கோபத்தை அடக்குவோம்
கோபத்தை, கொடுந்தீ என்பர்; அது, சாதாரண மனிதர்களை மட்டுமல்ல, மாபெரும் முனிவர்களைக் கூட விட்டு வைத்ததில்லை.விசிகன் என்பவரின் புதல்வன், சாந்தி. அடக்கம், அன்பு மற்றும் அமைதி எனும் நற்பண்புகள் அனைத்தும் கொண்ட இவன், பூதி எனும் முனிவரிடம் மாணவராக சேர்ந்தான். ஆங்கீரச முனிவரின் புதல்வர், பூதி; கடுங்கோபி. மனிதர்கள் மட்டுமல்லாது, தேவர்கள் கூட, அவரைக் கண்டு பயந்து, அவருக்கு அடங்கி நடந்தனர். அப்படிப்பட்டவரிடம் சீடனாகச் சேர்ந்த சாந்தி, குருநாதரின் கோபத்தைப் பொறுத்து, கல்வி கற்றான். கோபம் கொண்டவர்களின் சிந்தனை, எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்ததாகவே இருக்கும். பூதி மட்டும் விதி விலக்கா என்ன!பூதிக்கு பிள்ளை இல்லை; அவர், 'நம் கோபத்தைக் கண்டு நடுங்கி, நமக்கு அஞ்சி நடக்கும் தேவர்கள், நாம் தவம் செய்தாலும், நமக்குப் புத்திரப் பேறு அளிக்க மாட்டார்கள்...' எனும் எதிர்மறை எண்ணம் கொண்டிருந்தார். ஒரு சமயம், தன் சகோதரர் சுவர்ச்சஸ் செய்யும் யாகத்திற்கு, கர்த்தாவாக இருந்து யாகம் செய்வித்துக் கொண்டிருந்தார் பூதி. அந்நிலையில், அவர் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால், தன் சீடனான சாந்தியை அழைத்து, 'இந்த யாக அக்னியை அணையாமல் வளர்த்து வா...' என்று கட்டளையிட்டு, சென்றார். சாந்தியும் அவ்வாறே பொறுப்பாக பார்த்துக் கொண்டார். ஆனால், பூஜைக்கு பூ எடுக்க வேண்டியிருந்ததால், கொழுந்து விட்டு எரியும் யாக அக்னியை பார்த்து, 'நாம் வரும் வரை இது அணையாது...' என்று நம்பிக்கையோடு, பூ பறிக்கச் சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது, யாக அக்னி அணைந்திருந்தது. அதனால், குரு நாதரின் கோபத்தை எண்ணி நடுங்கி, அக்னி பகவானை துதித்தார். அவரின் துாய்மையான பக்திக்கு இரங்கி, காட்சியளித்தார் அக்னிபகவான்.'அக்னி பகவானே... என் பக்தியில் நீங்கள் மகிழ்ந்தது உண்மையானால், கடுங்கோபியான என் குருநாதரின் கோபம் தணியும் வண்ணம், யாக அக்னி முன்போல் ஜொலிக்க வேண்டும். அத்துடன், குருவிற்கு கோபம் வரவே கூடாது. அவர், எல்லா ஜீவராசிகளிடமும் தயையுடன் இருக்க வேண்டும்; அவருக்கு ஒரு புத்திரன் பிறக்க வேண்டும்...' என, வேண்டினார்.'அப்படியே தந்தேன்...' என்ற அருளி, மறைந்தார், அக்னி பகவான்.அவர் சென்ற பின், ஜொலிக்கும் யாக அக்னி முன், தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்தார், சாந்தி. அந்நேரத்தில் அங்கு வந்த பூதி, தன்னை அறியாமலேயே, தன் மனம் அமைதியில் ஆழ்வதையும், மனதில் தயை ததும்புவதையும் உணர்ந்தார். தன் நிலையை, அவர் சாந்தியிடம் சொல்ல, நடந்ததையெல்லாம் சொல்லி, குருநாதரை வணங்கினார், சாந்தி.குருநாதருக்கு மெய் சிலிர்த்தது; சீடனை, மகிழ்ச்சியோடு கட்டித் தழுவி, சகல கலைகளையும் அவனுக்கு கற்பித்தார்.குருநாதரின் கோபத்தை நீக்கிய சீடன், பிற்காலத்தில், சகலகலா விற்பன்னராகத் திகழ்ந்தார்.எனவே, கோபத்தின் விளைவை உணர்ந்து, கோபத்தை அறவே நீக்குவோம்! பி.என்.பரசுராமன்தெரிந்ததும் தெரியாததும்!கோவிலுக்கு சென்று, செய்ய வேண்டியவை எவை?தினசரியோ அல்லது வெள்ளிக் கிழமைகளிலோ சிவ மற்றும் விஷ்ணு தரிசனம் செய்ய வேண்டும். திருச்சின்னம் அணிவது, ஒவ்வொருவரின் கடமை. கோவிலுக்கு செல்லும் போது, வெறுங்கையுடன் செல்பவர்கள், கோவில் பிரகாரத்தில் கிடக்கும் குப்பைகளையேனும், கை கொள்ளும் அளவுக்கு எடுத்து வெளியில் போட வேண்டும்; இது, கையில் ஏதும் கொண்டு வராத பாவத்தை, நிவர்த்தி செய்யும்.