உள்ளூர் செய்திகள்

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (19)

கடந்த, 1972ல், 'பொம்மை' இதழில், 'அரசியலில் ஏதேனும் ஒரு கட்சியில் ஈடுபாடு உண்டா?' என, வாசகர் ஒருவர் கேள்வி கேட்டார்.அதற்கு, 'அரசியல் கட்சிகளில் இப்போதைக்கு எதிலும் ஈடுபாடு வைத்துக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அரசியலில் புகுவேன். அப்போது, ஏதேனும் ஒரு கட்சியில் சேர வேண்டி இருக்கலாம். பின்னால் எப்படி இருக்குமோ தெரியாது...' என கூறியிருந்தார், ஜெய்.ஜெய்சங்கர், தன் அரசியல் ஆசையை துறந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. அந்நாளில், எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், அவரது படங்களுக்கு அடுத்ததாக விரும்பிப் பார்ப்பது, ஜெய்சங்கர் படங்களைத் தான்.கருணாநிதியுடனான நட்பு, அதற்கு வேட்டு வைத்ததோடு, ஜெய்சங்கர் நடித்த படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டது. இது, அவரை ஆழமாக சிந்திக்க வைத்தது. தன் அரசியல் ஆசைக்காக, தன்னை நம்பி வரும் தயாரிப்பாளரை நஷ்டப்படுத்த விரும்பவில்லை.தன் முடிவை, அதிரடியாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன், பூம்புகாரில் நடந்த கூட்டத்தில் வெளியிட்டார்.'நான், கலைஞர் இருவரும் வெவ்வேறல்ல. இருவரும் மக்கள் கலைஞர்கள் தான். நான் மக்களால் வழி நடத்தப்படுபவன். அவர், மக்களை வழி நடத்துபவர். நான் தி.மு.க.,வில் இணைந்து பணியாற்றுவேன் என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் உள்ளதை அறிவேன். 'இனிமேல், ஒரு கட்சியில் இணைந்தால் தான் புகழ் கிடைக்கும் என்ற நிலையில், நான் இல்லை. அதேபோல், நான் இணைந்து தான் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நிலையில், தி.மு.க.,வும் இல்லை. நான் எங்கிருந்தாலும் எளிய மக்களுக்கு நல்லது செய்வேன்...' என்று, தன் அரசியல் பிரவேசம் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார், ஜெய்சங்கர்.கடந்த, 1979ல், ஒரே வானம் ஒரே பூமி உட்பட, ஜெய்சங்கருக்கு, 12 படங்கள் வெளியாகின. அதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, எண்ணிக்கையில் அதிகம் இல்லையென்றாலும், இவற்றில் பல படங்கள் முன்பே ஒப்பந்தமானவை.கடந்த, 1978ன் துவக்கத்திலிருந்தே புதிய பட வாய்ப்புகள் எதுவும், ஜெய்சங்கருக்கு கிடைக்கவில்லை. திரையுலக வாழ்வில் முதன் முறையாக, அவர், தன் வீட்டில் அதிக நேரம் செலவிடும் நிலை உருவாகியிருந்தது. ஒரு குடும்பஸ்தனாக அது நல்ல விஷயம் தான். ஆனால், ஒரு கலைஞனுக்கு அது, நல்ல அறிகுறி அல்ல.கடந்த, 1980ம் ஆண்டு ஆரம்பத்தில், ஒருநாள், வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார், ஜெய்சங்கர். வீட்டு தொலைபேசி ஒலிக்கவே, அவரே எடுத்தார்.எதிர்முனையில் ஏவி.எம்.சரவணன். பரஸ்பர நல விசாரிப்புக்கு பின், 'ஜெய் சார் எங்க இருக்கீங்க... உங்களை அவசரமா பார்க்கணும். 10 நிமிஷம் ஸ்டுடியோ வரை வந்து போக முடியுமா, இல்ல நான் வரட்டுமா...' என்றார்.'சரவணன் தேவையின்றி அழைக்க மாட்டாரே...' என யோசித்த ஜெய், 'ஒரு விசேஷத்திற்காக ராயப்பேட்டை வரை செல்கிறேன். முடிந்ததும் நேரே வந்து விடுகிறேன்...' என்று, போனை வைத்தார்.சரவணன் எதற்காக அழைத்தார், என்ற குழப்பத்துடனே காரில் சென்று கொண்டிருந்தார், ஜெய்சங்கர்.ஏவி.மெய்யப்ப செட்டியார் மறைவுக்கு பின், ஏவி.எம்., சகோதரர்கள் அகல கால் வைக்காமல், வளர்ந்து வரும், 'ஹீரோ'களை கொண்டு பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த நேரம் அது.தெலுங்கில், சிரஞ்சீவியை வைத்து எடுத்த, புன்னமி நாகு படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, தமிழிலும், அப்போது வளர்ந்து வந்த ரஜினியை வைத்து, படம் தயாரிக்க முடிவெடுத்தனர்.கதையில் கதாநாயகனுக்கு இணையான குணசித்திரமும், வில்லத்தனமும் கொண்ட மாறுபட்ட வேடத்திற்கு ஒரு நடிகர் தேவைப்பட்டார். அவர், புதுமுகமாக அல்லாமல், ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருந்தால், கதாபாத்திரம் நன்கு சோபிக்கும் என்பது, அவர்களின் எண்ணம்.பஞ்சு அருணாச்சலத்தின் மூளையில் சட்டென ஒரு மின்னல்.'ஆம், ஜெய்சங்கரை போட்டால் என்ன?'இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உட்பட அனைவரும், 'சரியான தேர்வு...' என, அதை ஆமோதித்தனர்.ஆனால், 170 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த, தன் நெருங்கிய நண்பரான ஜெய்சங்கரிடம், வளர்ந்து வரும் ஒரு நடிகரின் படத்தில், வில்லனாக நடிக்க கேட்க தயங்கினார், பஞ்சு அருணாச்சலம். ஜெய்சங்கரிடம் கேட்க யாருக்கும் துணிச்சல் இல்லை.காலை, 11:00 மணிக்கு ஏவி.எம்., காம்பவுண்டுக்குள் ஜெய்சங்கரின் கார் நுழைந்தது. ஜெய் வந்துவிட்டதன் அடையாளமாக, 'ஹாய் ஹாய்...' என்று, அவரது பரிட்சயமான குரல் காம்பவுண்ட்டில் கேட்டது. இனிப்பு, கார வகைகள், சரவணன் அறைக்குள் வந்தன. கொறித்தபடியே, 'சார், நாங்கள் எடுக்கும் படத்தில், ஒருவிதமான வில்லன் டைப் கேரக்டர் இருக்கு. வழக்கமான வில்லன் போல் இல்லை. கதாநாயகனுக்கு இணையா பேரு கிடைக்கும் கேரக்டர். நீங்க பண்ணினா நல்லா இருக்கும்ன்னு, எல்லாரும் நினைக்கிறாங்க. அதனால் தான் உங்ககிட்ட...' தயங்கித் தயங்கி தான் பேசினார், சரவணன்.ஒரு இனிப்பை வாயில் போட்டபடி யோசனையில் ஆழ்ந்தார், ஜெய்சங்கர்.தன் கேள்வியால் ஜெய் சங்கடப்பட்டு விட்டதாக நினைத்த சரவணன், 'ஜெய் சார், ஏவி.எம்., நிறுவனம் கேட்டு மறுக்கிறோமே என நினைக்க வேண்டாம். நீங்கள் புகழ்பெற்ற கதாநாயகன்.'வில்லனாக நடித்தால், 'கரியர்' பாதிக்கப்படும் என நினைத்தால், இப்போதே சொல்லி விடுங்கள் அல்லது உங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களிடம் கலந்து பேசி, நாளை கூட சொல்லுங்கள்...' என்றார்.வில்லன் கதாபாத்திரம், ஜெய்க்கு புதிதில்லை. கதாநாயகனாக நடிக்க வந்தவர், தன் இரண்டாவது படமான, பஞ்சவர்ணக்கிளி படத்தில் ஏற்றது, கொடூரமான வில்லன் வேடம். மேலும், தனக்கு பிடித்தமான படங்களில் ஒன்றாக, எல்லா பத்திரிகை பேட்டிகளிலும் தவறாமல் அதைக் குறிப்பிடுவார்.வில்லனாக நடிப்பதற்கும், வில்லன் ஆவதற்கும் இடையிலான நுாலிழை வித்தியாசத்தைப் புரிந்து கொள்வதில் தான், இப்போது அவர் சற்று தடுமாற்றத்தில் இருந்தார்.'நீங்கள் குறிப்பிடுகிற வில்லன் பாத்திரம், 'அவுட் ஸ்டேண்டிங்' என, எனக்கு பட்டால் நடிக்க ஆட்சேபனை இல்லை...' என பதிலளித்தார்.அப்படி வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்ட படம் எது தெரியுமா?- தொடரும்.- இனியன் கிருபாகரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !