உள்ளூர் செய்திகள்

எதிராளியை உசுப்புபவரா நீங்கள்?

மாணவர்களுக்கு பள்ளி நாட்களோடு மட்டுமா போட்டி உணர்வு நின்று போகிறது?கல்லூரியில் அது கடுமையாகி, படிப்பிலிருந்து தாண்டி, விளையாட்டுப் போட்டிக்கு மாறி, பின், 'அவள் எனக்கா, உனக்கா...' என்று வாலிபத்திலும் முட்டிக் கொள்கிறது.இதோடு முடிகிறதா எனில், அதுவும் இல்லை. 'உன் வேலையை விட, என் வேலையும், நான் வாங்கும் சம்பளமும் எங்கோ இருக்கின்றன...' என்று, தன் நண்பனுக்கு வீண் ஜம்பம் காட்டுவதும், 'என் மனைவிக்கு, உன் மனைவி ஈடாவாளா? என் மனைவியின் அழகில், படிப்பில், கெட்டிக்காரத்தனத்தில், செல்வத்தின் முன் உன் மனைவி கிட்ட நிற்க முடியுமா... உன் மாமனார் மாத சம்பளக்காரர்; நான் யாருடைய மாப்பிள்ளை தெரியுமா? கல்லூரி தாளாளராக்கும்...' என்று நீள்கிறது.எனக்குத் தெரிந்த பொறியியல் படித்த இரு நண்பர்கள் படித்து முடித்ததும், ஒன்றாகச் சேர்ந்து, ஒரு கட்டட நிறுவனத்தை ஆரம்பித்தனர்.சிறு சிறு விஷயங்களில் ஆரம்பித்த தொழில் போட்டி, பெரிய சண்டையில் முடிந்தது. இருவரும் பிரிய முடிவெடுத்த போது, யார் வெளியேறுவது என்பதில் மீண்டும் சிக்கல் எழுந்தது.என்னென்னவோ பேசி, கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தனர். வெளியேறியவர் இன்று மிக உயர்ந்த நிலையில் உள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் அவரை சந்திக்க நேர்ந்த போது, அவர் சொன்ன செய்தி முக்கியமானது.'நீ வெளியே போய் என்ன சாதிக்கறேன்னு நானும் பாக்கத்தானே போறேன்...' என்று, என் நண்பன் சொன்னது தான், என்னை உசுப்பேற்றி, என் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. மனம் சோர்வுறும் போதெல்லாம், அவன் கூறிய வார்த்தைகள் தான் எனக்குள் ஊக்க மாத்திரைகளாக இருந்து, உற்சாகமாக வேலை செய்ய தூண்டின...' என்றார்.நல்ல வேளை! அவரால், மற்றவருக்கு பாதிப்பு இல்லை. ஒருவர் தலையை படிக்கல்லாக்கி, இவர் உயரே போகவில்லை. உசுப்பல் தான் உந்து சக்தியானது.வகுப்பறைகளில் மட்டுமே போட்டியாளர் என்கிற வட்டம் அடங்கிப் போகிறது. கூடப்பிறந்தவர்களோடு மல்லுக்கட்டுபவர்கள் இல்லையா? 'நீ பெரியவனா, நான் பெரியவனா? - என் வீட்டுக்காரரின் சம்பாத்தியம் என்ன, உன் வீட்டுக்காரரின் சம்பாத்தியம் எங்கே? - என் பிள்ளைகள் சாதிச்சஅழகு என்ன, உன் பிள்ளைகள் தேங்கிப் போனது என்ன, - எனக்கு என்ன மாதிரியான மாப்பிள்ளை, உன் மகளுக்கு வந்து வாச்சிருக்கே ஒண்ணு...' என்கிற ஒப்பீட்டுப் பெருமைகள் மனதளவிலாவது இல்லாத சகோதர, சகோதரிகள் உண்டா? இதைத் தாண்டி, நேரிடையாகவும், காது படவும் பேசாதவர்கள் எவ்வளவு பேர்?எதிராளியின் வளர்ச்சியால், நம் வளர்ச்சி பாதிக்கும் என்கிற நிலைமை இருந்தால், எதிராளியை ஒருபோதும் உசுப்பி விடக் கூடாது.'நீயா, நானா பார்த்து விடுவோம்...' என்கிற உசுப்பலை யார் செய்தாலும் சரி. இது தரக் கூடிய உத்வேகத்தை ஒரு தாயால், தந்தையால், ஆசிரியரால், ஏன் ஒரு நல விரும்பியால் கூட தர முடியாது.'நீ போராடு... விடாதே... முந்து சாதித்துக் காட்டு...' என்று மிக வேண்டியவர்கள் சொன்னால் கூட வராத வேகம், ஒரு போட்டியாளரோ அல்லது ஒரு எதிராளியோ, 'என்னோடு போட்டி போடாதே... உன்னால் ஜெயிக்க முடியாது; என்னை ஜெயிக்க இனி ஒருவன் இந்த உலகத்தில் பிறந்து தான் வர வேண்டும்....' என்று சொல்கிற போது மட்டும் ஏனோ அபரிமிதமாக வருகிறது.எதிராளியை அவசரப்பட்டு உசுப்பி விட்டு, பின், போட்டியை சமாளிக்க முடியாமல், பல்லுப் படுவாயையெல்லாம் உடைத்துக் கொள்வதை விட, அவர்களை வேறு வேலைகளில் கவனம் செலுத்தும்படி விட்டு விடுவதுடன், ஒரு மெத்தனத்தை உருவாக்கி, 'இவனாவது நம்மை நெருங்குவதாவது...' என்கிற உதாசீனத்தை அவனுக்குள் ஏற்படுத்தி, பின், அவனை ஜெயிப்பது தான் சாணக்கியத்தனம். ஆயுதமேந்தாப் போர்க்குணமும் கூட!எதிராளிக்கு இல்லாத சக்தியை, நாமே அவனுக்கு தானம் கொடுத்து, அவனோடு மல்லுக் கட்டுவது சரியான கோணங்கித்தனம்!போட்டியாளரை வளர்த்து விட்டு, நாம் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள், ஈயைக் கொல்ல இரும்புத்தடியுடன் அலையும் கதை தான்.ஆக, எவருடனும் போட்டி என அறிவிக்காத வகையில், போட்டியில் ஈடுபட வேண்டும்.ஓட்டப்பந்தயத்தில் தனி ஒருவனாக ஓடினால், அவனுக்கு இலக்கு மட்டுமே கணக்கு! மாறாக, பலருடனோ, ஒருவனுடனோ ஓடுகிற போது, இவனை முந்துவது தான் முதல் இலக்கு!எவரையும் சீண்டி விடாமல் ஜெயிப்பது அரிய கலை; இன்றைய நவீன வாழ்க்கைக்கு, இக்குணம் இன்றியமையாதது! லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !