பிட்ஸ்(ஸா)
'பெரியவருக்கு வழி விடுப்பா...' என்று, பஸ்சில் என் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டதும், நான், வழி விட்டு விலகினேன். ஆனால், எனக்கு பின்னால் எந்தப் பெரியவரும் இல்லை. நான் தான், அந்தப் பெரியவர் என்று அறிந்த போது, மனசு துணுக்குற்றது. நான் எப்போது பெரியவர் ஆனேன் என்று தெரியாமலேயே, நான் பெரியவராகி விட்டேன்.வீட்டுக்கு வந்ததும், இன்னிக்கு ஒரு தமாஷ் என்று, பஸ்சில் நடந்ததை என் மனைவியிடம் சொன்னேன். அவள் ஆச்சரியப்படவே இல்லை. 'இதிலே என்ன தமாஷ். நீங்க பெரியவர் தானே...' என்றாள். 'அடிக்கள்ளி! இதுவரை என்கிட்ட நீ சொல்லவே இல்லையே...' என்று கன்னத்தை பிடித்து கிள்ளுகிற சமாச்சாரமா இது! 'நீயும் அப்படித் தான் நினைக்கிறாயா...' என்று, முறைத்து விட்டு நகர்ந்தேன்.— பாக்கியம் ராமசாமி.