உயிரே உனக்காக (12)
இதுவரை:ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடைபெறும் நடன நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தாள் மதுரிமா. நரேனை சந்திக்க, அவனது வீட்டிற்கு வந்தாள் விமான பணிப்பெண்ணான கவிதா. நரேனுடன் நட்பு முறையில் பழக விரும்புவதாக கவிதா கூறியதற்கு, திருமணம் செய்து, வாழ்வில் செட்டிலாகும்படி அறிவுறுத்தினான் நரேன். தான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்று கூறினாள் கவிதா —கவிதா, ஏற்கனவே திருமணம் ஆனவள். நரேன் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை, மிக எளிதாக சொல்லியதோடு, அதற்கு சாட்சியாய் அவன் முன்பாக, சிலை போல் அமர்ந்திருந்தாள் கவிதா.ஆம்... அவள் ஏற்கனவே திருமணம் ஆனவளா என்று, யாரிடமும் நரேன் விசாரிக்கத் தேவையில்லை.'ஒரு பெண் எத்தனை முறை திருமணம் செய்து கொள்ள முடியும்?' என்று, கவிதா அவனிடம் கேள்வி எழுப்பிய போது, நரேனுக்குள் தோன்றிய அவளது கேள்விக்கான பதிலே வேறு...கவிதா போன்ற ஒரு அழகான பெண், மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், வீடு தேடி வந்து, மனதை அலைக்கழிக்கும் விதமாக, அவன் முன் அமர்ந்து, அப்படி ஒரு கேள்வியைக் கேட்டபோது...இவள் வேண்டுமென்றே, விளையாட்டாகத் தன்னை சீண்டிப் பார்க்கிறாளோ என்ற உணர்வே, நரேனுக்குள் முதலில் தோன்றியது. அதற்கு ஏற்ப ஒரு பதிலே, அவனுக்குள் முதலில் உருவானது.'அது, அந்தப் பெண்ணின் மனநிலையையும், அவளுக்கு ஏற்படும் சூழ்நிலைகளையும், அதை அவள் எதிர்கொள்ளும் விதத்தையும் பொறுத்த ஒரு விஷயம்...'அவனுக்குள் இப்படி ஒரு பதில் தோன்றி, அவன் நாவின் நுனி வரை வந்து விட்டது. ஆனால், கவிதாவைப் பற்றி அவனுக்குள் எழுந்திருக்கும் சந்தேகம் மற்றும் அச்சத்திற்கு, அவனது பதிலே உரமாகி விடுமோ என்ற எண்ணமும் எழவே, அவனது பதிலை மாற்றி, 'ஒரு முறை தான்!' என்று சொன்னான் நரேன்.'நீங்கள் என்னை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறீர்கள்...' என்று கவிதா சொன்ன போது, அவள் குரலில் தொனித்த உணர்வுகள், அவனை யோசிக்க வைத்தன. பதிலாக எழுந்த அவளது கேள்வியில் அதிர்ந்து போன நரேன், அவள் சொல்வதை முழுவதுமாய் நம்பி விடாதவனாய், ''ஆர் யூ ஜோக்கிங் கவிதா?'' என்று நிதானமாகவும், மெல்லிய புன்னகையுடனும் கேட்டான்.''நோ... ஐ ஆம் நாட் ஜோக்கிங். டாக்கிங் சம்திங் சீரியஸ்.''கவிதாவின் இந்த பதில் மிகவும் உறுதியாக வெளிப்பட, நரேன் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருக்க, கவிதாவே பேசினாள்...''நரேன்... யோசித்துப் பாருங்கள்... ஒரு பெண், ஒரு ஆணைத் தேடி வந்து, அதுவும் அவனது மனைவி வீட்டில் இல்லாத நேரமாக, அவன் வீட்டிற்கே வந்து, தான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்று சொல்வது, ஜோக் சொல்வது போலவா உங்களுக்கு தோன்றுகிறது?''கவிதாவின் கேள்வி, அவன் மீது குற்றம் சுமத்துவதைப் போல் இருந்தது.''ஐ ஆம் சாரி... நான் கேட்டதை நீ தவறாகப் புரிஞ்சிகிட்ட. நீ சொன்ன விஷயத்தை, ஐ மீன்... நீ ஏற்கனவே திருமணமானவள் என்று சொன்னதை, என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அதனால்தான்...''''நான் திருமணம் ஆனவள் என்பதையே நம்ப மறுத்த நீங்கள், அடுத்தடுத்த விஷயங்களைக் கேட்டால்...''''அடுத்தடுத்த விஷயங்களா?''''ஆமாம்... ஒரு பெண்ணின் வாழ்க்கையில், அவளது திருமணத்திற்கு பின் நிகழும் விஷயங்கள்.''''நீ சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.''நரேன் அழுத்தமாகச் சொல்லியதில், அவனை உணர்ந்து கொண்டவளாய், அவனைக் காட்டிலும் அழுத்தமாகவும், நிதானமாகவும் சொன்னாள் கவிதா...''என் திருமணத்தின் சாட்சியாய், மூன்று வயதில், எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. நான் ஒருவனுக்கு மனைவி என்ற உண்மையோடு, ஒரு குழந்தைக்குத் தாய் என்பதும் முழுக்க முழுக்க உண்மை.''அவள் திருமணம் ஆனவள் என்பதையே ஏற்க மறுத்த அவனது மனம், மூன்று வயது குழந்தையின் தாயாக அவளை கற்பனை செய்து பார்க்கவே மறுத்தது.அங்கு சிறிது நேரம் மவுனம் நிலவியது.''கணவனோடும், குழந்தையோடும் இருக்கும் ஒருத்தியின் வாழ்க்கையில், தனிமைக்கு ஏது இடம் என்பது தானே உங்கள் யோசனை.'''ஆமாம்...' என்பது போல், தலையை மெல்ல அசைத்தான் நரேன்.''என் கணவர் இப்போது என்னுடன் இல்லை.''இதையும், நிதானமாகவும், அழுத்தமாகவும் சொல்லி நிறுத்தினாள் கவிதா. அவளது கண்களில் லேசாக நீர் துளிர்த்திருந்தது.''உன் கணவர், உன்னுடன் இல்லையா... வாட் டூ யூ மீன்?''''ஆமாம்... என் கணவர் என்னை விவாகரத்து செய்து விட்டார்.''சொல்லும் போதே, கவிதாவுக்கு குரல், நெஞ்சை அடைத்தது. கவிதாவின் இந்த அஸ்திரத்தில், நரேன் முழுவதுமாய் நிலை குலைந்தான்.அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவளாய், இரு கைகளாலும் முகத்தை மூடி, குலுங்கி அழுதாள் கவிதா.உண்மையிலேயே, மனித உணர்வுகள் வித்தியாசமானவைதான். கல்லுக்குள்ளும் ஈரம் இருப்பது உண்மையென்றால், இதுபோன்ற உணர்வுகளில், மனிதர்கள் கசிந்துருகுவதில் எவ்வித வியப்பும் இல்லை. அவளது மனச் சுமைகள் குறையட்டும் என்ற நினைப்பில், கவிதாவை கொஞ்ச நேரம் அழவிட்டு, மவுனமாக அமர்ந்திருந்தான் நரேன்.''ஐ ஆம் சாரி நரேன்.''அவன் முன் அழ நேர்ந்ததற்காக அவள் வருத்தப்பட்டாள்.''நோ... நோ... நத்திங் ராங்... திருமணமாகி இத்தனை குறுகிய காலத்தில், ஒரு குழந்தைக்கு உன்னை தாயாக்கிவிட்டு, விவாகரத்துக் கோருவது நியாயமாகப் படவில்லையே... அவர் விவாகரத்து கேட்டால், நீ ஏன் அதற்கு சம்மதிச்ச... மறுத்திருக்கலாமே?''''உங்களைப் போல, இதே கேள்வியைத்தான் நிறைய பேர் கேட்டனர். ஆனால், என் பூரண சம்மதத்துடன் தான் இது நடந்தது. அவர், என்னிடம் விவாகரத்து கோராமல் இருந்திருந்தால், நானே அவரிடம் விவாகரத்து கோரும் ஒரு சூழ்நிலையில் அப்போது நான் இருந்தேன். எனவே தான், அவராக இதை ஆரம்பித்ததும், நான் முழுமனதோடு சம்மதித்தேன்.''கவிதா சொல்லும் ஒவ்வொரு விஷயமும், நரேனுக்கு அதிர்ச்சியாகவும், அதே சமயம், ஆச்சரியமாகவும் இருந்தது.ஒரு விமானப் பணிப்பெண்ணாக, விமானப் பயணிகளின் மனம் கோணாமல் உபசரித்தும், உதவியும், உதடுகள் புன்னகைக்க அவர்களிடையே உலா வரும் ஒரு அழகு தேவதையாக மட்டுமே கவிதாவை அவன் நினைத்திருந்தான். அந்தப் பூவுக்குள்ளும் ஒரு பூகம்பம் நிகழ்ந்திருக்கிறது என்பது புதிய விஷயமாகவும், அதற்கான காரணம் புதிராகவும் இருந்தது.''உனக்குள் இத்தனை பெரிய சோகம் இருக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை; ரியலி ஐ ஆம் சாரி...''''இதில் நீங்கள் வருந்துவதற்கு ஒன்றுமில்லை. ஆனால்...''''ஆனால்... சொல்லு...''''நான் முதலில் சொன்ன என் தனிமைக்கு, உங்களிடம் மருந்து இருக்கிறது நரேன்.''''உன்னுடைய தனிமைக்கு, என்னிடம் மருந்தா... நீ என்ன சொல்றன்னு எனக்கு உண்மையிலேயே புரியல... பை தி பை... ஐ ஆம் ஆல்சோ மேரீட்.''அவசர அவசரமாக, ஒருவித பதற்றத்துடன் பேசினான் நரேன்.''நான் சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.''அவனைக் காட்டிலும் வேகமாக கவிதா மறுத்துப் பேசினாள்.''பிறகு... நீ குறிப்பிட்ட தனிமைக்கும், அதற்கான மருந்திற்கும்...''''அர்த்தமே வேறு நரேன். நான் வேறு எந்தவிதமான தவறான எண்ணத்தோடும், அந்த வார்த்தைகளை நிச்சயமாக பிரயோகிக்கவில்லை.''''நீ என்னை ரொம்பவும் குழப்புற...''''தெளிவாகவே சொல்றேன்... எந்தவிதமான சந்தோஷத்தையும் தேடி நான் உங்களிடம் வரவில்லை... நடக்கக் கூடாத ஒன்று என் வாழ்க்கையில் நடந்து முடிந்து விட்டது. அது, கெட்ட கனவு மாதிரி. என் எதிர்கால வாழ்க்கையை, அந்தக் கனவிலேயே வாழ, நான் விரும்பவில்லை; அதிலிருந்து வெளியே வர விரும்புகிறேன்.''''அதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?''கொஞ்ச நேரத்திற்கு மவுனமாக இருந்தாள் கவிதா.''சொல்லு கவிதா... நான் என்ன செய்ய வேண்டும்?''''ஐ நீட் யுவர் கம்பெனி. சொல்லப் போனால், என் சோகங்களை, துயரங்களை நான் சொல்லி அழுவதற்கும், என்னைப் புரிந்து, எனக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி, என்னை சமாதானப்படுத்தி, நல்வழிப்படுத்தும் நல்ல துணையாக, நல்ல நண்பனாக...''பேசுவதை நிறுத்திவிட்டு, அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் கவிதா. அவனுக்குள் புதிதாய் முளைத்த ஒரு சந்தேகத்தை, வெளிப்படையாகவே அவளை நோக்கி கேட்டான் நரேன்...''நீ சொல்ல வருவது புரிகிறது... உன் சோகங்களுக்கு, ஒரு வடிகால் தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.''''என்ன சந்தேகம்?''''விமானத்தில் என்னைப் போலவே, உன்னோடு எத்தனையோ பயணிகள் பயணிக்கின்றனர். இதில், என்னை இதற்காகத் தேர்வு செய்ததற்கு என்ன காரணம்?''''நீங்க தான் காரணம்.''''நானா?''''ஆமாம்... நீங்களே தான். ஒரு ஆணாக இருந்தும், அதிலும் அமெரிக்காவில் வாழும் கிரீன் கார்டு குடிமகனாக இருந்தும், வாழ்க்கைத் துணை என்று வரும் போது, நீங்கள் தேர்வு செய்திருக்கும் உங்கள் மனைவி மதுரிமா.''''மதுரிமாவுக்கு என்ன?''''தமிழ் மண்ணில் பிறந்து, அதன் கலாசாரத்தில், பண்பாட்டில், கலையில், அதுவும் உன்னதமான நாட்டியக் கலையில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட மதுரிமா, ரியலி சம்திங் கிரேட்.''கவிதாவைப் பற்றிய பயம் தான் மதுரிமாவுக்கு இருக்கிறது. ஆனால், இவளுக்கு, மதுரிமாவின் மேல் உயர்வான ஒரு எண்ணமே இருக்கிறது. இது ஒரு நல்ல, ஆரோக்கியமான விஷயம் தான்.''என் மனைவியைப் பற்றிய உன் அபிப்பிராயத்திற்கு மிகவும் நன்றி.''''நரேன்... இதில் உங்களைப் பற்றிய என் அபிப்பிராயம் தான் முக்கியமானது. உங்களது தேர்வு, ரசனை எல்லாமே கிரேட்; ஆனால், நான்...''''என்ன செய்த?''''தமிழ் மண்ணில், ஆசாரமான ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தும், அனைவரது விருப்பத்தையும் மீறி, அமெரிக்க கலாசாரத்தில் ஊறிப் போயிருந்த ஒருவரை, என் கணவராகத் தேர்ந்தெடுத்தேன்.''''அதில் ஒன்றும் தவறு இல்லையே...''''இல்லை நரேன். அதில் தான் நான் அவசரப்பட்டு, தவறு இழைத்து விட்டேன். நான் ஒட்டுமொத்த அமெரிக்க ஆண்கள் மீதும் குற்றம் சுமத்தவில்லை; ஆனால், நான் தேர்வு செய்த என் கணவர் தவறானவர்.''''இதை நீ முதல் முதலாக எப்போது உணர ஆரம்பிச்ச?''''ஒரே வருடத்தில்... எங்களுக்கு குழந்தை பிறந்த முதல் மாதத்திலேயே...''இது ஏதோ, இவளும், இவள் கணவனும் சம்பந்தப்பட்ட இவர்களது அந்தரங்க வாழ்க்கை. அது பற்றிய சந்தேகங்களையோ, கேள்விகளையோ இவளிடம் கேட்பது, அநாகரிகம் என்ற உணர்வு அவனுக்குள் எழுந்தது. இருப்பினும், அந்த நேரத்திற்கு எதையாவது பேசியாக வேண்டும் என்பதற்காக அவன் கேட்டான்...''உன் கணவரைப் பற்றி கொஞ்சம் சொல்லு. விவாகரத்திற்குப் பிறகும் சேர்ந்து வாழும் தம்பதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். உனக்கு சம்மதம் என்றால், நான் அவரை சந்தித்துப் பேசுறேன்.''அவன் சொன்னதைக் கேட்டு, வாய்விட்டு சப்தமாக சிரித்தாள் கவிதா.''உங்கள் நல்ல மனதை நான் பாராட்டுகிறேன். ஆனால், மறுபடியும் அவருடன் சேர்ந்து வாழ்வதில் எனக்கு உடன்பாடும் இல்லை; விருப்பமும் இல்லை. அத்துடன், நான் அதற்காக உங்களைத் தேடி வரவும் இல்லை.''கவிதாவின் குரலில் தான் எத்தனை உறுதி; உணர்வுகளின் இறுக்கம்.''அத்தனை கசப்பா?''''வெறுப்பு... உங்களை சந்தித்தது போலவே, அவரையும் என் விமானப் பயணத்தின் போது தான் சந்தித்தேன் - மிஸ்டர் டேவிட் ஆண்டர்சன்... ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், மனோவியல் துறையில் விரிவுரையாளர். எத்தனை பெரிய தவறு செய்து விட்டேன்.''தன் தவறை உணர்ந்தவள் போல், ஒரு பெருமூச்சுவிட்டு நிறுத்தினாள் கவிதா.''மனோவியலில் விரிவுரையாளரா... மனோவியல் படித்திருந்துமா தவறு செய்தார்?''''நரேன்... மனோவியல், மிகவும் கூர்மையான கத்தியைப் போன்றது. அதை, மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அந்தக் கத்தி, உயிரை காக்கும் அறுவை சிகிச்சைகளையும் செய்யும்; சில சமயங்களில் ஆபத்தான கொலைகளையும் செய்யும்.''இதைச் சொல்லும் போது, அவளது வார்த்தைகளில் தாம் எத்தனை உக்கிரம்.''ஆமாம் நரேன்... மிஸ்டர் டேவிட் ஆண்டர்சனின் கையிலிருந்த மனோவியல் கத்தி, என்னை கொலை செய்தது... ஐ மீன்... என் வாழ்க்கையைக் கொன்று போட்டது. சரியான வக்ரம் பிடித்த ஆள்.''அவள் சொல்ல வருவதை, நரேனால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. என்ன பேசுவது என்று புரியாமல் நரேன் அமர்ந்திருக்க...நல்ல வேளையாக அவனது மொபைல் போன், அந்த நேரம் பார்த்து ஒலித்தது.அவசரமாக போனை எடுத்துப் பார்த்தான் நரேன்.போனில் அவனது ஆசை மனைவி மதுரிமாவின் மொபைல் நம்பர்... எரிந்தும், அணைந்தும் கண்ணாமூச்சு காட்ட, அவன் பேசுவதா, வேண்டாமா என்ற யோசனையில் அமர்ந்திருக்க...''யாரு போன்ல?''''மதுரிமா...''அவன் சற்றும் எதிர்பாராத விதமாக, அவன் கையிலிருந்து போனை அவசரமாக கவிதா எடுக்க, நிலைகுலைந்து போனான் நரேன்.— தொடரும்.