உள்ளூர் செய்திகள்

விளக்கு திருவிழா!

பிரான்ஸ் நாட்டில், லயான் என்ற நகரில், டிச., 4 முதல் 8ம் தேதி வரை, புனித மேரியை கவுரவப்படுத்தும் விதமாக, விளக்கு திருவிழா நடைபெறுகிறது.கடந்த, 1643ல், லயான் நகர மக்களை, அம்மை நோய் தாக்கியது. மக்கள் பயந்து, அன்னை மேரியிடம், தங்களை காப்பாற்றுமாறு வேண்டினர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களை காப்பாற்றினார் அன்னை.இதற்கு நன்றியாக, அன்னை மேரிக்கு சிலை அமைத்து, செப்., 8, 1852ல் சிலையை திறப்பது என முடிவானது. ஆனால், குறிப்பிட்ட நாளில் வேலை முடியாததால், டிச., 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டது. டிச.,8ம் தேதியில் காலையில், கடும் மழையும், புயலும் லயான் நகரை சூழ்ந்தன. அதனால், சிலை திறப்பை, மீண்டும் தள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்ட சூழ்நிலையில், பிற்பகலில், மழையும், புயலும் நின்றன.இது அன்னை மேரியின் கருணை என வியந்து, நன்றி தெரிவிக்கும் விதமாக, தங்கள் வீட்டு வாசல் படியில், மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்ததுடன், மேரி சிலையையும் திறந்து வைத்தனர்.அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8ம் தேதி, அன்னை மேரிக்கு ஊர் முழுவதும் தீபம் ஏற்றி, விழா எடுக்க ஆரம்பித்தனர்.முதலில், ஒருநாள் திருவிழாவாக இருந்த இது, இந்த நூற்றாண்டில், நான்கு நாட்கள் கொண்டாடும் விழாவாக மாறியது. தினமும், ஊர் முழுவதும் விளக்கு ஏற்றுதல், கட்டடங்களுக்கு வண்ணம் பூசி, அலங்கார விளக்குகள் அமைப்பது, பிரமாண்ட போர்டுகளை வைத்து, அவற்றை, விளக்குகளால் ஜோடித்தல், பாட்டு கச்சேரி மற்றும் ஆட்டம், பாட்டம் என, எல்லாம் நடக்க ஆரம்பித்தன.அன்று, அன்னை மேரி சிலையை நோக்கி, கையில் மெழுகுவர்த்தி தீபத்துடன் ஊர்வலம் செல்வர். அப்போது, கார்னிவல் போல், அலங்கார வண்டிகளும் பங்கேற்கும். ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளன்று, ஏராளமான மக்கள் கூடி, ஊர்வலத்தை கண்டு களிப்பதுடன், அன்னை மேரியையும் வணங்கிச் செல்கின்றனர்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !