உள்ளூர் செய்திகள்

அரிய அளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: திமுக., பிரமுகர் பற்றி ஸ்டாலினிடம் புகார் சொன்ன நான்! (10)

ஜெயலலிதா தந்த அந்தப் பரிசுப் பொருளை பிரித்ததும், உள்ளிருந்தவை பளப்பள என, என் கண்களைப் பறித்தன!இரண்டு வெள்ளி விளக்குகள், அவை.இன்று இவற்றின் மதிப்பு, ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு மேல்.எந்தப் பத்திரிகையாளருக்கும் இப்படி ஒரு பரிசை, ஜெயலலிதா அளித்ததாக தெரியவில்லை.மணமக்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளிலேயே மிக உயர்ந்த பரிசு இதுதான் என, என் குடும்பத்தினர் பேசிக் கொண்டனர்.இந்த செய்தியோடு என்னால் ஆளுமைக்குத் தாவிவிட முடியவில்லை. என் பெயர், கலைமாமணி விருதுக்காக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட போது, பைல், பையனுார் பங்களாவுக்கு கையெழுத்திற்கென எடுத்துச் செல்லப்பட்டு, கையெழுத்தாகி வந்து விட்டது என, போயஸ்கார்டனில் இருந்து தகவல் கசிந்தது.கொஞ்ச நஞ்சமல்ல! ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. ஜெயலலிதா கையெழுத்திட்ட பிறகும், கலைமாமணி விருதுகள் ஏன் அறிவிக்கப்படவில்லை? எதனால் இது தடைபட்டு நிற்கிறது? இடைப்பட்ட காலத்தில் விதவிதமான ஊகங்கள், கற்பனைகள் என் வட்டாரத்தால் பேசப்பட்டு விட்டன.'உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டது...' எனக் கூட கூறினர். இதை, நானும், ஒருவேளை இருக்கலாம் என எண்ணும்படியான சூழ்நிலை அப்போது உருவானது.காரணம், ஜெயலலிதாவின் சில அரசியல் முடிவுகளை, நான் வெளிப்படையாக விமர்சித்து, 'கல்கண்டு' மற்றும் 'குமுதம்' இதழில் எழுதினேன். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒரு மாவட்டத் தலைமை, வெளிப்படையாகவே என்னிடம் இப்படி கேட்டது: 'என்னது இது! எங்கள் தலைவியை இப்படியெல்லாம் கடுமையாக எழுதுகிறீர்களே! நன்கு மாட்டப் போகிறீர்கள்...'நான் கவலைப்படவில்லை.'தனிப்பட்ட முறையிலா தாக்கினேன், சொந்த விவகாரங்களையா விமர்சிக்கிறேன், கொள்கை ரீதியான விமர்சனங்களைக் கூடவா எழுதக் கூடாது என்கிறீர்கள்?' என்றேன்.'உங்களுக்கு கலைமாமணி கிடைக்காது போங்கள்...' என்றார்.'பரவாயில்லை. விருதுகளை காட்டி, என் பேனாவை எல்லாம் முடக்க முடியாது...' என்றேன். என் குரலில் வேகம் எழுந்தது.'இப்படியெல்லாமா வெளிப்படையாக பேசுவது? இதெல்லாம் கூட ஜெயலலிதாவின் காதுகளுக்குப் போகும்...' என்றனர், எங்கள் ஆசிரியர் குழுவினர்.இதற்கும் அடங்காமல், 'போகட்டும்...' என்றேன். 'இது தேறாத கேஸ்...' என்ற முக பாவத்துடன் கலைந்தனர்.ஒன்பது ஆண்டுகள், 'சஸ்பென்ஸ்' ஆகவே நகர, எடப்பாடியாரின் கைகளால் கலைமாமணி விருதைப் பெற்றேன். அப்போது, என் நியாயமான அரசியல் விமர்சனங்களை ஜெயலலிதா சரிவர ஏற்றுக் கொண்டதாகவே, ஊகம் செய்து கொண்டேன்.அடுத்த ஆளுமை, நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.இவர், வேளச்சேரியில் வசித்த காலம் அது. அரசியல்வாதிகள் எவரிடமும் போய் நின்று எதற்காகவும் பல்லிளிக்கக் கூடாது என்ற, என் கொள்கையை தகர்க்கிற விதமாக, மிக நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர், என்னை அணுகினார்.புதுக்கோட்டை நிஜாம் காலனியில், இவரது சொத்தை சுயமாக விற்க முடியாமலும், அதை தனக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்கும்படியாகவும், செல்வாக்கு மிக்க ஓர் உள்ளூர் தி.மு.க., தலைவர் இவருக்கு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். விட்டால் அடியாள், தடியாளைக் களத்தில் இறக்கத் தயங்க மாட்டார் என்ற நிலைமை கூட உருவானது. கேட்பவர்களுக்கு ரத்தம் கொதிக்கும். அப்படி ஒரு மிரட்டல், உருட்டல்!யார் என தெரியவில்லை!'ஒரு பத்திரிகையாளர் உங்களுக்கு உறவினராக இருக்கும் போது, இதற்கு போய் பயப்படலாமா? அதுவும் லேனாவும், ஸ்டாலினும் மிக (?!) நெருக்கம். லேனாவை அழைத்துக் கொண்டு நேரே ஸ்டாலினிடம் போங்கள்...' என, என் உறவினரை கிளப்பிவிட்டு விட்டனர்.அவரும் வீட்டில் வந்து இறங்கி, 'வாங்க! இப்பவே போய் மு.க.ஸ்டாலினை பார்க்கலாம்...' என, ஆரம்பித்து விட்டார்.'இந்த பஞ்சாயத்திற்கெல்லாம் நான் வரமாட்டேன். என்னை, என் போக்கில் விடுங்கள்...' என்றேன்.கேட்டால் தானே? நான் மதிக்கும் ஒரு மூத்த உறவினரை வேறு களத்தில் இறக்கினார்.'உங்கள் கட்சிக்காரர் இப்படியெல்லாம் அராஜகம் செய்கிறார். இதை தட்டிக் கேட்க மாட்டீர்களா? அமைதிப்படுத்துங்கள் அவரை என்று தானே கேட்கிறோம். இது எப்படி பல்லிளிக்கிற ரகத்தில் வரும்?' என, இவரும் ஏகமாய் ஆரம்பித்து விட்டார்.மு.க.ஸ்டாலினின் வேளச்சேரி வீட்டிற்கு போய் இறங்கினோம்.'சென்டிமென்ட் போடுவோம்...' என, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டார், அந்த உறவினர். 'நாம் இருவரும் போதுமே, இவர் எதற்கு?' என்றேன்.'இருக்கட்டும், இருக்கட்டும்...' என்றார். கேட்டுக் கொள்ளவே இல்லை.போகிற வழியில், உறவினரிடம், 'நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அவரது கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிற பிரமுகரைப் பற்றி, அவரிடமே புகார் செய்யப் போகிறோம். எனவே, நான் இந்த விஷயத்தை பக்குவமாக கையாள விரும்புகிறேன். 'என்னை என் போக்கிற்கு விட்டுவிடுங்கள். உங்களை ஸ்டாலின் நேரிடையாக ஏதும் கேட்டால் கூட, அடக்கி வாசியுங்கள். என்னிடம் விளக்கியது போல் உடைத்துப் பேசாதீர்கள். சரியா?' என்றேன்.உறவினரோ வெடித்து பேசும் மனநிலையில் தான் இருந்தார். அவரது பாதிப்பின் ஆழம் அப்படி.வேளச்சேரியில் மிக அமைதியான பகுதி அது. ஸ்டாலினின் வீட்டு வாசலில் கட்சிக்காரர்கள் மருந்திற்கும் காணோம்.எனக்கும், மு.க.ஸ்டாலினுக்குமான முதல் சந்திப்பு அது. வசீகரப் புன்னகையுடன் கை கூப்பி வரவேற்றார்.விஷயத்தை நான் விளக்க விளக்க, அவர் முகம் மாறியது. இந்த முகமாற்றம் எந்த ரகத்தை சேர்ந்தது?'கட்சிக்காரரைப் பற்றி என்னிடமே புகார் செய்ய வந்து விட்டீர்களா என்ற ரகமா அல்லது எங்கள் கட்சிக்காரரா இப்படி என்ற ரகமா என்பதை, அவரது முதல் வார்த்தை வரும் வரை, என்னால் ஊகிக்க முடியவில்லை.அந்த வார்த்தை...அடுத்த வாரம்.லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !