உள்ளூர் செய்திகள்

நாரதர் சாபம்!

மனக்கலக்கத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த, அடியார் ஒருவர், வழியில் பூத்துக் குலுங்கிய செண்பக மரம் ஒன்றை கண்டார். மனம் சற்று அமைதியடைந்தவர், சுற்றுமுற்றும் பார்க்க, சற்று தொலைவில், ஒரு சிவன் கோவில் இருந்தது.மரத்திலிருந்த மலர்களை பறித்து போய், சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தார். அன்று துவங்கிய வழிபாடு, தினமும் தொடர்ந்தது.ஒருநாள், கோவில் வழிபாட்டிற்காக வந்த மன்னர், ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யும் அடியாரை கண்டு, 'நீங்கள் யார்...' என, விபரம் கேட்டார்.அடியாரும் நடந்ததை மன்னரிடம், விவரித்தார்.மனம் மகிழ்ந்த மன்னர், 'கவலைப் படாதீர்கள்... இனி நீங்கள், எந்த நேரமும் அரண்மனைக்கு வரலாம்...' என்றார்.இதையடுத்து, அவ்வப்போது அரண்மனை போவதும், வருவதுமாக இருக்கவே, அவருக்கு மரியாதை கொடுக்கத் துவங்கினர், மக்கள். இதை, பணமாக்க திட்டமிட்டார், அடியார். மன்னரிடம் தானம் வாங்கி வருவோரை, தன் தோரணையால் மிரட்டி, தானத்தில் பாதியை தன் பங்காக பெற்று வந்தார்.ஒருநாள், ஏழை ஒருவர், மன்னரிடமிருந்து, கன்றுடன் கூடிய பசு மாட்டை தானமாக பெற்று வந்தார். அவரை வழிமறித்து, 'வழக்கப்படி, இந்த தானத்தில் பாதியை எனக்கு தந்தாக வேண்டும்...' என, வற்புறுத்தினார், அடியார்.'ஐயா... அரசாங்கம், ஏழைகளுக்கு இலவசமாக தரும் பொருளில் பாதி கேட்கிறீர்களே... இது என்ன நியாயம், தர முடியாது...' என்று மறுத்தார்.அவரிடம் மனசாட்சியே இல்லாமல் வன்முறையில் ஈடுபட்டார், அடியார்.ஏழையின் மனைவி, கோவிலுக்கு சென்று, 'சிவபெருமானே... உன் அருள் பெற்ற உன்னடியார், என் கணவரை வருத்துவது முறையா...' என, கண்ணீர் சிந்தினாள்.அப்போது, அங்கு வழிபாட்டிற்கு வந்த, நாரதர், விபரமறிந்து, சிவபெருமானை வணங்கி, உத்தரவு பெற்று, கோவிலை விட்டு வெளியே வந்தார்.அதே நேரம், அடியார் எதிரில் வர, அவரை கண்ட நாரதர், 'இறையருளால் உனக்கு நல்ல நிலைமை கிடைத்திருந்தும், அடுத்தவர்களிடம் இப்படி இரக்கமின்றி அரக்கத்தனமாக நடந்த நீ, அரக்கனாக போவாய்...' என, சாபம் கொடுத்தார்.நடுங்கிப்போய், நாரதரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, மன்னிப்பு கேட்டு, சாப விமோசனம் வேண்டினார், அடியார்.மனம் இரங்கியவர், 'அரக்கனான உன்னை, ராமர் வந்து வதம் செய்வார். நீ, திவ்ய வடிவம் பெறுவாய்...' என, சாப விமோசனம் தந்தார், நாரதர். அந்த அடியாரே, விராதன் எனும் அரக்கனாக வந்து, ராமரால் வதம் செய்யப்பட்டார்.தெய்வம் தந்ததை வைத்து, நல்ல முறையில் வாழாமல், இரக்கமின்றி அடுத்தவரை வருத்தியவரின் கதை இது. அருள்புரியும் தெய்வமே, முறை தவறி நடப்பவருக்கு, உரியவர் (நாரதர்) மூலம் தண்டனையும் வழங்கும் என்பதை விளக்கும், சிவமகா புராண கதை இது.பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !