உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல....

தயாரிப்பாளரான இயக்குனர் சற்குணம்!

களவாணி மற்றும் வாகை சூடவா படங்களை இயக்கிய சற்குணம், அடுத்து, தனுஷை வைத்து, கொட்டவாளக்குட்டி என்ற படத்தை இயக்குவதற்காக, பல மாதங்களாக காத்திருக்கிறார். இந்நிலையில், சற்குணம் சினிமாஸ் என்ற பெயரில், ஒரு பட நிறுவனத்தை தொடங்கியிருக்கும் அவர், மஞ்சப்பை என்ற படத்தை முதன் முதலாக தயாரிக்கிறார். விமல் நாயகனாக நடிக்கும் அப்படத்தை, சற்குணத்தின் உதவியாளர் ஒருவர் இயக்குகிறார்.— சினிமா பொன்னையா

மீனவ பெண்ணாக பார்வதி!

பூ படத்தில் நடித்த பார்வதி தற்போது, தமிழ், மலையாளம், கன்னடம் என்று பரவலாக நடித்து வருகிறார். இதில், தமிழில் தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் மீனவ பெண்ணாக நடிக்கிறார். 'இதுவும் ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால், பூ படத்தை போலவே, இந்த படத்திலும் எனக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைக்கும்...' என்று சொல்லும் பார்வதி, 'மரியான் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது என் நடிப்புக்கு இன்னும் பலம் சேர்க்கும்...' என்கிறார். வருந்தி வருந்தி பார்த்தாலும் வருகிற போதுதான் வரும்!— எலீசா

டப்பிங் பேசும் பெங்களூரு நடிகை!18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்த காயத்ரி, பெங்களூருவில் பிறந்து, வளர்ந்த தமிழ்ப்பெண். அதனால், சென்னை வந்ததும், சுலபமாக தமிழ் கற்றுக்கொண்ட அவர், இயக்குனர் நாகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, மத்தாப்பூ படத்தில், தனக்குத் தானே டப்பிங் பேசி உள்ளார். தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில், டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளார்.— எலீசா

மதன் கார்க்கிக்கு கிடைத்த பெருமை!கடந்த, 2012 எனக்கு மிகச்சிறப்பான ஆண்டு என்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. 14 படங்களுக்கு மொத்தம், 35 பாடல்களை எழுதியுள்ளேன். அதில், 15 பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை என்று சொல்லும் மதன் கார்க்கி, மணிரத்னத்தின், கடல் படத்துக்காக மட்டும் மூன்று பாடல்கள் எழுதியிருப்பதை, தனக்கு கிடைத்த பெருமை என்கிறார்.— சி.பொ.,

ஆன்மிகத்திலிருந்து வெளியேறிய தனுஸ்ரீ தத்தா!

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா, அதன் பின், மொட்டையடித்து, முழுநேர ஆன்மிகவாதியானார். ஆனால், இப்போது அவரது குடும்பத்தினர் அவரை ஆன்மிகத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டனர். அதோடு, திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்த தனுஸ்ரீ தத்தாவின் வாயிலிருந்தே, 'விரைவிலேயே திருமணம் செய்து கொள்வேன்...' என்றும் சொல்ல வைத்துள்ளனர். விதி எப்படியோ, மதி அப்படி!— எலீசா

குத்துப் பாடல் ராணியான சார்மி!நாகார்ஜுனாவுடன், தமடுகம் என்ற தெலுங்கு படத்தில் குத்தாட்டமாடி புகழ் பெற்ற சார்மி, அதன்பின் தொடர்ந்து பல படங்களுக்கு நடனமாடியவர். இப்போது ராம் சரணுடன், நாயக் படத்துக்காகவும் குத்தாட்டம் போட்டுள்ளார். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், 'நெல்லூரே...' என்று தொடங்கும் அந்த பாடலுக்காக சார்மி போட்டுள்ள ஆட்டம், ஆந்திராவில் அவரது பெயரை இன்னும் சூடேற்றி விட்டுள்ளது. இன்னமும் கெடுகிறேன் பந்தயம் என்ன என்றது போல்!— எலீசா

தமிழ் பயிற்சி செய்யும் சுனைனா!

நீர்ப்பறவை படத்தில் சுனைனாவின் நடிப்பு பேசப்பட்டதால், எதிர்காலத்தில் விருது பெறும் கதைகளில் நடிக்க அதிக ஆர்வமாக உள்ளார். அதனால், கனமான கதாபாத்திரங்களாக தேடும் சுனைனா, தனக்குத்தானே தமிழில் டப்பிங் பேசவும் பயிற்சி எடுத்து வருகிறார். மேலும், தமிழில் ஓரிரு வார்த்தைகளே பேசத் தெரிந்த அவர், தன்னை சுற்றியிருக்கும் யூனிட் நபர்களிடமும் தனக்குத் தெரிந்த தமிழில் பேசி வருகிறார். வரும் விதி எங்கு இருந்தாலும் வரும்!— எலீசா

சினிமாவுக்கு வரும் சின்னத்திரை ஜோடி!விஜய், 'டிவி'யில் வெளியாகும், சரவணன் - மீனாட்சி தொடரில் நடித்து வரும் செந்தில் - ஸ்ரீஜா இருவரும் சினிமாவில் நுழைகின்றனர். கரண் நடித்த, கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கிய மூர்த்தி, தன் புதிய படத்தில் இந்த ஜோடியை நடிக்க வைக்கிறார். மேலும், ஸ்ரீஜாவுக்கு இதுதான் முதல் படம் என்ற போதும், செந்தில், செங்காத்து பூமியிலே படத்தில் ஏற்கனவே நாயகனாக நடித்தவர். இப்போது, கண் பேசும் வார்த்தைகள் என்ற படத்திலும், நடிகை இனியாவுடன் நடித்து வருகிறார். சுற்றி சுற்றி ”ங்கச் சாவடிக்கே வந்தது போல்!— எலீசா

வில்லன் வேடத்தில் லியாகத் அலிகான்!விஜயகாந்த் நடித்த பல அரசியல் படங்களுக்கு வசனம் எழுதியவர் லியாகத் அலிகான். அதோடு, எங்க முதலாளி மற்றும் பாட்டாளி உட்பட சில படங்களையும் இயக்கிய அவர், தற்போது, ஊராட்சி ஒன்றியம் என்ற படத்தில், அரசியல்வாதியாக, வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, முழுநேர நடிகராகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.— சினிமா பொன்னையாஅவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !