உள்ளூர் செய்திகள்

திரும்பிப் பார்க்கிறேன்! (20)

நிர்வாண ஓவியம் மண வாழ்க்கையை பாதிக்காதா?பொதுவாக, நான் ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, அவரை எங்கு சந்திக்க வேண்டும்; வீட்டிலா, அலுவலகத்திலா அல்லது 'ரெஸ்டாரன்ட்' போன்ற பொது இடங்களிலா என்று கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்வேன்.சில சமயம் விதிவிலக்காக அமைந்து விடுவதும் உண்டு. பெங்களூரைச் சேர்ந்த நிர்வாண ஓவியர் சாவித்திரி என்பவரை பேட்டி எடுக்க நானும், நண்பரும், தொழிலதிபருமான மகேஷ் என்பவரும், பெங்களூரூ முழுதும் சுற்றினோம்.பெங்களூரூ டெலிவிஷன் டவர் அடுத்து, மட்டடஹள்ளி என்ற இடத்தில், பெரும் அலைச்சலுக்கு பிறகு, அவரது வீட்டை கண்டுபிடித்தோம். அவரும், அவரது கணவர் ரீகோவும் நான் தங்கியிருந்த, 'உட்லண்ட்ஸ்' ஹோட்டல் அருகே உள்ள நண்பர் வீட்டிற்கு வந்து பேட்டி கொடுத்தனர். எஸ்.எஸ்.எல்.சி., படித்த பின், 'பெங்களூரூ கென்' என்ற கலைப் பள்ளியில், ஐந்தாண்டு ஓவிய பயிற்சி பெற்றவர், சாவித்திரி. அதன்பின், சிண்டிகேட் வங்கியில், 'கிளர்க்' வேலை கிடைத்தது. சாவித்திரி, மில்லர்ஸ் ரோடு கிளையிலும், அவரது கணவர் ரீகோவிற்கு பிரேசர் டவுன் கிளையிலும் வேலை. ரீகோவிற்கு வயது 25. மனைவியைவிட இரண்டு வயது சிறியவர்.ஜூலை 27, 1964ல், ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணம் செய்து கொண்டனர். சாவித்திரி தாலி அணிவதில்லை. திங்கட்கிழமை தோறும் சிவன் கோவிலுக்கு சென்று, நிறைய ஸ்லோகங்கள் சொல்கிறார். ஆனால், ரீகோவோ அவருக்கு நேர் எதிரானவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மனைவியை கோவிலில் விட்டுவிட்டு, வெளியே காத்திருப்பார்.'நான் இதுவரை வரைந்திருக்கும் பெண் நிர்வாண ஓவியங்கள் அனைத்திற்கும், நான் தான் மாடல். பல ஓவியங்கள் கண்காட்சியில் விற்பனையாகி உள்ளன. ஓவியக் கண்காட்சிகளை திறந்து வைத்த, அமைச்சர் ஒருவர், இரண்டு நிர்வாண ஓவியங்களை விலைக்கு வாங்கிக் கொண்டார்...' என்றார், சாவித்திரி.கணவர் ரீகோவையும் நிர்வாணமாக வரைந்திருக்கிறார். ஆனால், கண்காட்சியில் அதை வைக்கவில்லை.'கணவரை நிர்வாணமாக வரைந்ததை, ஓவியக் கண்காட்சியில் வைப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், மும்பை கண்காட்சி நிர்வாகிகள், அந்த படங்களை தேர்ந்தெடுக்கவில்லை. அத்துடன், ரீகோவின் பெற்றோருக்கும் இது பிடிக்கவில்லை...' என்றார், சாவித்திரி.'இதனால், உங்கள் மண வாழ்க்கையை பாதிக்காதா...' என்றேன். 'ஏன் பாதிக்க வேண்டும். ஆண்களை வெறும் மாடலாக மட்டும் தான் பார்க்கிறேன். 100 ஆண்களை நிர்வாணமாக பார்ப்பதை விட, தான் காதலிக்கும் மனிதரை உடையோடு பார்க்கும் போது தான், ஒரு பெண்ணிற்கு அதிக பரவசம் ஏற்படும்...' என்றார், சாவித்திரி.இந்தப் பேட்டி வெளியான போது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த, 35 ஆண்டுகளில் தன் நிர்வாண ஓவியங்களை வைத்து எவ்வளவு கண்காட்சி நடத்தி இருப்பாரோ என தெரியவில்லை. 'தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், சென்ற ஆண்டு வெளியிட்ட, 'தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு' என்ற நுால், வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது; எழுதியவர் ரஜத்தின் மனைவி, ரஜனி.கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு, 'தமிழ் இலக்கிய வளர்ச்சியில் நேர்காணல் - எழுத்தாளர் எஸ்.ரஜத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஆய்வு செய்தார். மூன்றாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்து, 350 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரை தயார் செய்தார், ரஜனி.இன்னும் ஓரிரு மாதங்கள் ரஜனி உயிருடன் இருந்திருந்தால், முனைவர் பட்டம் பெற்றிருப்பார். அதற்குள் அவர், இறைவனடி சேர்ந்து விட்டார்.'குமுதம், தினமலர் - வாரமலர், ஆனந்த விகடன், குங்குமம், கல்கி, மங்கையர் மலர், ராணி, இதயம் பேசுகிறது' போன்ற பிரபல இதழ்களில், ரஜத் எழுதியிருந்த கிட்டத்தட்ட, 2000 பேட்டி கட்டுரைகளில், சிறந்த, 350 பேட்டிகளை ரஜனி தேர்வு செய்திருந்தார். 'என் கட்டுரைகளை ஆராய்ச்சி செய்து, சிறப்பான ஆராய்ச்சி நுாலை ரஜனி தயாரித்ததற்கு, நான் அவருக்கு என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்...' என்கிறார், ரஜத். என் எண்ண குவியல்களை சீராக செதுக்கி, அழகிய சிற்பமாக உருவாக்கி தந்த பொறுப்பாசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி. இருபது வாரங்களாக, பொறுமையாக படித்து, அவ்வப்போது தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.முற்றும்.எஸ். ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !