மண்ணில் பூத்த நிலவே!
புழக்கடை பக்கமாய் கீழிறங்கிய படிக்கட்டில் அமர்ந்திருந்தாள், கங்கா. நிமிர்ந்து பார்த்தபோது, அடர்ந்த வேப்ப மரத்தின் இலைகளின் வழியே இளநீல துணியாய் வான பரப்பு தெரிந்தது.திடீரென்று, காதருகில், குழந்தையின் சிணுங்கல் கேட்டது.'வருண்... வந்துட்டேண்டா... அம்மா வந்துட்டேண்டா கண்ணா...' துடித்தபடி எழுந்தவளை, வலிமையான இரு கைகள் அழுத்தமாய் பிடித்தன.''கங்கா... என்னாச்சு, ஏனிந்த பதட்டம்,'' ஆதரவாய், கணவன் சபரீசன் குரல்.''குழந்தை வருண், வருண்,'' என்றவள், களைத்து, அவன் தோளில் சரிந்தாள்.அவளை மெதுவாய் உள்ளே அழைத்து வந்து அமர வைத்தான். மவுன குகையில் புதைந்து விட்டிருந்த உணர்வுகள் வெடித்து சிதறினாற் போல், ஒரு பலத்த விம்மல் எழுந்தது அவளிடமிருந்து.உயிரோடு குழந்தையை பறிகொடுத்து, பரிதவிக்கும் ஒரு தாயின் நிலைமை வேறு எப்படி இருக்கும்?ஒரே ஒரு குழந்தைக்காக காத்திருந்த காத்திருப்புகள், மேற்கொண்ட விரதங்கள் தான் எத்தனை எத்தனை... மண் சோறு தின்னதென்ன, சந்தான கிருஷ்ணன் சிலையை மடியில் கட்டிக்கொண்டதென்ன, கர்ப்பகாம்பிகையின் நெய் பிரசாதம் உண்டதென்ன, எத்தனை கோவில்கள், மருத்துவர்கள்... அப்படி தவம் இருந்து பெற்றவனை... கடவுளே...ராமலிங்கத்தின் ஒரே வாரிசு, கங்கா. தீபாவளி பண்டிகையை கொண்டாட, தாய் வீட்டுக்கு வந்திருந்தாள். மணல் கொள்ளையில், கொள்ளை கொள்ளையாக சம்பாதிப்பவர், ராமலிங்கம்.'கங்கா கல்குவாரி, கங்கா வாட்டர் சப்ளை' என்று, வீதியெங்கும் லாரிகள் ஓடிக் கொண்டே இருக்கும். கங்கா மட்டும், 'மண் அள்ளும் இயந்திரத்தை பார்த்தாலே, என்னவோ செய்யுது... மனசை பிராண்டுதுப்பா... மண் அள்ள வேண்டாம்பா...' என, கூறிக்கொண்டே இருப்பாள்.சிரித்தபடியே நகர்ந்து விடுவார், ராமலிங்கம்.சரிகட்ட வேண்டியவர்களை சரி கட்டி, 10 லோடு அடிக்க வேண்டிய இடத்தில், 70 லோடு அடித்து மண்ணை பொன்னாக்குபவர் ஆயிற்றே!நாளை மறுநாள், தீபாவளி!குழந்தையை தோட்டத்தில் வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள், கங்கா. குழந்தைக்காக, பால் சாதம் பிசைந்து எடுத்து வருவதற்குள், அவன் இல்லாத வெறுமையான பரப்பு, அடிவயிற்றில் கத்தியாய் இறங்கியது.விளையாடியபடியே நகர்ந்த குழந்தை, மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருக்கிறான் என்பதை உணர்ந்த கணமே, அவளிடமிருந்து அமானுஷ்யமான அலறல் எழுந்து, சூழல் முழுக்க எதிரொலித்தது. எதிரொலி அடங்குமுன்னே, அவள் மயங்கி சரிந்தாள்.பிறகென்ன... யார் யாரோ வந்தனர். பலவிதமான இயந்திரங்களை நிறுத்தினர். பேசினர்; தோண்டினர்; கைகளை பிசைந்து கொண்டனர்; கூடி ஆலோசித்தனர். மீடியாக்கள் கேமரா சகிதம் களமிறங்கி, தங்கள், டி.ஆர்.பி., ரேட்டுக்காக தீனி போட்டுக் கொண்டன.'என் பிள்ளையை காப்பாத்துங்கப்பா...' என்ற, கங்காவின் கதறல், மனதை பிசைந்தது. எல்லா சேனல்களும் இதை மாறி மாறி ஒளிபரப்பின.எங்கே தொட்டாலும் மண் சரிந்தது. போதும் போதாதற்கு, இடி, மின்னலுடன் மழை கொட்டத் துவங்கியது. இரவெல்லாம் விடாமல் பொழிய ஆரம்பித்து, மறுநாள் மதியத்துக்கு மேல் நின்றது. அதன்பின், மீட்பு படை செயலில் இறங்கி, 'இந்தா உன் பேரன்...' என்பது போல, நீரில் ஊறிக் கிடந்த உடலை, ராமலிங்கத்தின் கையில் தந்து, அகன்றது.எல்லாமே ஸ்தம்பித்து போன நிலை. மயக்கமும், விழிப்புமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள், கங்கா.குழந்தையை உடனே புதைத்து விட்டனர். இது, ஏதுமே அறியாதவளாய், தன்னிலைக்கு திரும்பியபோது, பத்ரகாளியாக மாறி தந்தையை சபித்தாள்.'தலை தலையாய் அடிச்சுகிட்டேனேப்பா... மணல் அள்ளுறதை நிறுத்துங்கப்பான்னு... இந்த மண் மாதாவோட சாபம் தான், என் பிள்ளையை காவு வாங்கிடுச்சு... இப்போ நிம்மதியாப்பா... யாருக்காக இந்த ஆஸ்தி... என் கனவை கலைச்சுட்டீங்களே... 'இன்னிக்கு சொல்றேன்பா, இனி, இந்த வீட்டு வாசல்படி மிதிக்க மாட்டேன்... உங்க பாவப்பட்ட காசும் வேணாம்... என் பிள்ளையை சாகடிச்ச வீடு இது...' என்று கத்தியபடியே, புருஷன் வீடு வந்து சேர்ந்தாள்.பொறி கலங்கி, பூஜையறையிலேயே ஒடுங்கினார், ராமலிங்கம். மகளின் குற்றச்சாட்டு மனதை அரித்தது. 'ஊத்துக் கண்ணை எல்லாம் பேத்தெடுத்து காசாக்குனதுக்கு சரியான தண்டனையா, குடும்ப வாரிசை பிடுங்கிகிட்டது தெய்வம்; நதியம்மாவோட கர்ப்பப்பையை சுரண்டுனா... இப்படித்தான் நடக்கும்ன்னு எனக்கு எப்பவோ தெரியும்...'மண்ணை வித்த காசு, மண்ணுக்குள்ளே போச்சுங்கிறாப் போல, வாரிசை காவு வாங்கிடுச்சு; பெத்தவங்க செய்ற பாவம், புள்ளைங்க தலையிலதானே விடியும்...' என, எத்தனை எத்தனை பேச்சுகள். ஜாடை மாடையாகவும், 'கிசுகிசு'ப்பாகவும் கெக்கலி கொட்டினர்.எதை செய்தால் மன ஆறுதல் கிடைக்கும் என்று தேடியது, புத்தி. மகளே வெறுத்து ஒதுக்கிய பின், யாருக்காக ஓடி ஓடி சம்பாதிக்க வேண்டும்... ஒரு விதமான விரக்தி பின்னுக்கு இழுத்தது.'நிறுத்திடுவோம், எல்லாவற்றையும் நிறுத்திடுவோம்...' என்ற உறுதி பிறந்தது, ராமலிங்கத்துக்கு.உள்ளங்கையில், முகத்தை மூடி, விசித்து விசித்து அழுதாள், கங்கா. விரல் இடுக்கில் சரம்சரமாய் கண்ணீர் வழிந்தது. மனைவியின் தோள் தடவி, ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான், சபரீசன்.ஹாலில் இருந்த, 'டிவி' திடீரென்று இரைந்தது. நின்று போன மின்சாரம் திரும்பி வந்து, குழல் விளக்குகள் கண் சிமிட்டி எரிந்தன. 'டிவி' திரையில், ராமலிங்கம் தெரிந்தார். சுற்றிலும் அவரின் தொழிலாளர்கள்.நீட்டியிருந்த, 'மைக்'கில், 'ஆம்... உண்மை தான். மன அமைதி வேண்டி, நானும், மனைவியும். ஆன்மிக பயணம் போக இருக்கிறோம். வயதான காலத்தில், இந்த பேரிழப்பு எங்களை முடக்கி விட்டது. என் தொழிலாளர்களுக்கு ஆறு மாத சம்பளம் கொடுத்து, என்னிடம் வேலை செய்த டிரைவர்களுக்கே லாரிகளை மாற்றி தந்து, இந்த தொழிலை மூடி விட்டேன்.'என் பேரன், வருண் பெயரில், ஒரு, 'டிரஸ்ட்' ஏற்படுத்தி இருக்கேன். எங்கெல்லாம் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருக்கிறதோ, அது குறித்து, 'டிரஸ்ட்'டுக்கு விபரம் சொன்னால், அந்த அமைப்பு ஆவன செய்யும். 'என் பேரனுடைய மரணம் தான், கடைசியாக இருக்கணும்; இனி, வருங்காலத்துல, ஒரு குழந்தை உயிர் கூட போயிடக் கூடாதுங்கிற எண்ணத்துல தான், இந்த அமைப்பை ஏற்படுத்தியிருக்கேன்.'என் தோட்டத்திலிருந்த, மூன்று ஆழ்துளை கிணறுகளையும் மூடி விட்டேன். இனி, இப்படி ஒரு கோர மரணம் நடக்க கூடாதுன்னு கடவுளிடம் வேண்டுகிறேன்...' என்று கை கூப்பினார்.வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள், கங்கா. அடி வயிறு குழைந்தது.'அம்மா... அம்மா... நான் உன்கிட்டயே திரும்பி வர்றேன்மா...' என்ற குரல், எங்கிருந்தோ மிதந்து வந்தது. மயக்கத்தில் சாய்ந்தாள், கங்கா. உதிர்ந்து போன அவளின் உயிர்ப்பூ, மீண்டும் மடியில் கனக்கும் வரை, கங்காவின் தவிப்பும் துடிப்பும் அடங்காது. அவள் கனவு பலிக்கட்டும். ஜே. செல்லம் ஜெரினா