மீண்டும் தடுக்கி விழுந்த, ஆர்யா!
தமிழ் சினிமாவில், 20 ஆண்டுகளாக நடித்து வரும் ஆர்யா, சார்பட்டா பரம்பரை படத்தில், குத்துச்சண்டை வீரராக நடித்து, 'மெகா ஹிட்' கொடுத்தார். அதையடுத்து அவர் நடித்த படங்கள், 'பிளாப்' ஆகி, அவரது மார்க்கெட்டை மீண்டும் அதல பாதாளத்தில் தள்ளின. இதன் காரணமாக, 'ஹீரோ வாய்ப்பு கிடைக்காததால், இனிமேல், விஜய்சேதுபதி பாணிக்கு மாறப் போகிறேன். 'ஹீரோ - -வில்லன்' என, எந்த வேடம் கிடைத்தாலும், நடிப்பதற்கு தயார். 'ஏற்கனவே, நண்பர் விஷாலுடன், எனிமி படத்தில், வில்லனாக நடித்துள்ளேன். மேலும், சில நட்பு வட்டார, 'ஹீரோ'களிடம், வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளேன்...' என்கிறார், ஆர்யா.சினிமா பொன்னையா
கீர்த்தி ஷெட்டியின் தொண்டு நிறுவனம்!
தெலுங்கு படங்களில் நடித்து வரும், கீர்த்தி ஷெட்டி, தற்போது தமிழில், வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தான் சினிமாவுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, 'நிஷ்னா' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் துவங்கி உள்ளார்.'சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் இருந்து வருகிறது. தற்போது, சினிமாவில் நானே சுயமாக சம்பாதிக்க துவங்கி விட்டதால், இதில் வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை, ஏழைகளுக்கு உதவி செய்யப் போகிறேன். மேலும், இந்த சமூக சேவையை நான் தொடர்ந்து செய்வேன்...' என்கிறார். நிஷ்னா என்பது தான், அவரது சொந்த பெயர்.— எலீசா
யாஷிகா ஆனந்துக்கு, 'ஷாக்' கொடுத்த, ரசிகர்கள்!
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு, விவகாரமான நடிகையாக வலம் வரும், யாஷிகா ஆனந்த், தன் காமக்கொடூர புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு, ரசிகர்களை அதிர விட்டு வருகிறார்.இந்நிலையில், அவரை சந்திக்கும் ரசிகர்கள், 'படத்துக்குப் படம், உடம்பை காண்பித்து நடிக்கிறீர்களே, உங்களுக்கு திறமையை காண்பித்து நடிக்கத் தெரியாதா?' என்று, ஒரு அதிர்ச்சி கேள்வி கேட்க, 'அப்செட்' ஆகி விட்டார்.அதையடுத்து, தன்னிடம், 'கால்ஷீட்' கேட்டு வரும் இயக்குனர்களிடம், தன்னை அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதோடு, 'ஓரிரு விருதுகளையாவது வாங்காமல் இந்த சினிமாவை விட்டு நான் வெளியேற மாட்டேன்...' என்று புதிய சபதம் எடுத்திருப்பதாகவும் சொல்லி, அவர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.— எலீசா
வில்லனாக உருவெடுக்கும், கவுதம்மேனன்!
விஜய்சேதுபதியைத் தொடர்ந்து, இயக்குனர், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகி விட்டதை அடுத்து, தற்போது, 'கேரக்டர் ரோல்'களில் நடித்து வரும், இயக்குனர் கவுதம்மேனனுக்கும் வில்லனாக உருவெடுக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.ஆனால், 'நான் வில்லனாக நடித்தால், விஜய், அஜீத் போன்ற, 'மெகா ஹீரோ'களின் படங்களில் தான் நடிப்பேன்...' என்று, அவர்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களிடம் பட வேட்டை நடத்தி வருகிறார்.அதோடு, 'வழக்கமான வில்லனாக இல்லாமல், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'டெக்னிக்கல்' ஆன வில்லனாக என்னை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன்...' என, கோலிவுட்டில் செய்தி வெளியிட்டுள்ளார், கவுதம்மேனன்.— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* இதுவரை தன்னை சந்திப்பவர்களிடம், சென்னை தமிழில் பேசி வந்த த்ரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவை வேடத்தில் நடித்ததை அடுத்து, அனைவரிடத்திலும் செந்தமிழிலேயே பேசி, அசத்துகிறார்.* புஷ்பா படதில் நடித்த அல்லு அர்ஜுன், தன் மனைவி சினேகா ரெட்டியின் பிறந்த நாளை, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று, வழிபாடு நடத்தி, கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.* விருமன் படத்தை அடுத்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, மாவீரன் படத்தில் நடித்து வரும், அதிதி ஷங்கர், அதையடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.அவ்ளோதான்!