உள்ளூர் செய்திகள்

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: என்னை ஆடிப்போக வைத்த சிவாஜி! (13)

தந்தை தமிழ்வாணன் பற்றி நடிகர் திலகம் சொன்னது, சற்றே வித்தியாசமான கருத்து.'வெரி கான்ட்ரவெர்ஷியல் பர்சன்...' என்றார். அவர் சொன்ன ஆங்கில வார்த்தைக்கு, சர்ச்சைக்குரிய மனிதர் என, பொருள்.சிவாஜி இப்படி சொல்ல, காரணம் இல்லாமல் இல்லை. சிவாஜி நடித்த கட்டபொம்மன் படம், பெரிய வெற்றி பெற்றது. ஆனால், கட்டபொம்மன் பற்றி சர்ச்சைக்குரிய நுால் ஒன்றை எழுதினார், என் தந்தை தமிழ்வாணன். வெள்ளையருக்கு எதிராக முதல் வீர முழக்கம் இட்டவன், புலித்தேவன் என்ற பூலித்தேவனே என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.இந்த கருத்தை நிலைநாட்ட, தமிழகமெங்கும், நடிகர் ஈ.ஆர்.சகாதேவனை, பூலித்தேவனாக்கி நாடகம் நடத்தி, கைப்பொருளை ஏராளமாக செலவழித்தார்.ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர்., என, எந்த ஆளுமையையும், கேலியும், கிண்டலுமாக எழுதியதோடு, இவர்களது அரசியல் நிலைப்பாடுகளை தாக்கவும் செய்தார், என் தந்தை.அந்த காலத்தில் இப்படி துணிந்து இவர்களை விமர்சித்த பத்திரிகையாளர்கள் எவரும் இல்லை எனலாம். இப்படி, துணிவே துணை என்ற தாரக மந்திரத்தோடு வலம் வந்த தமிழ்வாணனை பற்றி, சிவாஜி இப்படி ஒரு கருத்தை கொண்டிருந்ததில், எங்களுக்கு வியப்பு இல்லை.அரண்மனைகளிலும், மாபெரும் உலகத் தலைவர்களின் வீடுகளிலும் உள்ளது போன்ற, 30 பேர் அமரக் கூடிய, அந்த சாப்பாட்டு மேசையில், நாங்கள் சிலர் மட்டும் பொசங்கலாய் அமர்ந்திருந்தோம்.'தட்டு காலியா இருக்கே! நல்லா சாப்பிடுங்கய்யா! ஏன் நல்லா இல்லையா? கமலா! அந்த தம்பிக்கு அதை வை, இதை வை...' என, சிவாஜி உபசரித்த விதம் இருக்கிறதே... இது, சிவாஜி எனும் மாபெரும் கலைஞன் தானா அல்லது அக்கறை மிகுந்த சராசரி குடும்ப தலைவரா என, எண்ண வைத்தது.பேச அவகாசம், சந்தர்ப்பம் கிடைத்தால் விடுபவனா, நான்!'உங்களை, சீரியஸ் பர்சனாகவே நாங்கள், கற்பனை செய்து வைத்திருக்கிறோம். நீங்களோ, வெகு இயல்பான, 'டவுண் டூ யர்த் பர்சன்' ஆக இருக்கிறீர்கள்...' என்றேன்.'லேனா...' என விளித்து, (அதற்குள் என் பெயர், அவர் மனதில் பதிந்து விட்டதே என வியந்தேன்.) 'இந்த டைரக்டர்கள் எல்லாம் இருக்காங்களே... இவங்க எல்லாருமா சேர்ந்து, என் கண்களை சிவக்க வைத்து, உரத்த குரலில் பேச வைத்து, என்னை அப்படி ஆக்கிட்டாங்க...' என்ற போது, நாங்கள் அனைவரும் பெரிதாகச் சிரித்தோம்.'பிரபு, பொள்ளாச்சி படப்பிடிப்பில் இருக்கான். அவனுக்கு, 'லைன்' போடுறேன். பேசுங்க...' என, இதற்கு மட்டும் ஒருவர் உதவியை நாடினார். நீள ஒயர் கொண்ட, தொலைபேசி, எங்கள் சாப்பாட்டு மேசைக்கே வந்தது.'பிரபு... டாக்டர் ஜவஹர், திருமதி ஜவஹர், நம்ம வீட்டு விருந்துக்கு வந்திருக்காங்க. தமிழ்வாணன் பிள்ளைகளும் இருக்காங்க. டாக்டருடன் பேசு. என்னை, அம்மாவை அமெரிக்காவுல அப்படி கவனிச்சுக்கிட்டாங்க. ஞாபகம் இருக்குல்ல?' என, கேட்டபடி, ஜவஹரிடம், ரிசீவரைக் கொடுத்தார்.சற்றும் நடிப்பு இல்லாத, இயல்பான சிவாஜி எப்படி பேசுவார், நடந்து கொள்வார் என, கூடவே இருந்து, 50 நிமிடங்கள் பார்த்தது, வாழ்வின் இனிய தருணங்கள் என்பேன்.சிவாஜியும், பாரிஸ் தமிழ்ச் சங்கத் தலைவர், பாரிஸ் ஜமாலும் மிக நெருக்கம். சிவாஜிக்கு, பிரான்சின் மிக உயரிய விருதான, 'செவாலியே' விருதை, பெருமுயற்சி செய்து வாங்கித் தந்தது, பாரிஸ் தமிழ்ச் சங்கம் தான் என்ற வகையில், இவர்களது நெருக்கம் மேலும் இறுக்கமானது.