உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

10 நிமிடத்தில், 14 மொழிகளில் பேசி நடித்த, கமல்!

ஷங்கர் இயக்கத்தில், இந்தியன்- 2 படத்தில், மீண்டும், சேனாபதி வேடத்தில் நடிக்கிறார், கமலஹாசன். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் பிரமாதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே அமெரிக்கா சென்று, 'மேக் - அப் டெஸ்ட்' எடுத்து திரும்பியவர், தற்போது, மீண்டும் இந்தியன் தாத்தாவாக களத்தில் இறங்கி இருக்கிறார். அதோடு, இந்த படத்தில், 10 நிமிட காட்சியில், ஒரே, 'ஷாட்'டில், 14 மொழிகளில் வசனம் பேசி நடித்து, 'சிங்கிள் டேக்'கில், ஓ.கே., செய்திருக்கிறார்.— சினிமா பொன்னையா

கிசுகிசுக்களை ஓரங்கட்டும், பிரியங்கா மோகன்!

சிவகார்த்திகேயனுடன், டாக்டர் மற்றும் டான் போன்ற படங்களில் நடித்த, பிரியங்கா மோகன், அதையடுத்து, அவருடன் நடிக்க மீண்டும் படங்கள் வந்தபோதும், அதை ஏற்கவில்லை. ஜெயம் ரவி உள்ளிட்ட வேறு சில நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.இதுபற்றி அவரிடம் கேட்டால், 'சிவகார்த்திகேயனுடன் இரண்டு படங்களில் நடித்ததை அடுத்து, 'கிசுகிசு'கள் வரத் துவங்கின. இது தொடர்ந்தால், மார்க்கெட்டுக்கே உலை வைத்து விடும் என்பதால், ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தில் உஷாராகி விட்டேன். 'எதிர்காலத்திலும், எந்த நடிகர்களுடனும் தொடர்ச்சியாக நடிக்காமல், பல நடிகர்களுடன் மாறி மாறி நடித்து, 'கிசுகிசு'கள் என்னை நெருக்கவே விடாமல் விரட்டியடிப்பேன்...' என்கிறார், பிரியங்கா மோகன்.— எலீசா

தமிழில் பேசும், சன்னி லியோன்!

தமிழில், ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள, சன்னி லியோன், இந்த படத்தில் வார்த்தை உச்சரிப்புகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு ஆசிரியரை நியமித்து, ஆரம்பத்திலிருந்தே தமிழ் பயிற்சி எடுத்தார். இப்படத்தில் நடித்து முடிக்கும் போது, ஓரளவு தமிழ் பேசும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.'அடுத்து, தமிழில் நடிக்கும் புதிய படத்தில், அனைவரும் என்னுடன் தமிழில் தான் பேச வேண்டும் என்று, நிபந்தனை போடப் போகிறேன். கூடிய சீக்கிரமே தமிழை சரளமாக பேசக் கூடிய அளவுக்கு என்னை வளர்த்துக் கொள்ளப் போகிறேன்...' என்கிறார்.— எலீசா

சிம்புக்கு ஏற்பட்ட யானை பசி!

மாநாடு படத்துக்கு பிறகு, சிம்புவின் சினிமா கேரியரே மாறத் துவங்கி விட்டது. அதனால், முன்பு போன்று, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல், தன் திறமைக்கு தீனி போடும் கதைகளாக தேடி வருகிறார்.'இப்போது நான், நடிப்பு எனும் கொல பசியில் இருக்கிறேன். ஆதலால், என் பசிக்கு தீனி போடக் கூடிய கதைகளை மட்டுமே தேடிப் பிடித்து நடித்து வருகிறேன். மேலும், வழக்கமான கமர்ஷியல் கதைகளுடன் என்னை தேடி வரும் இயக்குனர்களிடம், என்னுடைய யானை பசியை உங்களது சோளப்பொறி கதையால் அடக்க முடியாது என்று சொல்லி, திருப்பி அனுப்பி விடுகிறேன்...' என்கிறார், சிம்பு.— சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* விஜயின், 67வது படத்தில், வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர், சஞ்சய் தத்துக்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.* ஆர் ஆர் ஆர் படத்தை அடுத்து, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை, 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கப் போகிறார், ராஜமவுலி. அந்த படம், 'ஆக் ஷன் அட்வென்ச்சர் ஜானரில்' இருக்கும் என, தெரிவித்துள்ளார்.* தெலுங்கில் சாய் பல்லவி, நானியுடன் நடித்த, ஷாம் சிங்காராய் என்ற படம், சிறந்த இசை, பாரம்பரிய கலாசார நடனம் என்ற பிரிவுகளின் கீழ், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. முக்கியமாக, இந்த படத்தில், சாய் பல்லவி மிக சிறப்பாக பாரம்பரிய நடனம் ஆடி உள்ளார். அதன் காரணமாகவே, அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !