டுக்கு சென்றால், பிறந்த ஊரில் கிடைக்காத ஏதாவது ஒரு பொருளை சென்னையில் இருந்து வாங்கி செல்லலாம்.கோடை விடுமுறைக்கு உங்கள் அம்மா வீட்டுக்கு போவதாக இருந்தால், இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. அம்மாவோ அல்லது அண்ணன் மனைவி, தம்பி மனைவியோ, 'நீயே, 10 நாள், 'ரெஸ்ட்' எடுக்கத்தான் வந்திருக்க. அமைதியா உட்காரு...' என, ஆத்மார்த்தமாக கூறினால், 'டிவி' பார்ப்பது, ஓய்வெடுப்பது என, விடுமுறையை, 'என்ஜாய்' பண்ணுங்க. ஆனால், அம்மா அல்லது அண்ணன் மனைவி மற்றும் தம்பி மனைவி, வீட்டு வேலை, ஆபீஸ் வேலை என, அல்லாடுபவர்களாக இருந்தால், வேலைகளை பகிர்ந்து கொள்வது தான் உறவுக்கு நல்லது; அடுத்த கோடை விடுமுறைக்கு செல்லவும் வசதி.ஜூன் மாதம் பிள்ளைகளுக்கு, பள்ளி கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். இந்நேரத்தில் அனைவருக்கும் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால், உறவினர்கள் நம்மை சினிமா, ஹோட்டலுக்கு அழைத்து சென்றால், நீங்களும் சரிபாதி செலவழிப்பது தான் சரியாக இருக்கும். உறவினர் வீட்டில், 'வாஷிங் மெஷின்' இருந்தால், அதில் துணியை போட்டு எடுக்கும் பொறுப்பை நீங்கள் எடுத்து கொள்ளலாம். கையால் துணி துவைப்பதாக இருந்தால், உங்கள் துணி உங்க பொறுப்பு. அது தான் சரி.இது பிடிக்காது, அது பிடிக்காது என்ற விருப்பம் எல்லாம் சொந்த வீட்டில் ஓ.கே., விருந்தாளியாக போகும் வீட்டில் அவர்களுக்கு வேலை பளுவை ஏற்படுத்துவது சரியல்ல. அதனால், தோசை சுடுவது, சட்னி அரைப்பது போன்ற வேலையை நீங்களே செய்யலாம்.நீங்க பிறந்த வீடாகவே இருந்தாலும், உங்கள் பிள்ளைகள் குறும்பு செய்து, வீட்டை அலங்கோலம் படுத்துவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காதீர்.குடும்பத்தில் முன் எப்போதோ நடந்த பிரச்னைகளைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. 'அடுத்தாண்டு கோடை விடுமுறை எப்போது வரும்; இவர்கள் எப்போது வருவர்...' என, எதிர்பார்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல், நீங்கள் செல்லும் வீட்டில், மருமகள், மாமியாரிடம் கலக வேலைகளை செய்து, வீட்டின் நிம்மதியை கெடுப்பதும் தவறு.கடைசியாக, 'அடுத்தாண்டு, எங்கள் வீட்டுக்கு நீங்கள் கட்டாயம் வரணும்...' என, அவர்களை அழைத்து விட்டு வாருங்கள்.- எல். மணிராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !