குறை தீர்க்கும் தெய்வம்!
தெரிந்தோ அல்லது தெரியாமல் வந்த துயரோ, எதுவாக இருந்தாலும், தெய்வத்திடம் முறையிட்டால், கண்டிப்பாகக் குறை தீர்ந்து விடும். கம்பர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இதை விளக்கும்.கம்பரின் மகனான அம்பிகாபதியும்; சோழ மன்னரின் மகளான அமராவதியும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இத்தகவல், மன்னருக்குத் தெரிந்தது. 'அரசன் மகளை, புலவன் மகன் விரும்புவதா?' என்று கொதித்தார், அரசர்.அதே சமயம், அதைச் சோதித்துப் பார்ப்பதற்காக, அரண்மனையிலேயே ஒரு விருந்துக்கும் ஏற்பாடு செய்து, கம்பரையும், அம்பிகாபதியையும் அழைத்தார்; அவர்களும் வந்தனர். அனைவரும் விருந்தில் அமர்ந்தவுடன், பரிமாறுவதற்காக வந்தாள், அமராவதி. அவளைப் பார்த்தவுடன், வர்ணித்துப் பாடத் துவங்கி விட்டான், அம்பிகாபதி. கம்பர் உட்பட அனைவரும் திடுக்கிட்டனர். நிலைமையை உணர்ந்த கம்பர், குறுக்கிட்டு, சரஸ்வதி தேவியை வேண்டி, காப்பாற்றுமாறு பாடினார். அதாவது, அரசர் மகளை வர்ணித்து அம்பிகாபதி துவங்கிய பாடல், சரஸ்வதி தேவியை வேண்டுவதாக மாறி விட்டது.அனைவரும் குழம்பினர்.'தெருவில் ஒரு பெண் கொட்டிக்கிழங்கு விற்றுக் கொண்டு போகிறாள். அவளை நோக்கித் தான் பாடினோம். வேண்டுமானால் வெளியே சென்று பாருங்கள்...' என்றார், கம்பர்.அனைவரும் வெளியே சென்று பார்த்தனர். அதே சமயம், தன்னை வேண்டிய கம்பரைக் காப்பதற்காக, சரஸ்வதி தேவி, கொட்டிக்கிழங்கு விற்கும் பெண் வடிவத்துடன் வந்தாள். பார்த்த அனைவரும் வியந்தனர். கம்பரோ, கொட்டிக்கிழங்கு விற்கும் பெண்ணாக வந்து, தன்னைக் காப்பாற்றியது சரஸ்வதி தேவியே என்பதை உணர்ந்து, இரு கரங்களையும் கூப்பி, மானசிகமாக வணங்கினார்.'தாயே... என்னை மட்டுமல்லாமல், என் மகனையும் காப்பாற்றிய உனக்கு, என்னம்மா கைமாறு செய்வேன்?' என்று கண்ணீர் வழிய முணுமுணுத்தார்.இக்கட்டான நேரத்தில் வந்து, இடைஞ்சலை நீக்கி இன்பம் அருள, தெய்வம் ஒரு போதும் மறப்பதில்லை; மறுப்பதில்லை. - பி.என். பரசுராமன்ஆன்மிக தகவல்கள்!இதயத்திலிருந்து 108 நாடிகள் பிரிகின்றன. இதனால், இதயப்பூர்வமாக நாம் சொல்லும் கடவுளின் திருநாமங்களை, 108 என்ற எண்ணிக்கையில் ஜபிக்கிறோம்!