உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே..... (17)

கடந்த, 1997ல், டூருக்கு வந்த வாசகர்களை, கொஞ்சம் கூடுதலாக சுவாரசியப்படுத்துவோம் என்பதற்காக, தினமலர் ஊழியர்களை, கலவரக்காரர்கள் வேடத்தில் பஸ்சுக்குள் ஏற்றுவது என்பது முடிவானது.இது குறித்து, அந்துமணி சாரிடம் கூறியபோது, 'நாடகம் சரி... ஆனால், கத்தி, அருவாள், கடப்பாரை இது போன்ற ஆயுதங்கள் எல்லாம் வேண்டாம். ஏனெனில், வாசகர்கள் மென்மையானவர்கள். பொய்யாகக்கூட வன்முறை தொடர்புடைய ஆயுதங்கள் வேண்டாம்...' என்று சொல்லி விட்டார்.'கலவரக்காரர்கள் என்றால், கன்னாபின்னா வென்று ஆயுதங்கள் வைத்திருப்பர். வெறும் கையோடு, எந்த ரவுடி கலவரத்தில் ஈடுபட வருவர். ஆகவே, குறைந்தபட்சம் உருட்டுக்கட்டைக்காவது அனுமதி கொடுங்கள்...' என்று கேட்டதற்கு, நீண்ட யோசனைக்கு பிறகு, ஓ.கே., சொன்னார். ஆனால், 'ஒரே ஒரு உருட்டுக்கட்டை போதும்...' என்றும் சொல்லிவிட்டார்.'அந்த உருட்டுக் கட்டையை, நான்தான் வைத்துக் கொள்வேன்' என்று வேண்டி விரும்பி வாங்கிக் கொண்டவர், அப்போது மதுரையில் தினமலர் நிருபராக இருந்தவரும், இப்போது அரசு பள்ளி ஆசிரியராக இருப்பவருமான வீரசின்னு. ஏற்கனவே, அவர், பார்வைக்கு முரட்டுத்தனமாக இருப்பார். அது போதாது என்று, சிவப்பு கலர் முண்டா பனியன், பனியனுக்கு மேல் ஏத்திக்கட்டிய கைலி, கைலிக்கு மேல் பச்சை கலர் பெல்ட், கலைந்த தலை, பல நாள் தாடி, கையிலும், கழுத்திலும் தாயத்து கயிறு என்று ஆள் பார்க்கவே ரொம்ப, 'டெரராக' இருந்தார். 'உன்னைப்பார்த்தால், 'வண்ணக்கிளி' படத்துல, 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்று, குடித்து விட்டு பாடிக்கொண்டு வருவாரே நடிகர் மனோகர்... அச்சு அசலா அவரு மாதிரியே இருக்கப்பா...' என்று வேறு சொல்லி, நண்பர்கள் உசுப்பேத்தியிருந்தனர்.ரிகர்சலின் போது, மனிதர் உருட்டுக்கட்டையை கையாண்ட விதத்தை பார்த்த போது, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று மனசுக்குள் ஒரு பட்சி சொன்னது. 'இந்த நிஜ உருட்டுக்கட்டைக்கு பதிலாக, 'சினிமாவில் உபயோகிக்கும் ரப்பர் உருட்டுக்கட்டை வைத்துக் கொள்வோமே...' என்று நான் சொன்னதும், வீரசின்னுக்கு கோபம் வந்து விட்டது. 'சார்... என்னை நம்புங்க; நான் ஒரு குழந்தை. வாழ்க்கையில் முதன் முதலா உருட்டுக்கட்டையை தொடுறேன். என்னை ஏன் சந்தேகிக்கிறிங்க... சும்மா துாக்கி காண்பித்துவிட்டு, பஸ்சைவிட்டு இறங்க போறேன். இதுக்காக சென்னை போய், ரப்பர் உருட்டுக்கட்டையை வாங்கிட்டு வரமுடியுமா...வேலையை பாருங்க, சார்...' என்றார்.'சரி, சின்னு. ஆனால், ஒவர் ஆக்டிங்கோ, கூடுதல் எமோஷனோ காட்ட வேண்டாம். உங்கள முழுசா நம்புறேன்...' என்று, அவரை சமாதானப்படுத்தி, கோபத்தை குறைத்தாலும், அவர் கோபம் குறையவில்லை என்பது பிற்பாடுதான் தெரிந்தது.திட்டமிட்டபடி வாசகர்களோடு பயணத்தை துவக்கினோம். 'திருமங்கலம் தாண்டியதும், ஒரு திருப்பத்துல பஸ்சை நிறுத்துறீங்க... மேலே வந்து மைல்டா கொஞ்சம் சத்தம் போடூறீங்க. நான் கேட்டுக்கொண்டதும் இறங்கிப் போயிடுறீங்க... ஓ.கே.வா...' என்றதும், 'பிரதர் நீங்க பாட்டுக்கு போய்க்கிட்டே இருங்க, நாங்க மத்ததை பார்த்துக்கிறோம்...' என்று சொன்னவிதமே தப்பா பட்டுச்சு.பஸ்சுக்குள் ஒரே ஜாலியாக வாசகர்கள் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தனர். திருமங்கலம் வந்ததுமே, 'நண்பர்கள் என்ன செய்யப்போகின்றனரோ...' என, மனசு, 'படபட'த்தது. இந்த பதட்டத்தில் நடக்கப் போற நாடகத்தை பற்றி, டிரைவரிடம் சொல்ல மறந்து விட்டேன்.ஒரு வளைவில் பஸ் மெதுவாக திரும்பியதும், 'சரேலென' ஒரு கும்பல் குறுக்கே வந்து, பஸ்சை நிறுத்தியது. டிரைவர் பதறிப்போய் பஸ்சை நிறுத்தினாலும், 'சார் பஸ்சை எடுக்கிறேன், வர்றது வரட்டும். நிப்பாட்ட வேண்டாம்...' என்றதும், 'யோவ் வேண்டாம்யா. நீ வேற புதுசா ஒரு கதையை உண்டாக்காதே. இது நாங்க செட்டப் செய்த நாடகம் தான்...' என்று அவர் காதருகே போய்ச் சொல் வதற்குள், 'கலவர பார்ட்டிகளில் ஒருவர், டிரைவரை ஒரு குத்துவிட்டு, சாவியை கைப்பற்றியது.'என்ன நடந்தாலும் பொறுத்துக்குங்க. பிறகு விவரம் சொல்றேன்...' என்று, டிரைவரிடம் சொல்லி முடிப்பதற்குள், 'திபுதிபு' வென கலவர பார்ட்டி, பஸ்சில் ஏறி, 'நிறுத்துங்கடா உங்க பாட்டை. எங்கடா அந்த... அவன போட்டுத் தள்ளுங்கடா...' என்று போட்ட சத்தத்தில், பஸ்சில் வந்த வாசகர்களின் சப்த நாடியும், மொத்தமாய் அடங்கியது.'பஸ்சை ஓரங்கட்டு, இல்ல கொளுத்திடுவோம்...' என்று டிரைவரை மிரட்ட, 'இனிமேல் என்னை டூருக்கு கூப்பிடு, அப்புறம் வச்சுக்கிறேன் உன்னை'ங்ற மாதிரி, டிரைவர், என்னை ஒரு பார்வை பார்த்தபடி, பஸ்சை ஓரங்கட்டினார்.'அவன் இந்த பஸ்சுக்குள்ளாறதான் இருப்பான். நமக்கு வந்த தகவல் சரியாத்தான் இருக்கும். ஒரே போடு, சத்தமில்லாம சாகணும்...' என்ற, வீரசின்னுவின் கையில் இருந்த உருட்டுக் கட்டையும்,கரகர குரலும் ரொம்பவே பயமுறுத்தியது.'இதெல்லாம் ரிகர்சல்ல இல்லாத டயலாக்கா இருக்கே' என்று, ஒரு பக்கம் மூளையில் ஓடினாலும், 'அடுத்த கட்டத்திற்கு நாடகத்தை எடுத்துப் போகணுமே' என்ற நிலையில், 'அண்ணே நீங்க தப்பான பஸ்சுல ஏறிட்டீங்க. நாங்க எல்லாம் தினமலர் - வாரமலர் வாசகர்கள். நான்தான் இவ்வளவு பேருக்கும் பொறுப்பு...' என்று வணக்கம் போட்டு, ரொம்ப பவ்யமாக கூறினேன்.இதைக்கேட்டதும், 'சாரிப்பா' என்றபடி வந்த கும்பல் இறங்கிப் போகணும். போன வேகத்தில், தங்கள் வேஷம் கலைத்து, திரும்ப வந்து வாசகர்களிடம், 'இது ஒரு நாடகம்' என்று சொல்லவேண்டும். இதுதான் நியாயப்படி நடக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு.'நீதான் பொறுப்பாளனா... அப்ப உன்னைத் தான் முதல்ல போடணும்...' என்று சொல்லிய வீரசின்னு, சொன்ன வேகத்தில், உருட்டுக்கட்டையை உயர்த்தி, நன்றாக நடு உச்சியில், 'ணங்'கென்று இறக்கினார்.குற்றாலமும், சங்க இலக்கியமும்!குறு ஆல் என்பது, ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்பட்ட வனப்பகுதியாக இருந்ததால், இது, குற்றாலம் என்று அழைக்கப்பட்டது.பொதிகை மலை, மேற்கு தொடர்ச்சி மலை என்று, பல பெயர்களில் அழைக்கப ்படும் குற்றால மலையின் உயரம், 5,134 அடி.சங்க இலக்கியங்களில் குற்றாலம் குறித்து, ஏராளமான குறிப்புகள் காணப்படுவதுடன், இந்த இடம், தேனுார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேன் அதிகம் கிடைத்த இடம் என்பதால், இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.இது தவிர, குற்றாலத்திற்கு, சிவத்துரோகம் தீர்த்தபெருமை மூநுார், மதுவுண்டான் உயிர்மீட்டபுரம், பவர்க்க மீட்டபுரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்தபுரம், செண்பகாரணிய புரம், முத்திவேலி, நதி மூன்றில் மாநகரம், திருநகரம், நன்னகரம், ஞானப் பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், வேதசத்திபீடபுரம், சிவமுகுந்த பிரமபுரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூடபுரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பால விசேடபுரம் என்று, 20 பெயர்கள் உண்டு.— அருவி கொட்டும். எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !