உள்ளூர் செய்திகள்

நாளையும் பறவைகள் பாடும்!

நல்ல உறக்கம் வாய்த்து, எத்தனை காலம் ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள், உதயா.தியாகு இருக்கும்போது மட்டும் என்ன ஆழ்நித்திரையா கிடைத்தது... இல்லவே இல்லை. அப்போதும் கவலைகள் தான்.குடிப்பழக்கத்தை, தியாகு மறைத்து வைத்திருக்கிறானா என்ற கவலை; லில்லிக்கு, படிப்பு சரியாக வராமல் போய் விடுமோ என்ற கவலை; அரசு வேலையில் பதவி உயர்வுகள் சரியாகக் கிடைக்குமா, அப்படியே கிடைத்தாலும், சரியான ஊர்களாக கிடைக்குமா என்ற கவலை...கடைசியில், இருகோடுகள் தத்துவம் போல, தியாகு, சாலை விபத்தில் இறந்தபோது, அந்த ஒரு துக்கமே, மற்ற எல்லாவற்றையும் சிறியதாக்கி, தலை விரித்து ஆடியது.''உதயா... பரிமளா வீட்டு கொய்யா மரம், நம் வீட்டு பக்கமா சாஞ்சிருந்தது இல்லையா... அதுல இன்னிக்கு, மொதல்ல பூ பூத்து, பெண் குழந்தை பெரியவளான மாதிரி இருக்கு...'' என்று, காபியை அவள் கையில் கொடுத்தவாறு, புன்னகையுடன் சொன்னாள், அம்மா.வெடுக்கென்று, ''லில்லி பத்தி கவலைப்படும்மா... நமக்கு எதுக்கு அடுத்த வீட்டு செடியும், கொடியும்,'' என்றாள்.''லில்லி பத்தி கவலைப்பட என்ன இருக்கு... வகுப்புல முதல் இடம்... பாட்டுல தேன் சொட்டுது... வீட்டு வேலை, கம்ப்யூட்டர், சமையல்ன்னு, எல்லாத்துலயும் ஆர்வம்... சரி, அங்கம்மா உன்கிட்ட பேசினாளா...''''எதைப்பத்தி?''''பாவம், வீடு ரொம்ப ஒழுகறதாம். மழைக்காலத்துக்கு முன், கூரையை மாத்தணுமாம். ரெண்டு பெண் குழந்தைகளை வெச்சிருக்கா... சம்பள அட்வான்ஸ் கேட்டாள்...'' என்றாள், அம்மா.''அவளுக்கு, இதே வேலையா இருக்கும்மா... போன தடவை கொடுத்ததே இன்னும் முழுசா அடைக்கல. அதுக்குள்ள அடுத்ததா?''பேரு தான் அரசு வேலை... ஆனா, நான் படுவது நாய் படாத பாடு... என்னவோ, பண்ணையார் வீடு மாதிரி நெனச்சுக்காதே... புரியுதா?''''சரிடி... உன் கஷ்டம் எனக்குத் தெரியாதா... ஆனா, அவ நம்மை விட பாவம் இல்லையா... முதுகு ஒடிய ஒடிய, ஆறு வீட்டுல வேலை... ஏதோ நம்மால முடிஞ்சதை செய்யலாமே...'' என்றாள், அம்மா.''இந்தப் பேச்சை இத்தோட விடு... வாரி இறைக்கிற அளவுக்கெல்லாம் இங்கே இல்லை. வந்தால் வரட்டும். இல்லேன்னா, வீட்டு வேலைகளை நீயும், நானும் செஞ்சுக்கலாம். சீக்கிரம் கிளம்பி, இன்னிக்கு பானுவை பார்க்கணும்,'' என்றாள், உதயா.தலை குனிந்தபடியே திரும்பினாள், அம்மா.நாள் முழுவதும் எரிச்சலாகவே இருந்தது. தியாகுவுக்கும், அவளுக்கும் பொருத்தம் பார்த்த ஜோசியக்காரன் யார் என்று கோபம் கொப்பளித்தது.வாகனங்களில் சிரித்துச் செல்லும் மனைவியின் முகங்கள்; பூக்காரர்களிடம் மல்லிகைச்சரம் வாங்கும் கணவர்கள்; காய், பழம், பூ என்று, கலகலப்பான கடைகள் எதைப் பார்த்தாலும் கடுப்பு.'பலாசியோ பலாசியோ' என்று, உரத்த குரலில் பாடியபடி, சைக்கிள்களில் பறந்த சிறுவர்கள் மேல் இனம் புரியாத கோபம்.அய்யோ... ஏன் இப்படி ஆகிவிட்டது காலம்... மனம் விட்டு சிரிப்பதே மறந்து போய் விட்டது.கால்களற்ற இளவரசன், லாயத்துக் குதிரைகளின் கடிவாளங்களை தினமும் தொட்டு, முத்தமிட்டு கண்ணீர் சிந்தியதாக, எப்போதோ வாசித்த கவிதை நினைவுக்கு வந்தது. தினசரி கண்ணீர், அவளைப் போல.இதன் முடிவு தான் எங்கே... மனதை உடைத்துப் போட்ட காலம், மறுபடி ஒன்றாக சேர்க்குமா?தனித்திருந்து, கண்ணீர் வழிய வாழவே விதிக்கப்பட்ட அந்த கால்களற்ற இளவரசன் போலவே, அவளும் வாழ்ந்து முடிக்க வேண்டுமா?''உதயா... கிளம்பிட்டியா...'' என, போனில் அழைத்தாள், பானு.''இல்லை, இதோ கிளம்பறேன்... வங்கி வாசல்ல காத்திருக்கவா?''''ஆமாம், உதயா... சாரி... எனக்கு, 'பர்சனல் லோன்' வாங்க வேண்டியிருந்தது. 'மியூச்சுவலா' கையெழுத்து போட, பக்கத்து வீட்டு, வனஜா ஒத்துகிட்டிருந்தா... இப்போ அவங்க வீட்டுக்காரர், வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம்.''வேற ஆள் பார்க்கணும். எதுக்கு உன்னை, 'மீட்' பண்ணலாம்ன்னு நெனச்சேன்னா... உங்க அம்மா, வழியில பார்த்து, எங்கம்மாகிட்ட வெங்காய வத்தல் வேணும்ன்னு கேட்டாங்களாம்... அதை உன்கிட்ட கொடுக்க,'' என்றாள்.''ஓ.கே., சரி.''''எனக்கு முழுநாளும், 'சர்வே' எடுக்க, சுத்தவே சரியா இருக்கு, உதயா... 3,000 'என்ட்ரி' எடுத்துக் கொடுத்தால், 500 ரூபாய் கிடைக்கும். அதுதான் எங்க மூணு பேர் கஞ்சிக்காவது உதவுது. இன்னும் அவர் ஆபிஸ்ல இருந்து ஒரு பைசாவும் வரலே...''வந்தாலும், ஆஸ்பத்திரி கடனை அடைக்கவே சரியா இருக்கும். சாரி... பாவம் நீ... தியாகு இறந்த வேதனையே குறையல உனக்கு... என் கவலைகளை வேற ஏத்தறேன், உன் முதுகுல...''''நாளைக்கு, 'மீட்' பண்ணலாம், பானு... வெச்சுடவா?''''சரி, உதயா... அமைதியா இரு. எல்லாம் நல்லா நடக்கும்,'' என்று, போனை அணைத்தாள்.அலுவலக தோழியின் வீட்டு கல்யாணம். கண்டிப்பாக போய்த்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் பொறாமை என்று நினைப்பர். உண்மையில் வலி தான். மனதில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ இல்லாமல் எந்த நிகழ்ச்சிக்கும் போக பிடிக்கவில்லை.கூட்டம் அதிகமாக இருந்தது. ஓரமாக உட்கார்ந்து கொண்டாள். பட்டுப் புடவைகளின் சரசரப்பு, மலர்களின் அழகு, சிறுமியரின் சிரிப்பு என்று, எதுவுமே ஒட்டவில்லை.அப்போதுதான், பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவரை கவனித்தாள்.கண்களை மூடி, தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தலை, இரண்டு பக்கமும் தானாக ஆடியது. 'பலே பலே...' என்று வாய் இயல்பாக சொல்லிக் கொண்டிருந்தது.'நிறைமதி முகம் எனும் ஒளியாலே...' பாடல் காதில் வந்து, இதயம் நோக்கிச் சென்றது.'நெறிவிழி கணையெனும் நிகராலே...' இரண்டு இளையவர்களின் இசை, நாதஸ்வரத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதோ, உள்ளே நெகிழ்வது போல இருந்தது.பெரியவரைப் பார்த்தாள்.அவரும், புன்னகையுடன் கண் திறந்து, அவளைப் பார்த்தார். பிறகு மென்குரலில், ''திருப்புகழ்ல வருகிற பாடல்... தமிழும், இசையும் எவ்வளவு அழகு. அதிலும், இந்த சிறுவர்கள் எப்படி வாசிக்கின்றனர். உயிரை கரைக்கிற இந்த வித்தையை எங்கே கற்றுக் கொண்டனர்?'' என்றார். சுற்றிலும் பார்த்தாள். கூட்டம் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தது.பெண்கள், நகை, புடவைகளையும்; ஆண்கள், பயணம், மது, வியாபார வெற்றிகளையும் விசாரித்துக் கொண்டிருந்தனர். மேடையில், சுப நிகழ்ச்சியில் மணமக்களும், உறவினர்களும் பரபரப்பாக இருக்க, குளிர்பானம் சுமந்த பெண்கள், மொபைல்போனில் தீவிரமான ஆண்கள், சமையல் வேலைகள் என்று, அரங்கம் தன் உலகத்தில் இருந்தது.இளையவர்களிடம் சென்று, கைகூப்பி வணங்கிய பெரியவர், ''அருமை அருமை... அம்சாநந்தி, மிக மென்மையான ராகம்... பாடல் மட்டுமில்லை குழந்தைகளே... உங்க வாசிப்பும், பூரண சந்திரன் தான்.''இன்றைய நாள் அருமை... நீங்கள், இசைக்கு நிறைய சேவை செய்யணும். இசை தான் மனுஷனை சாந்தப்படுத்தி மனுஷனாக்கும்...'' என்றார்.அவர்கள் பூரித்துப் போயினர். எழுந்து, காலில் விழ முயற்சித்தவர்களை தடுத்து, அணைத்துக் கொண்டார். மெல்ல திரும்பி, இருக்கையில் அமர்ந்தார். உணவிற்காக, யாரோ கைபிடித்து அவரை அழைத்துச் சென்றனர்.வியப்புடன் பெரியவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென ஏதேதோ எண்ணங்கள் தோன்றின.தன் வாழ்வில், யாரையாவது பாராட்டியிருக்கிறாளா... மனம் கசிந்து ஒரு வார்த்தை பேசியிருக்கிறாளா... குறைந்தபட்சம் நன்றியாவது சொல்லியிருக்கிறாளா?இந்த தள்ளாத வயதில் ஏன் நெகிழ்ந்து மனதை வெளிப்படுத்தினார், பெரியவர். உண்மையிலேயே உள்ளத்தை உருக்கிய இசையை தன்னிடமே வைத்துக் கொள்ளாமல், ஊர் முழுக்க பரவட்டும் என்று ஏன் விரும்பினார்... அந்த கலைஞர்களை மலர்ச்சியுடன் ஏன் புகழ்ந்து மகிழ்ந்தார்?வெளியில் வந்தபோது, வண்டியில் எதிரில் வந்தாள், பானு.''அட உதயா... நீ எங்க இங்கே... நான், 'சர்வே'க்காக வந்தேன். ஆஸ்பிடல்ல, நீரிழிவு நோயாளிகளை கணக்கு எடுக்கணும். வா, உன் அலுவலகத்துல இறக்கி விடறேன்,'' என்றாள்.வரிசை கட்டிய பற்களின் அழகான வெண்சிரிப்பு. எப்போதும் சிநேகம் காட்டும் உடல்மொழி. இதமான வார்த்தை பேசும் மென்னிதழ்கள்.''ஏய் உதயா... என்ன அப்படி பாக்கறே? வத்தல் பாக்கெட்ட உன் அம்மாகிட்ட கொடுத்தாச்சு... காசு கொடுக்க வந்தாங்களாம், என் அம்மா வாங்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்... கூடப் பிறந்தவள் மாதிரிதான் நீ எனக்கு... வா.''''என் ஆபீஸ் துாரம், பானு... ஆட்டோல போய்க்கிறேன்... நீ கிளம்பு.''''அட, நானும் அங்கதான் போறேன். ஆரண்யம்... 'சர்வே' முடிச்சுட்டு போலாம்ன்னு ப்ளான்... இப்போ கொஞ்சம் மாத்திக்கிறேன், அவ்ளோ தான். ஏறு ஏறு...''''ஆரண்யமா... அது, வயோதிகர் இல்லம்தானே... நீ, நீ...'' என்று, அவள் தடுமாறினாள்.''ஆமாம் உதயா... முதியோர் இல்லம் தான். பாவப்பட்ட அம்மா, அப்பாக்கள், வயசான காலத்துல கூண்டுப் பறவைகள் மாதிரி இருக்காங்க. என்னால பணம் கொடுக்க முடியல... வசதி இல்ல... ஆனா, நேரம் இருக்கு...''மனசுக்கு, ஆரோக்கியமா இருக்கு... வாரத்துல ரெண்டு நாள், அங்கே போவேன். ஏதாவது தைக்கிறது, படிச்சுக் காட்டறது, உலக விஷயங்கள் சொல்றது, அவங்களோட மலரும் நினைவுகளை கேட்கிறது. மரியாதையும், மதிப்புமா வாழ்ந்த மக்கள்... இப்போ காலம் இங்க கொண்டு வந்து வீசியிருக்கு...''''நானும் வரேன்.''''உன் விருப்பம்.''''அதுக்கு முன், ஒரு வேலை இருக்கு, பானு.''''என்ன உதயா?''''வங்கிக்கு போகலாம்... உனக்கு, நான் உத்தரவாத கையெழுத்து போடறேன்.''''உதயா...'' என்பதற்குள், கரகரத்தாள், பானு.மனம் இலகுவாக இருப்பதை உணர்ந்தாள். அம்மாவிடம், அங்கம்மாவுக்கு முன்பணம் கொடுக்கச் சொன்னாள். பக்கத்து வீட்டு பரிமளாவிடம், கொய்யா மொட்டு பற்றிப் பேசி புன்னகைத்தாள். இப்போது, காற்று போல இருப்பதாகத் தோன்றியது. எதைத் தேடிக் கொண்டிருந்தாளோ, அதைக் கண்டடைந்த நிறைவு தோன்றியது.வி. உஷா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !