நாய்களுக்கு பிரியாணி!
'கொரோனா' தொற்று காரணமாக, ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், தெரு நாய்களுக்கு தன்னார்வலர்கள் சிலர், உணவு வழங்கினர். இப்போது, அவர்களை காணவில்லை. ஆனால், படத்தில் இருக்கும் அஜீஸ், தொடர்ந்து பல ஆண்டுகளாக, தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக, கேரள மாநிலம், கோழிக்கோடு கடற்கரையில் சுற்றித் திரியும் நாய்கள், இவருடைய வருகைக்காக காத்திருப்பதை பார்க்கலாம். தினமும் பிரியாணி பொட்டலங்களை, பெரிய அட்டை பெட்டியில் வைத்து, இங்கு எடுத்து வருவார்.அஜீஸ் வந்ததும், நாய்கள் அனைத்தும் அவரை சூழ்ந்து கொள்ளும். ஆனால், உடனே உணவு கொடுக்க மாட்டார். 'எல்லாரும் போய் குளிச்சுட்டு வாங்க...' என்று, குரல் கொடுப்பார்.உடனே கடலுக்குள் சென்று உடலை நனைத்து விட்டு ஓடி வருகின்றன. அவைகள் வந்ததும், உணவு பொட்டலங்களை பிரித்து வைப்பார். திருப்தியுடன் சாப்பிட்டு, நன்றியுடன் இவரைப் பார்த்து வாலாட்டும். இந்த அரிய காட்சியை கண்டு ஏராளமான மக்கள் ரசிக்கின்றனர்.'தினமும் இப்படி சாப்பாடு போடுகிறீர்களே... எப்படி கட்டுப்படியாகிறது...' என்று யாராவது கேட்டால், சிரித்தபடியே சென்று விடுகிறார்.— ஜோல்னாபையன்