பி.இ., படித்து, டீ மாஸ்டர் ஆன அடைக்கலம்!
பி.இ., படித்து, முதல் வகுப்பில் தேறிய ஒருவர், படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல், சொந்தமாக டீக்கடை நடத்துகிறார்; திருவள்ளூவர் தினம் போன்ற விசேஷ நாட்களில், ஒரு டீ , ஒரு ரூபாய்க்கு கொடுத்து, அசத்தி வருகிறார்.புதுக்கோட்டை மாவட்டம், கரிசக்காடைச் சேர்ந்தவர், அடைக்கலம். எளிய குடும்பத்தில் பிறந்த இவர், ஓட்டலில் வேலை பார்த்தபடியே பள்ளிப் படிப்பை தொடர்ந்து, இன்ஜினியரிங் முடித்தார். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில், இ.சி.இ., படிப்பில் முதல் இடம் பெற்றார்.படிப்பை முடித்து வெளியே வந்தவருக்கு, எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை; வந்த ஒன்றிரண்டு வேலைகளும் சொற்ப சம்பளத்திலேயே அமைந்தன.ஓட்டலில் வேலை பார்த்த போது, கிடைத்த சம்பளத்தை விட குறைவாக இருக்கவே, சொந்தமாக தொழில் செய்து முன்னேறுவது என, முடிவு செய்தார்.தன் அனுபவத்தை வைத்து, சொந்த ஊரிலேயே டீ கடை போட்டார்.கடந்த 15 ஆண்டுகளாக, அடைக்கலத்தின், 'சத்யா டீக்கடை' அப்பகுதியில் மிக பிரபலம். டீக்கடையுடன், இப்போது சிறிய அளவிலான டிபன் சென்டர் மற்றும் பேக்கரியும் நடத்தி வருகிறார்.'எதைச் செய்தாலும், கொடுத்தாலும் தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆகவே, என் கடை டீ, மிக ருசியாக இருக்கும். சுற்றுப்புற மக்கள், என் கடைக்கு தான், டீ குடிக்க வருவர்.'ஒரு வேளை, வேலைக்கு சென்றிருந்தால், நான் மட்டும் தான் வாழ்ந்திருப்பேன். ஆனால், இப்போது, 10 பேருக்கு சம்பளம் கொடுத்து, அவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன்.'அது மட்டுமல்ல, என்னால் முடிந்த வரை, ஏழை மாணவர்களுக்கு, பேக்கரி பொருட்களை இலவசமாகவோ, சலுகை விலையிலோ தருகிறேன்.'தமிழ் மீதும், தமிழ்ப்புலவர் திருவள்ளூவர் மீதும் ஈடுபாடு அதிகம். இதன் காரணமாக, திருவள்ளுவர் தினத்தன்று, ஆறு ரூபாய் டீயை, ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். மக்கள் நல இயக்கத்தினருடன் இணைந்து, மரக்கன்றுகள் மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கவும் உறுதுணையாக இருக்கிறேன்.'இந்த சமுதாயத்திற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும்; செய்வேன்... படித்து விட்டு, இந்த தொழிலை செய்கிறோமே என, எப்போதும் சஞ்சலப்பட்டது இல்லை; மாறாக சந்தோஷமே...' என்கிறார்.இவருடன் பேச: 9943130103.எம். எல். ராஜ்