உள்ளூர் செய்திகள்

ராஜாவின் பிறந்தநாள்!

ஒரு தெய்வத்தின் சிறப்பு கருதி, விழாக்கள் நடத்துவது வழக்கமானது தான். சிவனுக்கு, சிவராத்திரி; சக்திக்கு, நவராத்திரி; சூரனை சம்ஹாரம் செய்ததற்காக முருகனுக்கு, கந்த சஷ்டி; கிருஷ்ணரின் பிறப்புக்காக, கிருஷ்ண ஜெயந்தி...இப்படி பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், பகவானின் தீவிர பக்தர்களுக்காக கொண்டாடப்படும் விழாக்கள், மிகக் குறைவாகவே இருக்கும். அது தான், 'சித்திரை ஆட்டத்திருநாள்!' சபரிமலையில் நடக்கும் இந்த விழா, ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று, அய்யப்பனுக்கு சேவை செய்த, சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்தநாளுக்காக நடத்தப்படுகிறது.திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்தவர். அவர், பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில், இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இவருக்காக கொண்டாடப்படும் திருநாளை, 'சித்திரை ஆட்டத்திருநாள்' என்பர்.ஆட்டம் என்றால், பொதுவாக நடனத்தை சொல்வோம். இதில் வரும், 'ஆட்டம்' எனும் சொல்லுக்கு, 'கொண்டாட்டம்' என, பொருள். குழந்தை பிறந்த நாளன்று, அந்த வீடே கொண்டாட்டத்தில் இருக்கும். அதையே இந்த விழாவுக்கு சூட்டி விட்டனர்.அய்யப்பன் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்ட இவர், அவருக்கு தங்க அங்கி செய்து கொடுத்தார். இந்த அங்கி தான், மண்டல பூஜை விழா காலத்தில் பந்தளம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும். அப்போது, பாதுகாவலாக கருடன் மேலே பறந்து வரும். இந்த அங்கி அணிவிக்கப்பட்டே, அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடக்கும். மேலும், இங்கிருந்து அய்யப்பனுக்கு மிகவும் பிடித்தமான நெய் கொண்டு வரப்பட்டு, அபிஷேகம் செய்யப்படும்.இந்த சேவையைச் செய்ததற்காக, இந்த மகாராஜாவுக்கு சபரிமலையில் முக்கியத்துவம் தரப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு முந்திய நாள் மாலையில், நடை திறக்கப்பட்டு, அய்யப்பனுக்கு பூஜை நடக்கும்.பிறந்தநாளன்று, பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் நெய் அபிஷேகத்துடன், விசேஷ பூஜை நடக்கும்.சபரிமலையில் மண்டல பூஜைக்காக, 41 நாட்கள், மகர விளக்கு விழாவுக்காக, 20 நாட்கள், ஒவ்வொரு தமிழ், மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்கள், ஓணம், கோவில் பிரதிஷ்டை தினம் போன்றவற்றிற்காக நடை திறக்கப்படும். இவை அனைத்தும் சுவாமிக்குரியவை. இந்த வரிசையில், மகாராஜாவின் பிறந்தநாளுக்காகவும், இரண்டு நாட்கள் நடை திறக்கப்படுவது, மனித குலத்துக்கு, அய்யப்பன் தந்த சன்மானமாகவே கருத வேண்டும்.இவ்விழாவுக்காக, வரும், 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 25ம் தேதி காலை, 10:00 மணிக்கு பூஜை நடக்கிறது. தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !