சுமைகள் சந்தோஷம் தருகின்றன - ரயில்வே பெண் கூலி ரூனாலி
மகாராஷ்டிரா மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம், நாக்பூர். நகரத்தைப் போலவே விரிவான, பெரிய ரயில் நிலையம்.பெரிய நகரங்களை இணைக்கும் ரயில்கள், 24 மணி நேரமும் வருவதும் போவதுமாக இருக்கின்றன.இங்கு வந்து இறங்கும் பயணியரின் சுமைகளை சுமந்து செல்ல, ரயில்வே கூலிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.அவர்களில் வித்தியாசமாக ஒரு பெண் கூலி, ரூனாலி.பயணியரின், இரண்டு மூன்று சுமைகளை கூட, அநாயசமாக தலையில் துாக்கிக் கொள்கிறார். சிறிய சுமைகளை வாங்கி, தோளில் மாட்டிக் கொள்கிறார். வயதான பயணியாக இருந்தால், அவர்களின் கையை பிடித்து கொண்டு, அழைத்து போய் விடுகிறார்.ரூனாலி இந்த தொழிலுக்கு வந்தது எப்படி?இவரது கணவர், நாக்பூர் ரயில் நிலையத்தில் கூலியாக இருந்தார்; திருமணமாகி இரண்டே ஆண்டில் திடீரென விபத்தில் இறந்து விட்டார்.ஒன்றரை வயது பெண் குழந்தை, வயதான மாமனார் - மாமியார் ஆகியோரைக் காப்பாற்றும் பொறுப்பு, இளம் விதவையான இவர் முன் பெரும் பாரமாக நின்றது. ஏதாவது வேலை செய்து சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம்.கணவர், ரயில்வே கூலியாக வேலை பார்த்த 'பேட்ஜ்' - லைசென்ஸ் மட்டுமே துணையாக நின்றது.கணவரின் ஆசியை நெஞ்சிலும் அவர் விட்டுச் சென்ற, 'பேட்ஜை' கையிலும் மாட்டிக் கொண்டு, ரயில்வே பெண் கூலியாக களமிறங்கினார்.பலமுறை படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டும்; பயணியருக்கு பிடித்தபடி இயங்க வேண்டும்; நேரம் காலம் பார்க்காது உழைக்க வேண்டும்.இதுதவிர, ஆண்கள் கூட துாக்க சிரமப்படும் சுமைகளை, ரூனாலி சுமப்பரா என்பதே ஆரம்பத்தில் பலரது சந்தேகமாக இருந்தது. ஆனால், தன் பெண்ணை படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்ற வைராக்கியம் எல்லா சிரமங்களையும் தவிடு பொடியாக்கியது.இதோ ரயில்வே கூலியாக மூன்றாண்டு காலம் வெற்றிகரமாக கடந்து விட்டார்.'நான் தான் வேண்டும் என்று, ரயில் ஏறும்போதே என்னை, 'புக்' செய்து வரும் ரெகுலர் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். தனியாக சுமைகளுடன் வரும் பெண் பயணியரின் முதல் தேர்வு நான் தான்.'சக ஆண் கூலி தொழிலாளர்கள் நிறைய உதவுகின்றனர். போதுமான வருமானம் கிடைக்கிறது. சிறந்த பள்ளியில் நன்கு படிக்கிறாள், மகள். என்னை சார்ந்த உறவுகள் நிம்மதியாக இருக்கின்றனர். இதனால், சுமைகள் சந்தோஷம் தருகின்றன...' என்கிறார், ரூனாலி.எல். முருகராஜ்