உள்ளூர் செய்திகள்

திரும்பிப் பார்க்கிறேன்! (10)

போலி நிருபரால் நேர்ந்த விபரீதம்!ஒருநாள், 'குமுதம்' இதழ் அலுவலகத்திற்கு, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்கள் நிருபர் என்னை வந்து பேட்டி எடுத்து, மூன்று வாரங்கள் ஆயிற்று. இன்னும் பேட்டி வரவில்லையே...' என்று கேட்டார், ஒரு அரசியல்வாதி.அந்த நிருபர் பெயரை கேட்க, 'ரஜத் என்பவர், என் வீட்டிற்கு வந்து பேட்டி எடுத்தார்...' என்றார்.'இதில் ஏதோ தவறு இருக்கிறது. உங்களை பேட்டி காண, எங்கள் நிருபர் ரஜத்தை நாங்கள் அனுப்பவில்லை. அவர் எப்படி இருந்தார்?' என்று கேட்டார், ரா.கி., 'கொஞ்சம் கருப்பாக, குள்ளமாக, தலை வழுக்கையை மறைக்க தொப்பி அணிந்து இருந்தார்...' என்றார், அந்த அரசியல்வாதி.ரா.கி.,க்கு விஷயம் புரிந்துவிட்டது.'சார், நீங்கள் சொல்வது போல, ரஜத் இருக்க மாட்டார். அந்த நபர் மீண்டும் உங்களை தொடர்பு கொண்டால், போலீசில் பிடித்துக் கொடுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...' என்றார்.தயங்கியவாறே அந்த அரசியல்வாதி, 'சார், அந்த ரஜத் என்பவருக்கு பேட்டிக்காக, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறேன்...' என்றார்.'ரஜத் அப்படியெல்லாம் செய்ய மாட்டார். வந்தவர் போலி நிருபர். போலீசில் பிடித்துக் கொடுங்கள்...' என்று கூறிய ரா.கி., எனக்கு போன் செய்து, விஷயத்தை சொன்னார்.என் பெயரை சொல்லி, யாரோ ஆள் மாறாட்டம் செய்திருப்பது புரிந்தது. சில நாட்களுக்கு பின், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபண்ணா, 'ரஜத் என்ற பெயரில் ஒரு நிருபர், மதியம் சந்திக்க வருவதாக சொல்லி இருக்கிறார். நீங்கள் அதற்குள் எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள்...' என்று, என்னிடம் சொன்னார்.சொந்த மற்றும் பத்திரிகை விஷயத்தில், நான் எப்போதும், 'வாரமலர்' இதழ் அந்துமணியின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது வழக்கம். அவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன்.'டென்ஷன் ஆகாதீங்க. நீங்க உடனே எங்க ஆபீஸ் வாங்க. 'தினமலர்' க்ரைம் ரிப்போர்ட்டரை உங்களோடு வரச் சொல்கிறேன். அவர் உங்களுக்கு உதவி செய்வார்...' என்றார், அந்துமணி.'தினமலர்' நாளிதழ் க்ரைம் ரிப்போர்ட்டரும், நானும், கோபண்ணா வீட்டுக்குச் சென்றோம். ரஜத் என்று தன்னை சொல்லிக் கொண்ட அந்த ஆளும் அங்கு இருந்தார். 'என்னய்யா பாவம் பண்ணினேன், உனக்கு. என் பெயர் சொல்லி இப்படி ஏமாற்றுகிறாயே...' என்று, அந்நபரிடம் கேட்டேன்.பதில் ஏதும் கூறாமல் இருந்தார். அவர் கையில் வைத்திருந்த ஜோல்னா பையில், தமிழக கவர்னராக இருந்த பி.சி. அலெக்சாண்டரின் மனைவி அக்கம்மாவிடம் நான் பேட்டி கண்ட, 'குமுதம்' இதழ் மற்றும் அதற்கு முந்தைய என் கட்டுரைகளை வைத்திருந்தார்.அந்த, 'டுபாக்கூர்' நபர், மிதிவண்டியில் தன் பயணத்தை ஆரம்பித்ததாகவும், பிறகு பலரிடமிருந்து பணத்தை நுாதன முறையில் கொள்ளையடித்து, புதிய மோட்டர் சைக்கிள் வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்தான். 'குமுதம்' இதழ்களில் நான் எழுதிய சில முக்கிய கட்டுரைகளை காண்பித்து, தான் எழுதியதாக சொல்லி, அரசியல்வாதிகளை நம்ப வைத்து பணம் பெறுவது தான், அவனது வாடிக்கையாக இருந்தது தெரிந்தது. 'தினமலர்' நாளிதழ் க்ரைம் ரிப்போர்ட்டர் மற்றும் கோபண்ணா உதவியுடன், போலீசை வரவழைத்து, அந்த நபரை பிடித்து கொடுத்தோம். இதுபற்றி, வாரமலர் இதழில், பா.கே.ப., பகுதியில் என் புகைப்படத்தோடு எழுதி இருந்தார், அந்துமணி.'ரத்தத்தின் ரத்தமே!' என் அருமை நண்பர் ஆர்.வெங்கடேஷ், 'கல்கி' வார இதழ் பொறுப்பாசிரியராக இருந்தபோது, 'ரத்தத்தின் ரத்தமே' என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர்., பற்றி கட்டுரைகள் எழுதுமாறு கேட்டார். 15 வி.ஐ.பி.,களிடம் எம்.ஜி.ஆர்., பற்றி கேட்டு, பேட்டி எடுத்து, 25 வாரங்கள் அந்தத் தொடரை எழுதினேன். 'கல்கி' வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.ஏவி.எம்.சரவணன், சத்யஜோதி பிலிம்ஸ் ஜி. தியாகராஜன், ஆனந்தா பிக்சர்ஸ் எல். சுரேஷ், தேவர் பிலிம்ஸ் ஆர். தியாகராஜன், இசையமைப்பாளர் சங்கர் - கணேஷ், நடிகர்கள் ஆர்.எஸ்.மனோகர், வி.எஸ்.ராகவன், டி.வி.வரதராஜன், ராதாரவி, நடிகைகள் ராஜசுலோசனா, எம்.என்.ராஜம், லதா, டி.வி.வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்., மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டே ஆகியோரை பேட்டி கண்டு எழுதினேன்.பின்னர், இந்தக் கட்டுரைகளை தொகுத்து, 'தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தார் புத்தகமாக வெளியிட்டனர். அந்தப் புத்தகத்திற்கு, 'கல்கி' ஆசிரியர் லட்சுமி நடராஜன் முகவுரை அளித்து, என்னை கவுரவித்தார். ரத்தத்தின் ரத்தமே புத்தகத்திற்கும் வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.லட்சுமி பார்வதி பற்றி, என்.டி.ஆர்., மருமகன் கூறியது என்ன?— தொடரும்'குமுதம்' இதழில் பல ஆண்டுகள் நான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் எல்லாம், நண்பர் லேனா தமிழ்வாணன் கொடுத்த வெள்ளை பேப்பரில் தான். அந்த பழக்கம் எப்போது ஏற்பட்டது என்று நினைவில்லை. ஆனாலும், வீட்டில் பேப்பர் தீர்ந்து விட்டால், அவரிடம் சொல்வேன். அடுத்த நாளே, 500, ஏ4 அளவு தாள்களை எனக்கு அனுப்பி விடுவார். பல ஆண்டுகளாக நான், அவர் கொடுத்த பேப்பரில் தான் கட்டுரைகள் எழுதி வருகிறேன். சென்னை மட்டுமல்லாது, இந்தியாவின் பல நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்தும், 'அப்பாயின்மென்ட்' வாங்கி, விமானத்தில் பறந்து வந்து, ஜி.ரமேஷ் என்பவரிடம், அமிதாபச்சன், மோகன்லால், மம்முட்டி, ரஜினி மற்றும் பல வி.ஐ.பி.,கள், 'ஹேர்டிரஸ்சிங்' செய்து கொள்வர்.'வாரமலர்' இதழுக்காக ரமேஷிடம் பேட்டி எடுத்து எழுதிய கட்டுரைக்கு, பொறுப்பாசிரியர் கொடுத்த தலைப்பு, 'தலைக்கு மேலே வேலை இவருக்கு!' கட்டுரைகளுக்கு தலைப்பு கொடுப்பதில் பொறுப்பாசிரியரின் ஸ்டைலே தனி.எஸ். ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !