உள்ளூர் செய்திகள்

சூடு!

கொட்டிக் கிடந்த புற்களை கைகளால் அள்ளி, கட்டாய் கட்டி முடியிட்டுக் கொண்டாள், ஆராயி. உச்சி சூரியன் உயரத்தில் இருந்து மெல்ல மெல்ல மேற்கில், கட்சி மாறத் துவங்கி இருந்தது.இந்தக் கட்டை எடுத்துப் போய், அம்மணி அக்கா வீட்டில் தந்துவிட்டு, அப்புறம் தான் வீட்டுக்கு போக வேண்டும். நடையில் விரசைக் காட்டினாள். களத்தோரம் கிடந்த சுள்ளிகளையும், கைக்கு எட்டிய துாரத்தில் தெரிந்த இலைகளையும் பறித்துக் கொண்டாள்.நடை ஒன்று தான். ஆனால், செயல் நுாறு. அந்தச் செயல்களால் அவளுக்கோ, இல்லை யாருக்கோ துளி நன்மை விளையும் என்றால், அதை எத்தனை சிரமப்பட்டாவது, அவள் செய்து முடிப்பாள்.கண்கள் வெயிலுக்கு குறுகிக் கிடந்தாலும், மனசு விசாலத்தில் சூரியனை ஒத்து இருந்தது. அம்மணியக்கா வீட்டில் புல்லை போட்டு, அவர்கள் சொன்ன நன்றியையும், தரவேண்டிய பால் பாக்கியையும் வாங்கிக் கொண்டாள். கோவில் ஆட்டுக்கு இலையை போட்டுவிட்டு, அதன் தலையை நீவினாள். வீட்டை அடையும்போதே, நடையில் கிடந்த செருப்பு, மனசுக்குள் சஞ்சலத்தைத் தந்தது. உள்ளே ஒலித்த குரல் கேட்டு, கண்களை மூடி, ஒரு நிமிஷம் கட்டைத் துாணில் சாய்ந்து கொண்டாள்.'மா...' என, இவளைக் கண்டதும் தாய்மை வேண்டி அங்கலாய்த்தது, கொட்டகையில் இருந்த லட்சுமி. அதன் அருகில் சென்று, கழுத்தை நீவி விட்டாள். அதன் சொரசொரப்பான நாக்கால், அவள் உள்ளங்கையில் நன்றியை சொன்னது.'இந்த வாயில்லாத ஜீவனுக்கு இருக்கும் அக்கறையும், பாசமும் கூட, வாயுள்ளதாய் சொல்லிக் கொள்ளும் ஜீவன்களுக்கு இல்லையே...' என்று, மனசு கூவிற்று.கொட்டகை அருகில் கிடந்த, துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டாள்.''அம்மா... ஆராயி எங்கே போய் இருக்கா... புள்ளைங்க எப்போ பள்ளிகூடம் விட்டு வருங்க...'' என, உள்ளே, மருது கேட்பது தெளிவாக கேட்டது. அவன் அம்மா, அதற்கு என்ன பதில் சொல்லி இருப்பார் என்று, இங்கிருந்தே இவளால் உத்தேசிக்க முடிந்தது.இந்த, 15 ஆண்டு திருமண வாழ்க்கையில், இதைக்கூட அவள் யூகிக்க முடியாவிட்டால், வாழும் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது?முடியை அவிழ்த்து, கோடாலி கொண்டை போட்டுக் கொண்டாள். கண்களில் லேசான பளபளப்பு இருந்தது. எத்தனை துரோகம் செய்தவர்களையும் சட்டென்று மன்னிக்கும் தன்னுடைய ஈரமான மனதின் மீது, லேசான கரிசனம் வந்தது. எத்தனை தள்ளிப் போட்டாலும், உள்ளே சென்று, நிகழ்வை சந்தித்துத்தான் ஆகவேண்டும். அதைத் தள்ளிப் போடாமலே சந்திக்கும் நேர்மை தான், அவளுக்கு உகந்ததாக இருக்கும்.எழுந்து, வீட்டிற்குள் சென்றாள். இவள் காலடிச் சத்தம் கேட்டு, தலை நிமிர்த்தி பார்த்தான், மருது. அவள் கண்களில் இனம் தெரியாத உணர்ச்சி, மண்டிக் கிடந்தது. சிரித்தான்; பதிலுக்கு சிரித்தாள்.ஆவலாய் அவள் முகம் பார்த்து, ''எப்படி இருக்க புள்ள?'' என்றான்.சலனமில்லாத விழியில் அவன் முகம் பார்த்து, ''நல்லா இருக்கேன் மாமா... நீங்க எப்பிடி இருக்கீக... அங்க எல்லாரும் சுகம் தானே?''சூட்டுக்கோல் எடுத்து, அந்தரங்கத்தில் கோடு இழுத்தது போல் இருந்தது, அந்தக் கேள்வி. தலை தாழ்ந்தான். அந்தக் கேள்வியை கேட்டு இருக்கவே கூடாதோ... எப்போதும் போல் தாமதமாக வந்த ஞானோதயத்தை எண்ணி எரிச்சலாக வந்தது.''காபி குடீச்சீகளா... இல்ல தட்டே வைக்கட்டுமா?'' என்றாள்.''இப்பத்தான் ஆத்தா காபி குடுத்துச்சு,'' என்றான்.''நல்லதாப் போச்சு... அப்போ, நான் போய் மேலுக்கு ஊத்திட்டு வர்றேன். அதுவரைக்கும் செத்த நேரம் தலையை சாய்ங்க,'' என சொல்லி, உள்ளே போய் விட்டாள்.குழப்பமாக வெகுநேரம் உட்கார்ந்து இருந்தவன், அப்படியே கண் அசந்தும் விட்டான். சிறிதுநேரம் கழித்து ஆராயி தான் வந்து, உலுக்கி எழுப்பினாள்.தட்டு வைத்தாள். வயிறார சாப்பாடு போட்டாள். சுண்டவத்தல் குழம்பில், அவளுடைய பழைய கைமணம் தெரிந்தது. எதுவும் பேசாமல், பாத்திரங்களை ஒழித்துப்போட்டு, திண்ணையில் போய் படுத்துக் கொண்டாள். அதெப்படி சாத்தியமாகும் ஒரு பெண்ணால்... தன் மனை மறந்து, பிறர் மனை கலந்து வந்த மணாளனை, எந்த வேறு சொல்லும் சொல்லாமல் ஏற்க முடியும்... முகச் சுளிப்புக் கூட காட்டாமல். வண்டிச்சோலைக்கு உரம் வாங்கப் போன போது, சரோஜா உடன் பழக்கமானது, மருதுவுக்கு. நல்ல நிறம். ஜாதிக் குதிரையைப் போல், நல்ல ஓங்குதாங்கான உடல் வாகு. தனியாக இருந்தாள்.ஒருபெண், தவறிப் போவதற்கு தனிமையை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. வேறு எதுவோ இருவரையும் இணைத்து வைத்தது.போனவன், அங்கேயே தங்கிப் போனான். உரத்தை மறந்து, காதல் திரத்தில் மகிழ்ந்தான். உரமில்லாத பயிறும், ஆராயின் வாழ்க்கையும், கதியற்று வதங்கித்தான் போனது.முதல்முறை அவன் போனபோது, வாழ்க்கை அத்தனையுமே தன்னை விட்டு போனது போல் அயர்ந்து, கண்ணீர் விட்டாள். கூட்டு ரோட்டில் இருந்த பெரிய அண்ணனை அழைத்து போய் நியாயம் கேட்டாள்.தெனாவட்டாய் பதில் தந்தான், அவன். அழுது ஆர்பாட்டம் செய்து, ஓய்ந்தாள். அதிக நாள் நீடிக்கவில்லை. ஆறே மாதத்தில் திரும்பி வந்தான். திருந்தி விட்டான் என்று நம்பி இருந்த நேரத்தில், அன்னுாருக்கு போய் விட்டான். திரும்பி வர, இரண்டாண்டு பிடித்தது.ஒவ்வொரு முறையும், அவனுக்காக காத்திருந்து, ஏமாந்து, தன்னையே சரி செய்யக் கற்றுக் கொண்டாள். இந்த முறை, மீண்டும் வண்டிச்சோலைப் பக்கம் பார்த்ததாக நிறைய பேர் கூறினர்.அடிக்கடி அடிபட்டு, அவளுடைய மனசு காப்பேறிப் போய் இருந்தது. இந்த முறை அவனைத் தேடவே இல்லை. அவனே திரும்பி வந்திருக்கிறான்; திருந்தி வந்திருக்கிறானா தெரியவில்லை.பள்ளிகூடத்திலிருந்து வந்த பிள்ளைகள், அப்பாவை பார்த்தன. எந்த சலனமும் இல்லாமல் ஒரு சிரிப்பை உதிர்த்து, அம்மாவிடம் ஓடோடி விட்டன. உள்ளுக்குள் எதுவோ உடைந்தது போல், அந்த அலட்சியம், அவனை என்னவோ செய்தது.பால் கறந்தாள்; கொட்டகையை சுத்தம் செய்தாள்; மாமனாருக்கு, வைத்தியரிடம் போய் நாட்டு மருந்து வாங்கி வந்தாள். மாமியாருக்கு சிக்கொடித்து தலை முடித்து விட்டாள். ஒரு மருமகளாய், குடும்பத்தின் தலைவியாய், அவளுடைய வேலைகள் அத்தனையும் இனிதே செய்தாள்.இது எதிலும் கலந்தாட இயலாமல், ஓரமாய் அமர்ந்து கிடந்தான், மருது. இது, அவன் வீடு; உள்ளும் புறமும் இருப்பது எல்லாம், அவனை வயிற்றில் சுமந்த அம்மாவும், நெஞ்சில் சுமந்த மனைவியும், அவன் பேரைச் சுமந்த பிள்ளைகளும் தான். என்றாலும், மனசுக்குள் ஒரு அந்நியத்தனம்.ஒருவேளை, ஆராயி சண்டையிட்டு, கூந்தல் கலைத்து, பேயாட்டம் ஆடி இருந்தால், எல்லாம் சரியாக இருந்திருக்குமோ... ஏன், அவள் அதைச் செய்யவில்லை. மனசு கேள்வி கேட்டு அலுத்தது.இரவு, முல்லைச் செடியில் மலர்ந்த மலர்கள், வாசத்தை அள்ளி இரைத்து இருக்க... வானத்திலிருந்து, முற்றத்து நிலா, பூக்களை படமெடுத்தபடி இருந்தது.திண்ணையில் வந்து, காத்தாட அமர்ந்து இருந்தாள், ஆராயி. அருகில் வந்து அமர்ந்தான், மருது; கண்களில் காமம் வழிந்து கிடந்தது.திரும்பிப் பார்த்தாள். சினேகமாய் சிரித்தாள்.''என்னா ஆராயி, இப்படி உட்கார்ந்து கிடக்க...'' என்றான். ''சும்மாதான் மாமா... நித்தமும் இப்படித்தான் உறக்கம் வர்ற வரைக்கும் உட்கார்ந்து கிடப்பேன்.''''இன்னைக்குத் தான் மாமா வந்துட்டேன்ல... நேரத்துக்கு துாங்க வேணாமா?'' விகாசமாய் சிரித்தான்.திரும்பிப் பார்த்தாள்; மெல்ல அவள் தோளை, காதலாய் தொட்டான். அதுவரை இல்லாத வெறுப்பு, கண்களில் வழிந்தது.''ஏன் மாமா... நேத்து இந்த நினைப்பு எனக்கு வந்திருந்தா, நான் என்ன செஞ்சிருக்கணும்?'' கோணி தைக்கும் குத்துாசி எடுத்து, அவனை கிழித்தது போல் இருக்க, கை தன்னால் இறங்கியது.''மாமா... கல்யாணம் ஆகி, 15 வருஷம் ஆச்சு... ஆம்பளைன்னா அப்படி இப்படித் தான் இருப்பான்னு சொன்னவன், நிச்சயம் ஆம்பளையாத் தான் இருப்பான். இந்த முற்றத்து நெலா சாட்சியாய், நாம அத்தனை இணக்கமா குடும்பம் பண்ணி இருக்கோம்.''உங்க மேல எனக்கு எந்த குறையும் இல்லை. எல்லாக் குறையும் காலத்து மேல தான் மாமா... காலத்துக்கும் துணையா நிற்பேன்னு, உறுதி சொல்லி கை பிடிச்சு சேர்ந்த உறவு... அப்போ உன்னை கண்காணிக்க வேண்டியது, காலம் தானே...''நீரு, தாண்டி போனப்ப எல்லாம், நான், தாண்டாம இங்கேயே நின்னேன். அது எம்புட்டு கஷ்டம்ன்னு, உங்களுக்கு தெரியாதா என்ன?'' படிப்பறிவில்லாத அந்த பாமரத்தி, அவனை வார்த்தைகளால் கொன்று கொண்டு இருந்தாள்.''இல்ல ஆராயி... இனி, தப்பு செய்ய மாட்டேன்...'' அவன் சத்தம் அவனுக்கே கேட்கவில்லை.நிமிர்ந்து பார்த்து, சின்னதாய் சிரித்தாள்.''இனியும் செய்ய, தப்பு மிச்சம் இருக்கா என்ன... இது உங்க வீடு, பெத்தவங்களும், உத்தவங்களும், மாடு கன்னும், புள்ளைங்களும், உமக்கே உமக்கானவங்க தான். ஆனாலும், இன்னைக்கு உங்க மனசுல ஒரு அந்நியத்தனம் ஒட்டிக்கெடக்கு பாருங்க... அதுதான் உங்களுக்கு கிடைச்ச தண்டனை... ''அறுந்து அறுந்து முடி போட்ட வடத்துல, சாரமும் இருக்காது; அது பாரமும் தாங்காது. ஏற்கனவே, இங்கே எல்லாருக்கும், உங்க மேல உள்ள பாசம், நைந்து போச்சு. இனியும் இழுக்காதீங்க... அது எதுக்கும் உதவாம போயிரும்.''மனுஷன் உணர்ச்சிவசப்பட்டாத் தான், அடுத்த தலைமுறையே வளரும்... ஆனால், அது மட்டுமே வாழ்க்கையில்லை.''தனித்து குடும்பம் பண்ணி, நானும் பழகிட்டேன். நீங்க இல்லாம வாழ, இந்த வீட்டுல ஒவ்வொரு மனுஷங்களும் பழகியாச்சு... இப்போ நீங்க வந்ததுல, யாருக்கும் பெருசா சந்தோஷம் இல்லை. ''இதுதான் உங்களுக்கான எச்சரிக்கை மணி... இனியும் சுகம் தேடி போயிட்டு திரும்பி வந்தா, இந்த வீட்டுல வேணா இடம் கிடைக்கலாம். இங்கே இருக்கிறவங்க மனசுல நிச்சயம் கிடைக்காது... ''நாடி தளரும்போது, கூடி கழிக்க பொண்ணைத் தேடாது மனசு; கூடி நிற்க, உறவைத் தான் தேடும். மத்தபடி, உங்க மேல எனக்கு எந்த கோபமுமில்லை.''அந்த மருதமலை சாமிகிட்ட, 'அடுத்த ஜென்மமும் நீங்க தான் எனக்கு புருஷனா வரணும்... ஆனா, சரியான மனுஷனா நீங்க இருக்கணும்'ன்னு வேண்டிகிட்டு இருக்கேன்...'' என்று, புன்முறுவலாய் சொல்லி, முந்தானையை உதறி இடுப்பில் சொருகி, எழுந்தாள்.கண்கள் தீர்க்கமாய், அவன் முகம் பார்த்தது.''மாமா, நானும் மனுஷி தான்... என் உடம்புல ஒண்ணும் பச்சைத் தண்ணி ஓடல... ஆசையை துறந்துட்டு போன, புத்தரைப் பத்தியே தான், உலகம் பேசுது... ஆனா, ஆசைப்பட்டு வாழ முடியாம நின்ன, அவர் பொஞ்சாதியை பற்றி யாரும் யோசிக்கவே இல்ல...''தன்னை மட்டும் யோசிச்சு, சுகம் தேட போறவங்களை விட, மத்தவங்களை யோசிச்சு, தன்னை அடக்கி வாழறவங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்...'' என்றவாரே, தலை நிமிர்ந்து, உள்ளே போனாள்; அவன், தலை குனிந்து, வெளியில் நின்றான். எஸ். மானஸா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !