மாலினி அக்கா!
எங்கள் ஐ.டி., நிறுவனத்துக்கு, ஐந்து கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரக் கூடிய, புராஜக்ட் வேலையை, இன்னும் மூன்றே தினங்களில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நானும், என், 'டீம்' பெண்களும் படு பிசியாக இருந்த அந்நேரத்தில் தான், 'வாட்ஸ் அப்' மூலமாக அந்த அதிர்ச்சி தகவல் வந்தது.'மாலினி அக்காவுக்கு விபத்து... ஆபத்தான நிலையில் திருச்சி ஜி.எச்.,சில் சேர்த்திருக்கிறோம்; உடனே வரவும்...' தோழி சுதா தான் தகவல் அனுப்பி இருந்தாள். அதைப் படித்தவுடன் எனக்கு உடல் நடுங்கியது; 'ஏசி' குளிரையும் மீறி, 'குப்'பென வியர்த்தது. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது; இதயம் மிக வேகமாக அடித்துக் கொள்ள, மூளை ஸ்தம்பித்தது.அடுத்து என்ன செய்வது என்ற யோசனை பிடிபடாமல், இறுக்கமாக அமர்ந்திருந்த என்னை, அருகே அமர்ந்திருந்த மதியழகி கவனித்து, ''சுஹாசினி மேடம்... என்னாச்சு; ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?'' என்று கேட்டாள்.அவள் ஏதோ பேசினாள் என்பது மட்டும் புரிந்தது. ஆனால், என்ன பேசினாள் என்பது தெளிவாக கேட்கவில்லை.என் தோளை தொட்டு அவள் உசுப்பிய பின் தான், சுய நினைவுக்கு திரும்பினேன்.''சுஹாசினி மேடம் என்னாச்சு?'' என்று அவள் மீண்டும் கேட்க, நான், பதில் கூறாமல், என் கையிலிருந்த, 'ஸ்மார்ட்' போனை அவளிடம் நீட்டினேன்.'வாட்ஸ் அப்' செய்தியை படித்தவள், ''அய்யோ... எப்படி மேடம் நடந்துச்சு...'' என்று பதறியவள், அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, என்னிடம் நீட்டினாள்.''முதல்ல தண்ணி குடிங்க; அப்புறமா சுதா கிட்ட விவரம் கேட்கலாம்,'' என்றாள் மதியழகி.அவளிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி, தண்ணீரைக் குடிக்கும் போது, தொண்டைக்குழி வலித்தது. என் மனம் முழுக்க மாலினி அக்காவே நிரம்பி இருந்தாள். வாட்டர் பாட்டிலை மதியழகியிடம் கொடுத்து, என் மொபைலில் சுதாவின் நம்பரை அவசரமாக தேடினேன்.ஒருவாறாக, சுதா நம்பரை தேடிப்பிடித்து போன் செய்த போது, எனக்கு பழக்கப்பட்ட ஆண் குரல்; ஆனால், யாரென்று பிடிபடவில்லை.''சொல்லுங்க சுஹாசினி,'' என்றது அக்குரல்.ஒரு கணம் திகைத்து, 'சுதா இல்லீங்களா... நான் அவங்க பிரெண்ட் பேசுறேன்,'' என்றேன்.''சுஹாசினி... நான் பெங்களூரு சுதாகர் பேசுறேன்.''தலையில் அடித்துக் கொண்டேன். பதற்றத்தில் சுதாவுக்கு பதில், சுதாகருக்கு போன் செய்திருக்கிறேன். ஒருவாறு சுதாரித்து, ''சாரி சுதாகர்... நான் சுதான்னு நினைச்சு, உனக்கு போன் செய்துட்டேன்; சுதா உனக்கு மெசேஜ் அனுப்பினாளா?''''வந்துச்சு; திருச்சிக்கு தான் புறப்பட்டுகிட்டு இருக்கேன். இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பிடுவேன்; நீ எப்ப புறப்படுற?''''ஹெச்.ஓ.டி.,கிட்ட சொல்லிட்டு புறப்பட வேண்டியது தான்; ஆமா... எப்படி விபத்து நடந்தது... அதப்பத்தின தகவல் உனக்கு தெரியுமா?''என்று கேட்டேன்.''ம்... சுதாகிட்ட விசாரிச்சேன். இயற்கை விவசாய கான்பரன்சுக்கு, கார்ல தஞ்சாவூருக்கு போயிட்டு திரும்பும் போது, எதிர்ல வந்த லாரி மோதினதுல, மாலினி அக்காவுக்கு தலையில பலமா அடிபட்டிருக்கு; ஐ.சி.யு.,ல, 'அட்மிட்' செய்துருக்காங்களாம்,'' என்றான் சுதாகர்.''அக்கா பொழச்சுக்குவாங்கல்ல...''''மனசை தேத்திக்க, 'அக்கா பிழைக்கிறது கஷ்டம்'ன்னு தான் சுதா சொல்றா. அதான், அக்கா உயிரோட இருக்கும் போதே, அவங்க முகத்தை கடைசியா பாத்துடலாம்ன்னு, அவசரமா புறப்பட்டுகிட்டு இருக்கேன்,'' என்று கூறி, இணைப்பை துண்டித்தான்.சுதாகர் கூறிய தகவலை கேட்டதும், என் கைகள் நடுங்கியது; உடல் பதறியது. 'ஆண்டவனே... அக்காவுக்கு விபரீதமாக எதுவும் நடந்துடக் கூடாது; அவங்களை காப்பாத்து. ப்ளீஸ்...' மனசு வேண்டிக் கொண்டது.''என்னாச்சு மேடம்?'' மதியழகி கேட்டாள்.''அக்கா பிழைக்கிறது கஷ்டம்ன்னு சொல்றாங்க மதி,'' முட்டிய கண்ணீரும், விசும்பும் குரலுமாக அவளுக்கு பதில் கூறினேன்.அந்த வினாடியில், பிரபல ஐ.டி., நிறுவன டீம் லீடர் என்பதையும் மறந்து, சாதாரண மனுஷியாக, குலுங்கி குலுங்கி அழுதேன். நான் அழுவதை பார்த்து, எனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்கள் என் அருகே வந்து, கேள்விகள் கேட்க, யாருக்கும் பதில் சொல்லும் நிலைமையில் நான் இல்லை.''மேடம்... ஹெச்.ஓ.டி.,கிட்ட சொல்லிட்டு உடனே புறப்படுங்க; இப்ப இருக்கிற ஹெச்.ஓ.டி.,யே இதே கம்பெனில மாலினி அக்கா, ஹெச்.ஓ.டி.,யாக இருந்தப்போ, அவங்களுக்கு ஜூனியரா இருந்தவர் தானே... ஒருவேளை, அவருக்கும் சேதி தெரிஞ்சு, திருச்சிக்கு புறப்படலாம்,'' என்று சொன்னாள் மதியழகி.டீம் பெண்கள் ஆதரவாக பேசினர்; அவர்கள் பேசியது எல்லாம், என் காதுகளுக்கு கேட்டாலும், மூளைக்குள் ஏறவில்லை.சென்னை ஓ.எம்.ஆரில் இயங்கும் எங்கள் ஐ.டி., கம்பெனி, பன்னாட்டு நிறுவனத்துக்கு சொந்தமானது; இந்நிறுவன சேர்மன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவருக்கு சொந்தமான ஐ.டி., கம்பெனியின் கிளைகள், மும்பை, ஐதராபாத், பெங்களூரு மட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலும் உள்ளன.அதனால், எங்கள் கம்பெனியில் தனி மனித உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட இடமில்லை. விடுமுறை என்பது, இங்கே குதிரைக்கு கொம்பு முளைப்பதைப் போன்று நினைத்துப் பார்க்க முடியாதது. புதிதாக திருமணம் ஆன பெண்கள், கர்ப்பம் தரித்தால், இங்கே வேலையில்லை.ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள பெண்கள், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டாலும், கம்பெனி ஒத்துக் கொள்ளாது.இப்படி தனிமனித சுக, துக்க, விருப்பு, வெறுப்பு உணர்வுகளுக்கோ, நாள், கிழமை, பண்டிகை, திருமணம் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கோ, எங்கள் நிறுவனத்தில் மருந்துக்கு கூட மரியாதை இல்லை.இவ்வளவு ஏன்... டிராபிக் ஜாம், தலைவலி, காய்ச்சல், பெண்களுக்கான மாதாந்திர தொந்தரவு என்று தவிர்க்க இயலாத காரணங்களுக்கு கூட, ஒரு மணி நேரம் பர்மிஷன் போட முடியாது. மீறி, அரைமணி நேரம் தாமதமாக வந்தால், அன்று சம்பளம் கட்! அதற்காக, வீட்டிற்கு போய் விட முடியாது; அதே, 12 மணி நேரம் கட்டாயம் வேலை பார்த்தாக வேண்டும். இதற்கு, 'பனிஷ்மென்ட் ஒர்க் டே' என்று பெயர்.இவ்வளவு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் மத்தியில், இந்நிறுவனத்தில், 'ஷிப்டு'க்கு, 1,000 பேர்கள் வீதம், 2,000 பேர்கள் வேலை செய்ய காரணம், இந்நிறுவனம் தரும் லகர சம்பளம்!இங்கே வேலை பார்க்கும் அத்தனை சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கும் சொந்தமாக வீடு, கார் இருக்கிறது. பொருளாதார ரீதியில் செழிப்பாக இருக்கிறோம்; ஆனால், மனம்... வறண்ட பாலைவனமாக உள்ளது.இப்படிப்பட்ட கம்பெனியில், 'மாலினி அக்காவை பார்க்க வேண்டும்...' என்று விடுமுறை கேட்டால், நிச்சயம் கிடைக்காது. இப்போது என்ன தான் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, 'வாட்ஸ் அப்' பில், 'மாலினி அக்கா இறந்துட்டாங்க...' என்று, தகவல் வந்தது.'அய்யோ... அக்கா...' என்னையும் அறியாமல் அலறினேன். நிறுவன விதிகள் எதுவும் எனக்கு பெரிதாக தெரியவில்லை. இருக்கையை விட்டு எழுந்து, ஹெச்.ஓ.டி., கேபினை நோக்கி, ஓட்டமும், நடையுமாக சென்றேன்.கதவை திறந்து உள்ளே நுழைந்த போது, ஹெச்.ஓ.டி., கண்களும் கலங்கி இருந்தன. சேதி, அவருக்கும் இப்போது தான் வந்திருக்கிறது என்பதை, யூகிக்க முடிந்தது.''சொல்லுங்க சுஹாசினி...''''நான் திருச்சிக்கு போகணும் சார்... ரெண்டு நாள் லீவு வேணும்; இல்லன்னா ஒரு நாளாவது...''நான் கூறியதை கேட்டு, விரக்தியாய் சிரித்து, ''எனக்கும் தான் திருச்சிக்கு போகணும்; வாய் விட்டு அழக்கூட முடியாத நிலையில உட்கார்ந்திருக்கேன்; நிலைமைய புரிஞ்சுக்கங்க,'' என்றார்.''சார்... அப்போ திருச்சிக்கு நாம போக வாய்ப்பே இல்லையா...'' என்று கலக்கத்துடன் கேட்டேன்.''ஜீரோ பர்சென்ட் கூட இல்ல; அக்காவோட ஆத்மா, சாந்தி அடையறதுக்காக, கடவுளிடம் வேண்டறதைத் தவிர, வேறு வழி இல்ல,'' என்றார்.அவரிடம் ஏதும் சொல்லாமல், விருட்டென்று எழுந்து, ஓய்வு அறையை நோக்கி நடந்தேன்.நல்ல வேளையாக, ஓய்வு அறைக்குள் யாரும் இல்லை. அங்கிருந்த சேரில், கண்களை மூடி அமர்ந்தேன். கண்ணீர் என் கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது. மூடிய என் விழிகளுக்குள், சிரித்த முகமும், துறுதுறுப்பான, 48 வயது மாலினி அக்கா தோன்றி, மறைந்தாள்.மாலினி அக்கா, அற்புதமான, அசாதாரணமான மனுஷி; உற்சாக ஊற்று; பெண்களுக்கு ரோல்மாடல்; ஏழு ஆண்டுகளுக்கு முன், இந்நிறுவனத்தில் நான் வேலைக்கு சேர்ந்த போது, மாலினி அக்கா தான் எனக்கு ஹெச்.ஓ.டி., அப்போது, அவளுக்கு, 40 வயது; இப்போது இருக்கும் ஹெச்.ஓ.டி., என் டீம் லீடர்; பெங்களூரில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் சுதாகர், மற்றும் தோழி சுதா எல்லாரும் ஒரே டீம். எங்கள் எல்லாருக்கும் அலுவலக ரீதியிலும், தனிப்பட்ட முறையிலும், மாலினி அக்கா தான் தலைவி.நாங்கள் எல்லாம், 12 மணி நேரம் வேலைப் பார்க்க மூக்கால் அழும் போது, அசால்ட்டாக, 20 மணி நேரம் வேலை பார்ப்பாள் மாலினி அக்கா. தூங்கும் சில மணி நேரம் தவிர, அலுவலகமே கதி என்று இருக்கும் மாலினி அக்கா, திருமணம் செய்து கொள்ளவில்லை.அவளின் கடுமையான உழைப்பை பார்த்த எங்கள் அமெரிக்க முதலாளி, சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் வழங்கினார். ஆனால், அக்கா, பதவி உயர்வை மறுத்து, ஹெச்.ஓ.டி., பொறுப்பே போதும் என்று கூறி விட்டாள்.சென்னை காரப்பாக்கத்தில் சொந்தமாக வீடு கட்டி, கிரஹபிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்திருந்தாள். வீட்டை சுற்றிப் பார்த்த நாங்கள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தோம். அவ்வளவு பெரிய வீட்டில் சமையலறையே இல்லை. அது குறித்து கேட்ட போது, 'என் ஒருத்திக்காக சமையலறையா... அதையும் நானே சமைக்கணுமா... நேரம், பணம், எனெர்ஜி எல்லாமே வேஸ்ட்! ஓ.எம்.ஆர்.,ல இப்போ எத்தனையோ நல்ல ஓட்டல்கள் இருக்கு. காசை குடுத்து, விரும்பியத சாப்பிட்டு போறதை விட்டு, சமையல் செய்துட்டு இருக்க சொல்றீங்களா...' என்றாள்.மூன்று வேளையும் ஓட்டலில் இருந்து தான் வரவழைத்து சாப்பிடுவாள். ஆனால், அதுவே அவளுக்கு வினையாக போயிற்று. ஒரு முறை அக்காவுக்கு மாரடைப்பு வர, 'ஓட்டல் சாப்பாடு கூடவே கூடாது...' என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் டாக்டர். அத்துடன், ஓய்வு இல்லாமல், உழைப்பதையும் குறைக்கச் சொன்னார்.அச்சமயம் தான், தடாலடியாக அப்படியொரு முடிவை எடுத்தாள் அக்கா. 18 ஆண்டுகளாக பார்த்து வந்த வேலையை, ராஜினாமா செய்ததுடன், காரப்பாக்கம் வீட்டை விற்று, ஸ்ரீரங்கம் அருகே தன் சொந்தக் கிராமத்துக்கே சென்று விட்டாள்.தான் சம்பாதித்த பணத்தை எல்லாம், முதலீடாக போட்டு, காவிரி படுகையில், 10 ஏக்கர் நிலம் வாங்கி, இயற்கை விவசாயத்தில், மும்முரமாக இறங்கி விட்டாள். அவளின் அறிவும், நிர்வாகத் திறனும் சேர்ந்து, ஐந்தே ஆண்டுகளில் தனிப்பெறும் நிறுவனமாக, 'நேச்சுரல் அக்ரி'யை வளர்த்துள்ளாள்.அவளின் நிலத்தில் விளைந்த, கேழ்வரகு, தினை, சாமை மற்றும் கம்பு போன்ற சிறு தானியங்கள் தற்போது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. பெரும்பாலான ஐ.டி.நிறுவனங்களின் கேன்டீனில், சமைக்கப்படும் காய்கறிகள், பருப்பு உள்ளிட்ட அத்தனைப் பொருட்களும், மாலினி அக்காவின் வயல்களிலும், தோட்டத்திலும் விளைந்தவை தான்.மத்திய மாநில அரசுகள், சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள் வழங்கி, அவளை கவுரவித்தன.'ஐ.டி.,தொழில், பொருளாதார தன்னிறைவைக் கொடுத்திருக்கு; ஆனால், உடல் ஆரோக்கியத்தை உறிஞ்சுடுச்சு. அதனால், ஐ.டி., நிறுவனங்களில் வேலைப் பார்ப்போர் அனைவருமே, 40 வயதுக்கு மேல் இயற்கை விவசாயத்துக்குத் திரும்பணும்...' என்ற அவளின் பேச்சை தமிழ், ஆங்கில நாளேடுகள், 'கவர் ஸ்டோரி'யாக வெளியிட்டன.அப்படிப்பட்ட அக்கா தான், இன்று பிணமாகக் கிடக்கிறாள். அவளின் முகத்தை கடைசியாக பார்ப்பதற்கு தவியாய்த் தவிக்கிறேன். ஆனால், விதிமுறை என்ற இரும்புச் சங்கிலியைப் போட்டு கால்களை கட்டி வைத்துள்ளது நிறுவனம்.துக்கத்திலும், துயரத்திலும் சோர்ந்து அமர்ந்திருந்த போது, என் தோளை, ஒரு கரம் தொட்டு அழைத்தது.''மேடம்...''கண்விழித்துப் பார்த்தேன்; மதியழகி தான் நின்றிருந்தாள்.''சொல்லு மதி...''''மாலினி மேடம் இறுதி சடங்குக்கு, நம்ம அலுவலகத்திலிருந்து ஐந்து பஸ் போகுதாம்; விருப்பமுள்ளோர் உடனே கிளம்பலாம்ன்னு சர்க்குலர் மெயில் அனுப்பி இருக்காரு எம்.டி.,'' என்றாள் மதியழகி.ஆச்சர்யத்தில் வாய் பிளந்த நான், ''எப்படி மதி...'' என்றேன்.''தெரியல மேடம்... அதுமட்டுமில்ல, மாலினி மேடம் வேலை பார்த்த இந்த அலுவலகத்துக்கு மட்டும், சம்பளத்தோட இரண்டு நாள் லீவாம்,''என்றாள்.மதியழகி சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. உடனே, ஹெச்.ஓ.டி., கேபினுக்கு ஓடினேன். அவர் என்னை பார்த்ததும், துக்கத்தையும் மீறி புன்முறுவலித்தார்.''சார்... சர்க்குலர் நிஜமா...''''ஆமா...''''எப்படிங்க சார்...''''நம் அமெரிக்க சேர்மன், மாலினி அக்காவோட வாடிக்கையாளராம்; எனக்கே இப்பதான் தெரிஞ்சது. நம் முதலாளி, அமெரிக்காவுல, கேழ்வரகு கஞ்சி குடிக்கறாராம்; நம்பவே முடியல இல்லே... அது மட்டுமல்ல, மாலினி அக்காவோட இறுதி சடங்குல கலந்துக்க, அமெரிக்காவிலிருந்து முதலாளி வர்றாராம். நம் நாட்டு சிறுதானியம், எவ்வளவு பெரிய அதிசயத்தை செய்து இருக்கு பார்த்தியா...'' என, ஹெச்.ஓ.டி., சொல்லிக் கொண்டே போக, நான், அந்தக் துக்க நேரத்திலும் வானத்துக்கும், பூமிக்குமாய் எகிறிக் குதித்தேன்.அனிஷ்காஇயற்பெயர்: ஆர்.இதயஜோதி, சொந்த ஊர்: திருச்சி, வயது: 41கல்வித்தகுதி: எம்.காம்., எம்.பில்., எம்.பி.ஏ.,பணி: கல்லூரி பேராசிரியர்.