சிவாஜிக்கு செவாலியே விருது பெற்றதற்காக, சென்னையில் அவருக்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என, விரும்பினார், பாரிஸ் ஜமால். முதலில் சம்மதிக்காத சிவாஜி, பிறகு ஒப்புக் கொண்டார்.சென்னை, ஆனந்த் தியேட்டரில் விழா.'நீங்களும் வாழ்த்திப் பேசுறீங்க...' என்றார், என்னிடம் உரிமையோடு, பாரிஸ் ஜமால்.'என்னது நானா?' என, முதலில், 'பிகு' செய்து கொண்டேன்.'நாம நடத்துற விழா! இப்படி பின்வாங்கப் பார்த்தால் எப்படி?' என்றார்; சம்மதித்தேன்.அன்றாடம் பலரைக் கடந்து வருகிறவர், சிவாஜி. என்னை எங்கே நினைவில் வைத்திருக்கப் போகிறார் என, நினைத்தேன்.விழாவில் சிவாஜியை நெருங்கவே முடியவில்லை. ஒரு வணக்கம் தெரிவிக்கக் கூட, சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. வலியப் போய் பேச தயக்கம்.'சிவாஜி சாரை பார்த்துட்டீங்களா?' கேட்டார், பாரிஸ் ஜமால்.'இன்னும் இல்லை...' என்றேன்.'என்ன நீங்க! உங்களை வாழ்த்துரைக்கு கூப்பிடும் போதாவது, ரெண்டு வார்த்தை பேசிடுங்க...' என்றார்.'சரி...' என்றேன்.சிவாஜியைப் பாராட்ட வார்த்தைகள் ஏது? என்ன பாராட்டினாலும் அவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு புளித்து போயிருக்குமே அவருக்கு!எனக்கு பிடித்ததெல்லாம் அவரது நடிப்பை தாண்டி, 'பங்க்சுவாலிட்டி!' இதைத் தான் முதலில் தொட்டேன்.'காலை, 8:00 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 8:00 மணிக்கு ஸ்டூடியோவிற்குள் நுழைந்தால், அதுவே, 'பங்க்சுவாலிட்டி' தான். ஆனால், 8:00 மணிக்கு படப்படிப்பு தளத்தில், 'மேக்கப்' உடன் நுழைவார்.'சிவாஜி படப்பிடிப்பு என்றால், சக கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, இயக்குனர் என, அனைவரும் அலறுவர். பின்னாளில் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதையே வழக்கமாக கொண்டிருந்த பலரும், சிவாஜிக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர்.'சிவாஜியின் தொழில் சிரத்தை, அதற்கு தந்த முக்கியத்துவம் இவையெல்லாம் ஒட்டுமொத்த திரையுலகிற்கே முன்னுதாரணம். சிவாஜியின் நினைவாற்றல் அபாரமானது. வசன, 'ஸ்கிரிப்டை' கையில் தொட மாட்டார். உதவி இயக்குனர் படித்து காட்ட வேண்டும். உடனே 'டேக் போகலாம்...' என்பார். வரி பிசகாமல் வார்த்தை மாறாமல் பேசி நடிப்பார்.'இயக்குனர், 'கட்' சொன்னதும், 'என்னப்பா, சரியா வந்துருக்கா, போதுமா? இன்னொரு, 'டேக்' போகலாமா...' என, கேட்பார். சக நடிகர் - நடிகையரும் காட்சியில் எடுபட வேண்டும் என நினைக்கும் பெருந்தன்மையாளர், சிவாஜி...' என, என் பேச்சை தொடுத்தேன்.இடையிடையே, சிவாஜி, என் பேச்சை கவனிக்கிறாரா என, பார்த்துக் கொண்டேன். என் பக்கமே திரும்பி உட்கார்ந்து, பேச்சை கூர்மையான தன் கண்களால், 'ஸ்கேன்' செய்யவே ஆரம்பித்து விட்டார்.பேச்சு முடித்து திரும்பும் போது தான், சிவாஜிக்கு வணக்கம் சொன்னேன்.'மன்னிச்சுக்குங்க, உங்களை முன்னாடியே பார்த்திருக்க வேண்டும். கவனிக்க தவறிட்டேன்...' என்றேன்.'வித்தியாசமா இருந்தது, உங்க பேச்சு...' என்றார்.ஆடிப்போய் விட்டேன். எல்லாரைமே, நீ, வா, போ, வாடா, போடா என்பார், சிவாஜி. ஆனால், இந்த எளியவனை அவர், மரியாதையுடன் விளித்ததும், பேச்சை பாராட்டியதும், ஏதோ விருது கிடைத்தது போல இருந்தது.விழா முடிந்து புறப்பட்ட போது, காரில் ஏறும் முன், 'எங்கே லேனா?' என, என்னை தேடியது, என் வாழ்வின் பெருமைமிகு கணம் என்பேன்.அடுத்த ஆளுமை, இசைஞானி இளையராஜா. இவரை திரையுலக வருகைக்கு முன்பே எனக்கு தெரியும்!என்ன லேனா! அள்ளி விடுவதற்கு அளவே இல்லையா என்கிறீர்களா?அடுத்த வாரம் ஆதாரத்துடன் சொல்கிறேனே! — தொடரும்.லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !